September

கர்த்தரே அவர்களுடைய சுதந்தரம்

(வேதபகுதி: உபாகமம் 18:1-8)

“அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்” (வச. 2).

இஸ்ரயேலர்கள் ஒரு நாடாக கர்த்தருக்கு “ஆசாரிய ராஜ்யமாகவும், பரிசுத்த ஜாதியாகவும்” இருக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது (யாத். 19:6). ஆனால் அவர்கள் தேவனுடன் நெருங்கிச் சேருவதற்குப் பயந்து, மோசே எங்களுக்கு ஒரு மஸ்தியஸ்தராக இருக்க வேண்டும் என்று கோரினர் (யாத். 20:19). எனவே தேவன் அவர்களுக்கு ஓரு குறிப்பிட்ட கோத்திரத்தார் வாயிலாக ஒரு தனித்துவமான ஆசாரியத்துவத்தை ஏற்படுத்தினார். இத்தகைய ஆசாரியத்துவப் பாத்திரத்தை நிறைவேற்றும்படி தேவன் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆரோனையும் அவரது மகன்களையும் தேர்ந்தெடுத்தார் (யாத். 28:1). லேவியும், சிமியோனும் தங்கள் சகோதரியாகிய தீனாளின் நிமித்தமாக, உணர்ச்சிமிக்க வகையில் செயல்பட்டு, தேவனுடைய தீர்ப்புக்கு ஆளாயினர். இவர்களுடைய கொடிய செயலின் காரணமாக இஸ்ரயேலில் இவ்விரண்டு கோத்திரமும் சிதறடிக்கப்படும் என்று யாக்கோபு முன்னறிவித்தார் (ஆதி. 49:5-7). ஆயினும் தேவனுடைய கிருபையினாலே லேவி கோத்திரத்தாரை தம்முடைய பணிக்காகத் தெரிந்துகொண்டார்.

எகிப்தில் தேவன் வழங்கிய பத்தாவது தண்டனை ஒவ்வொரு வீட்டிலும் முதலில் பிறந்தவர்களுக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. ஆனால், பஸ்கா ஆட்டுக்குட்டியின் மரணம் இஸ்ரயேலரில் முதல் பிள்ளைகளைக் காப்பாற்றியது. ஆகவே தேவன் இஸ்ரவேல் புத்திரரின் முதற்பேறானவர்களுக்குப் பதிலாக லேவியர்களை எடுத்து, அவர்களை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுத்து, அவர்களைக் ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியஞ்செய்யும் ஊழியக்காரர்களாக்கினார் (எண். 3:6-13,44-51; 8:16-19).

பின்னர் இரக்கமுள்ள தேவன் சிதறிப்போன இந்த லேவியருக்கும் ஒரு சுதந்தரத்தை அளித்தார் அது நிலச் சுதந்தரம் அல்ல, அதைக் காட்டிலும் சிறப்பாக தம்மையே அவர்களுக்குச் சுதந்தரமாக வழங்கினார் (வச. 1,2). லேவியர்களுக்கான தேவைகள் சந்திக்கப்பட பூமிக்குரிய நிலங்கள் இல்லாவிட்டாலும், கர்த்தருக்காகச் செலுத்தும்படி பலிகளும் காணிக்கைகளும் கொண்டுவரப்பட்டபோது, அவர்களுக்கு வழங்குவதற்காக அதில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது. ஆம், கர்த்தரின் பங்கை உண்ணும் பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது. ஏனென்றால், கர்த்தருடைய நாமத்தில் நின்று ஊழியஞ்செய்யும்படி கர்த்தரே அவர்களை தம்முடைய இறையாண்மையினாலும் கிருபையினாலும் தெரிந்தெடுத்தார் (வ. 5).

“பலிபீடத்தை அடுத்துப் பணி செய்கிறவர்களுக்குப் பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?” என்று கூறுகிற பவுல், அடுத்ததாக, “அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாக வேண்டும் கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்” (1 கொரி. 9:13,14) என்று இன்றைக்கு நற்செய்திப் பணியில் பாடுபடுகிறவர்களைக் குறித்த கரிசனையை வெளிப்படுத்துகிறார். உழுகிறவர்களும் போரடிக்கிறவர்களும் விளைச்சலில் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு செய்கிறதுபோல, கர்த்தருடைய பணியாளர்களும் நம்பிக்கையோடு பணியாற்றும்படி, அவர்கள் நம்பிக்கை பொய்த்துப்போகாதபடி அவர்களை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பொருளாதார உதவிகளினால் தாங்குவோம்.

நம்முடைய தேவன் எவ்வளவு கருணையும் இரக்கமும் உள்ளவர்! கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்புக்காக விசுவாசத்தினாலே தேவனுடைய வல்லமையால் காக்கப்படுகிற நமக்கு அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது (1 பேதுரு 1:4,5). இந்த நம்பிக்கையோடு ஆசாரியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து கர்த்தருடைய பணியில் செயல்படுவோம்.