March

அன்பினால் கிரியை செய்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 20:1-26)

“என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர் களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (வச. 6).

இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலையாக்கிய தேவனின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே இந்தப் பிரமாணங்கள் (வச. 2). எகிப்தின் தெய்வங்கள், அவற்றின் சிலை உருவங்கள், வணங்கும் முறை, அவர்களுடைய கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள் யாவும் இஸ்ரயேல் மக்களால் அறியப்பட்ட ஒன்று. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழிபாட்டு முறை, வாழ்க்கை முறைக்கான தேவனின் எதிர்பார்ப்புகளாக இந்தக் கற்பனைகள் விளங்குகின்றன. மேலும் வாக்குத்தத்த பூமியில் அந்நியர்கள் நடுவில் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரமாகவும் இந்தப் பத்துக் கட்டளைகளும் அதைச் சார்ந்த பிரமாணங்களும் விளங்குகின்றன.

பத்துக் கற்பனைகள் அனைத்தும் அன்பு என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கியிருக்கிறது (மத். 22:37-40; ரோமர் 13:8-10; கலா. 5:14). இதை பரலோக தேவனிடம் அன்புகூருவதன் மூலமாகவும், உலக மனிதரிடம் அன்புகூருதல் வாயிலாகவும் நிறைவேற்ற வேண்டும். தேவனுக்காற்றும் கடமைகளும், மனிதருக்காற்றும் கடமைகளும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. ஒன்று இருந்து ஒன்று இல்லாவிட்டால் அது மதிப்பற்றது. ஒரு விசுவாசி தனிப்பட்ட முறையில் தேவனிடம் காட்டும் பக்தி சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. இதுவே தேவன் நம்மிடம் எதிர்பாக்கும் வாழ்க்கை முறையாக இருக்கிறது.

இந்தக் கற்பனைகளில் தேவனின் பரிசுத்தமும் நீதியும் இழையோடுகின்றன. ஆயினும் இவற்றின் ஊடாக அவருடைய இரக்கத்தின் ஐசுவரியம் பொன்னாக மின்னுகிறது. இவற்றைக் கைக்கொள்கிறவர்களிடத்தில் ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கத்தைக் காண்பிக்கிறார், அவர்களை ஆசீர்வதிக்கிறார். இந்தப் பிரமாணங்களைப் பெற்ற இஸ்ரயேலர்களைக் காட்டிலும் நாம் பேறு பெற்றவர்கள். நாம் தேவனிடத்தில், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, கிருபையால் உள்ளான, நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள முடியும்.

சிலர் தேவகோபம், தேவதண்டனை ஆகியவற்றுக்குப் பயந்து இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ள முயலுகிறார்கள் (வச. 18-21). வேறு சிலர் அவர் அருளுகிற ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்புகிறார்கள் (வச. 6). ஆனால் அன்பே நம்முடைய கீழ்ப்படிதலுக்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்வதில் தவறு நேர்ந்தால்?! இதிலிருந்து மீளுவதற்கான தேவ ஏற்பாடே பலி பீடம் (வச. 24-26). புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் நம்முடைய பாவக் கறைகளைக் கழுவிக்கொள்வதற்கான இடமே கிறிஸ்துவின் செங்குருதி. நாம் பாவங்களை அறிக்கையிட்டால் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பதற்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9). நாம் நியாயப்பிரமாணத்தின் கீழாக அல்ல, கிருபைக்குக் கீழாக இருக்கிறோம். நியாயப்பிரமாணம் அதை நிறைவேற்றுவதற்கான வலிமையை அவர்களுக்கு வழங்கவில்லை. இந்தக் கிருபையோ நாம் அன்புடன் சத்தியத்தைக் கைக்கொள்வதற்குப் போதித்து உதவிசெய்கிறது. கிருபையைப் பற்றிக்கொள்வோமாக.