January

புத்தாண்டின் நுழைவாயில்

“உலகத்தோற்றமுதல் தேவனுக்கு தம்முடைய கிரியையெல்லாம் தெரிந்திருக்கிறது” (அப். 15:18).

1939 -ஆம் ஆண்டின் இறுதியில் ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்ததன் வாயிலாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. முழு ஐரோப்பாவையும் போர் மேகம் சூழ்ந்தது, மக்கள் அச்சத்திலும் திகிலிலும் இருந்தார்கள். எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்ற சூழல் காணப்பட்டது. இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ் நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக ஆண்டு இறுதிச் செய்தி வழங்க வேண்டிய தருணம். எந்த வகையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை அளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். இச்சமயத்தில் அவருடைய பதிமூன்று வயது மகள் எலிசபெத் ஒரு பாடலைக் கொடுத்து இதை செய்தியில் வாசிக்கும்படி கேட்டுக்கொண்டாள். “தேவன் அறிந்திருக்கிறார்” என்ற தலைப்பில் மின்னி லூயிஸ் ஹாஸ்கின்ஸ் என்பார் எழுதிய பாடல் அது. மன்னர் உரையாற்றிய பின்னர் அப்பாடல் “வருஷத்தின் நுழைவாயில்” என்ற பெயரில் பிரபலமாயிற்று. அவர் தன்னுடைய சொற்பொழிவில் “இதோ புத்தாண்டு விரையில் வர இருக்கிறது, இதன் முடிவு என்னவாயிருக்கும் என்று நமக்குத் தெரியாது” என்று தொடங்கி, கடைசியாக இப்பாடலோடு நிறைவு செய்தார்:

வருஷத்தின் வாயிலண்டையில் நிற்கிற மனிதனைப் பார்த்து,
“நான் பாதை தெரியாத இருளுக்குள் கால் பதித்துச் செல்ல
எனக்கு ஒரு தீவட்டியைக் கொடு” எனக்கேட்டேன்.
அவன் மறுமொழியாக,
“தேவ கரத்தை உன் கரத்தால் பிடித்துக்கொண்டு முன்னேறிச் செல்.
இது தீவட்டியைக் காட்டிலும், நல்லதும்,
உன் சுயகவனத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது” என்றான்.
ஆகவே, “நான் தேவகரத்தைப் பற்றிக்கொண்டு முன்னேறினேன்,
மகிழ்ச்சியுடன் இருளில் அடியெடுத்து வைத்தேன்,
அவர் என்னை பசுமை நிறைந்த மலைகளுக்கும்,
சூரிய உதயத்தின் வெளிச்சத்துக்கும் அழைத்துச் சென்றார்”

மக்களிடத்தில் இந்தப் பாடல் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, போர் முடியும் வரை நாட்டின் மேல் ஓர் அமைதியான சூழலை உண்டாக்கியது.

ஆம், கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நித்தியம் முதல் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவரே அறிவார். புத்தாண்டின் வாயிலண்டை வந்திருக்கிற நாமும், நம்பிக்கையுடன் அவரது கரங்களைப் பற்றிக்கொள்வோம்.

Brian Reynold, The Lord is Near 2022 ஜனவரி முதல் தேதிக்கான கட்டுரையைத் தழுவியது.