சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 7
மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும்
நாம் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத தேவை கீழ்ப்படிதலாகும். இந்த அத்தியாயத்திலும் நமது நூலின் தலைப்பை மையமாகக் கொண்டே ஆராய்வோமாக. இம் மூன்று பதங்களின் மூலம் ஆண்டவர் நமக்கு மற்றொரு முக்கியமான செய்தியை அறிவிக்க விரும்புகின்றார். ஆரம்பத்தில் பல காரியங்கள் நமக்கு விளங்குவதில்லை; ஆயினும் சில நாட்களோ, மாதங்களோ அல்லது வருடங்களோ சென்றபின் அவை நன்கு விளங்கும்; இதுகாறும் இந் நூலின் மூலப் பொருளும், குறிக்கோளும் நமக்கு பூரணமாய் விளங்காதிருப்பினும் சீக்கிரத்தில் அவை நன்கு புலனாகும் என்பது திண்ணம்.
“தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான்’ என்னும் வார்த்தைகள் இரட்சிப்படைந்தோருக்கும், இரட்சிப்படையாதோருக்கும் பொருத்தமான ஏற்ற செய்தியையுடையனவாயுள்ளன. கிறிஸ்து இல்லாதவர்களாக நாம் வாழும் காலமெல்லாம் நம்முடைய பேச்சும், செய்கையும் வீண் என்றும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதென்றும் நாமறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதோர் அறிஞர்களாயும், சிறந்த கலைஞர்களாயும் இருப்பினும், அவர்கள் மரிக்குந் தருவாயிலாகிலும் இப்பேருண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெர்பட் ஸ்பென்சர் என்ற பிரபல ஆங்கில தத்துவ சாஸ்திரி, தம் காலமெல்லாம் தேவனையும், திருமறையையும் ஏளனம் பண்ணி எள்ளி நகையாடி, தன்னைப் பெரிய நிபுணனாகக் கருதி வந்தார். அவர் மரிப்பதற்குச் சில நாட்களுக்கு முன் அவரைச் சேர்ந்தவர்கள் அவரிடம் வந்து, அவரது இறுதி வேண்டுகோள் யாது என்றும், அவரது கல்லறையில் பொறிக்க விரும்பும் வாசகம் யாது என்றும் கேட்டபொழுது அவர் பிரதியுத்தரமாக, “மிகவும் மகிழ்ச்சியற்ற துர்ப்பாக்கியன்” என்று எழுதுமாறு கூறினார். ஆம், இன்னும் அவரது கல்லறையில் இவ் வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். அவரது அறிவும், ஆற்றலும், செல்வமும், செல்வாக்கும் அவருக்கு எவ்வித நன்மையையும் அளிக்கவில்லை. அவர் தனது பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் மரித்ததே இதற்குக் காரணமாகும். நீரும் இவ்வாறு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவராய் மரிப்பீராகில் உமது வாழ்க்கையும் வீணானதே. இங்கிருந்து நீர் ஒன்றையும் கொண்டு போவதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தமது ஜீவனை நமக்களிக்கும்படியாக மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். அவர் மரணத்தை ஜெயித்ததன் மூலம் இதை நிறைவேற்றியுள்ளார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் இதயங்களில் ஏற்றுக்கொள்ளும்போது, அவரது ஜீவனைப் பெறுகின்றோம். அவர் அருளும் புதிய ஜீவனைப் பெறுவதே மறுபிறப்பு என்றழைக்கப்படும். விசுவாசத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, எத்துணை மேலான பாக்கியத்தை அடைகின்றோமென்பதை அறிந்துகொள்ள நித்தியம் தேவைப்படும். அவர் நமது பாவங்களை மன்னிப்பதோடல்லாது, சுதந்திரத்திற்கெல்லாம் நாம் பங்காளிகளாக வேண்டுமெனவும் விரும்புகின்றார். தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கென இவற்றையெல்லாம் உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்தே ஆயத்தம் செய்து வந்துள்ளார்.
சில மேலை நாடுகளில் திருமண வயதடையும் பெண்கள், பிறந்தகம் விட்டுப் புக்ககம் போகு முன்பாக, “நம்பிக்கைப் பெட்டி” (Hope Chest) என்ற ஒரு பெரிய பேழை வைத்திருப்பார்கள். திருமணமாவதற்கு அநேக வருடங்களிலிருக்கும் போதே, பெண்ணானவள் குழந்தைகளுக்குரிய சட்டை, துணிமணிகள், காலுறைகள் முதலியவற்றைத் தயாரிப்பாள். மேலும் தனது எதிர்கால இல்லத்திற்குத் தேவையான பல
தட்டு முட்டுகளையும் சேகரித்து வெகு இரகசியமாக அப்பேழையினுள் சேர்த்து வைப்பாள். வீட்டிலுள்ள ஏனையோருக்கு அப்பெட்டியினுள் இருக்கும் பொருட்களைப்பற்றி ஒன்றுந் தெரியாது. அந்தப் பெண்ணுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். அவள் மிகுந்த நம்பிக்கையோடும், ஆவலோடும் எதிர்கால வாழ்விற்குத் தேவையானவைகளை எதிர்பார்த்துச் சேகரித்துக்கொண்டேயிருப்பாள். இந்த எடுத்துக் காட்டிலிருந்து நாம் ஒரு முக்கியமான ஆவிக்குரிய சத்தியத்தை அறிந்து கொள்ளலாம். அதாவது, இவ்வுலகைச் சிருஷ்டிப்பதற்கு முன்பிருந்தே நமது கர்த்தரும் நமது நிலைமையை அறிந்துள்ளார். நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நமக்காக ஒரு பரலோக வாசஸ்தலத்தை உருவாக்க திட்டமிட்டு, அதை நிறைவேற்றத் துவங்கினார். நம்முடைய குறைகள், பலவீனங்கள், தோல்விகளையெல்லாம் அவர் அறிந்திருந்தும், அவர் நமக்காகத் திட்டமிட்டு, நம்பிக்கையுடன் ஆயத்தம் செய்ய ஆரம்பித்தார். நாம் இவ்வுலகிலிருக்கும்பொழுதே, அந்த மேலான இடத்தைப் பெற்று அநுபவிப்பதற்கென்று நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கின்றார். “தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இதயத்தில் தோன்றவுமில்லை”. (1 கொரிந்தியர் 2:9). இந்த மேலான, ஆவிக்குரிய பாக்கியங்களை தேவன் நமக்கென்று ஆயத்தம் செய்துள்ளார். அவற்றை நாம் பெற்று அநுபவிக்காதபடி தடை செய்யச் சாத்தான் எவ்வளவோ, விடா முயற்சியாக, வகை தேடிச் சுற்றித் திரிகிறான். ஆனால் நம்முடைய ஆண்டவரும் விரோதியால் நமக்கு நேரிடக்கூடிய சோதனைகளையும் தாக்குதல்களையும் முன்னரே அறிந்துள்ளமையால், இத் தாக்குதல்களினின்று விடுதலையும், வெற்றியும் பெறுவதற்குத் தேவையான ஆயத்தங்களையும், ஏதுக்களையும் ஏற்கனவே ஆயத்தம் செய்துள்ளார்.
திருடர் நடுவே வாழ்வோர், தங்கள் பொருட்களைப் பாதுகாக்க மிகுந்த எச்சரிப்புடன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். பலத்த இரும்புக் கம்பிகளும், கனத்த கதவுகளும், பெரிய பூட்டுகளுமிட்டுத் தங்கள் வீடுகளைப் பாதுகாக்க வேண்டும். திருடரையும் அவர்களது தந்திரங்களையும் நன்கறிந்திருப்போர், அவர்களைப் பிடிப்பதற்கோ, தடுப்பதற்கோ தக்க உபாயங்களைத் தேடிக் கொள்வர். ஆனால் ஆவிக்குரிய திருடனாகிய சாத்தான், இவ்வுலகத் திருடர்களை விட மிகவும் தந்திரமும், திறமையும், வலிமையும் உடையவன். அவனை மனுஷீக முறைகளாலும், ஆயத்தங்களாலும் மேற்கொள்ள முடியாது. சாத்தானை மேற்கொள்ளுவதற்கு, ஆவிக்குரிய ஆயத்தங்களே, இந்த ஆவிக்குரிய போராட்டத்தின் தன்மையையும், அதற்குத் தேவையான ஆயத்தங்களையும் நமக்குக் காண்பிக்கும்படியாகவே தாவீதினுடைய வாழ்க்கைச் சித்திரம் வேதாகமத்தில் வரையப்பட்டுள்ளது. தாவீது இரு வகையான நஷ்டங்களையடைந்திருந்தான். முதலாவது, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு: இரண்டாவதாக, நாடு முழுவதிற்கும் ஏற்பட்ட பொதுவான இழப்பு. தாவீதுக்கு நேர்ந்த தனிப்பட்ட நஷ்டமெல்லாம் அவனுடைய சொந்த பிழையினாலோ, கவலையீனத்தினாலோ ஏற்பட்டவைகளே. ஆகிலும் அவன் எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றே தேவன் விரும்பினார். மேலும், அவனது மதியீனத்தினாலும், தோல்வியினாலும் விளைந்த தேசீய நஷ்டத்தையும் அவன் திருப்பிக் கொள்ள வேண்டுமென்றும் தேவன் விரும்பினார்.
தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குத் தந்த செழிப்பான தேசத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்வரலாறு ஆதியாகமம் 12- ஆம் அதிகாரத்தில் ஆரம்பிக்கின்றது. ஆபிரகாம் கல்தேயா நாட்டிலுள்ள “ஊர்” என்ற பட்டணத்தில் வாழ்ந்து வந்தான். கல்தேயர் நாடு, அக்காலத்தில் மிகவும் நாகரீகமடைந்திருந்தது என்று புதைபொருள் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆபிரகாம் ஏராளமான பொன்னும், வெள்ளியும், வேலைக்காரரும், திரளான ஆடு மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களும், நிலம், வீடு முதலான சொத்துக்களுமுடைய செல்வந்தனாயிருந்தாலும் ஆவிக்குரிய ஜீவியத்திலோ ஒன்றுமில்லாத தரித்திரனாயிருந்தான். அக்காலத்தில் அவனுக்குத் தேவனைத் தெரியாது; அவரை வணங்கவுமில்லை, பின்பற்றவுமில்லை. ஆனால் ஒரு நாளில் திடீரென்று கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, “ஆபிராமே, நீ உன் நாட்டையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப்போ” என்று வெகு தெளிவாகவும், திட்டமாகவும் கூறினார். ஆபிரகாம் அதை விசுவாசித்தான். உடனே ஆபிரகாம் தன் வீட்டிற்கு வந்து, தன் மனைவியையும், வேலைக்காரரையும் அழைத்து, கர்த்தர் தன்னுடனே பேசின காரியங்களைக்கூறி, அவர்களை ஆயத்தம் பண்ணும்படி சொன்னான். சாராளும் மற்றும் அவனது சுற்றத்தாரும், நண்பர்களும் அவனை எங்கே போகிறீர்கள் என்று விசாரித்திருக்கலாம். அதற்கு ஆபிரகாம்; ‘நான் எங்கு போகிறேன் என்று எனக்குத் தெரியாது. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவர் காண்பிக்கும் தேசத்துக்குச்செல்கின்றேன்’ என்று தான் பதில் கூறியிருப்பான். இதனிமித்தம் அவர்கள் ஆபிரகாமைப் புத்தியற்றவன் என்றும், பித்தன் என்றும் எண்ணியிருப்பர். தான் தேவனுடைய சத்தத்தைக் கேட்டதைக் குறித்து ஆபிரகாமுக்கு யாதொரு சந்தேகமுமில்லாததால், அவன் தடையின்றி தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் ஆபிரகாமை நோக்கி, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன்பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாயிருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன். உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்ற மகத்தான வாக்குத்தத்தத்தைத் தந்தருளினார் (ஆதி. 12:2, 3). இவ்வார்த்தைகளில், தேவன் ஆபிரகாமுக்கருளியுள்ள ஏழு வகையான வாக்குத்தத்தங்கள் பொதிந்து கிடப்பதைக் காணலாம்.
ஒரு மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது அவர் அவனை ஆசீர்வதிக்கிறார். தேவன் ஆபிரகாமுக்கருளிச் செய்துள்ள வாக்குத்தத்தங்களைவிட மேலான வாக்குத்தத்தங்கள் வேறு உண்டோ? நம்மில் யாராகிலும் அதனைப் பெற்றுள்ளோமா? இல்லை என்றே சொல்லக்கூடும். இவ்வளவு உன்னதமான ஆசீர்வாதங்களைத் தேவன் ஆபிரகாமுக்களித்திருந்தபோதிலும், அவன் பின் சந்ததியாரோ அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அதன்பொருளை அறிந்துகொள்ளக்
கூடியவர்களாயினர். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்தை விட்டு வெளியேறி, கானானுக்குப் பிரயாணப்படும்போது, அவர்களுக்குச் சத்துருக்கள் யார் என்பதை மோசேயின் மூலம் தேவன் அவர்களுக்குக் கூறியிருந்தார். கானானிலுள்ள அந்த ஏழு ஜாதியாரும் இந்த ஏழு ஆசீர் வாதங்களுக்கும் முரண்பட்டவர்களாயிருந்தனர் எனக் காணலாம் (உபா. 7:1). சுமார் நாநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே தேவன் கானானை ஆபிரகாமுக்கும், அவன் சந்ததிக்கும் சுதந்தரமாகக் கொடுத்திருந்தார். தேவன் அதை மறந்துபோகவில்லை. அவர், தாம் சொல்லியவற்றை நிறைவேற்றி முடிக்கும் பொய்யுரையாத தேவன். ஆயினும் அவர் அநேக நூற்றாண்டுகள் தமது ஜனத்தை அந்த சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி ஆயத்தம் செய்ய வேண்டியதாயிற்று. அந்த ஏழு ஜாதிகளும் முழுவதுமாய் தேசத்தைவிட்டுத் துரத்தப்படுவார்கள் என்றும் அவர் அவர்களிடம் கூறியிருந்தார் (உபா. 7). ஏனெனில் அதில் குடியிருந்த மக்கள் சகல விதமான பாவங்களுக்கும், அசுத்தத்திற்கும் அடிமைப்பட்டவர்களாயிருந்ததினிமித்தம் தேசம் அவர்களால் தீட்டுப்பட்டுப்போயிருந்தது. அவர்களது பயங்கரமும், வெட்கக்கேடானதுமான பாவங்களின் பட்டியலை லேவியராகமம்18-ம் அத்தியாயத்தில் காணலாம். நானூறு ஆண்டுகளுக்கு மேலாக தேவன், அவர்கள் மனந் திரும்பமாட்டார்களோ என்று பொறுமையாய்க் காத்திருந்தார். ஆனால் அவர்களோ மனந்திரும்பாது, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்திவந்தனர். தேவன் தமது ஜனத்தைக்கொண்டு அவர்களை நியாயந்தீர்க்கும் காலம் வந்தது. தேவன் மோசேயின் மூலம் தம்முடைய ஜனங்களுக்கு அவர்களைப்பற்றிக் கட்டளையிட்டார். “நீங்கள் என் உடன் வேலையாட்களும், சுதந்தரருமாயிருக்கும்படி உங்களைத் தெரிந்துகொண்டேன், இப்போதும் நீங்கள் போய் அந்த பயங்கரமான, பாவமுள்ள ஏழு ஜாதியாரையும் அழித்து, நிர்மூலம் பண்ணுங்கள். அவர்களுக்கு இரங்க வேண்டாம். அவர்களைத் தண்டிக்கும் வேளை வந்தது. அவர்களோடு எவ்விதமான ஒப்பந்தமோ, சமாதான உடன்படிக்கையோ செய்ய வேண்டாம்; அவர்களோடு சம்பந்தம் கலக்கவும், உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுக்காமலும், அவர்கள் குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும் இருங்கள். அவர்கள் விக்கிரகங்களையும், விக்கிரகத்தோப்புகளையும் இடித்துத் தரைமட்டமாக்குங்கள்” என்பதாக வெகு தெளிவான கட்டளைகள் கொடுத்தார். ஆனால் அவர்களோ அதற்கு முற்றிலுமாய்க் கீழ்ப்படியாது போனதே அவர்களது தோல்விக்கு முதற்காரணமாகும்.
பல சந்தர்ப்பங்களில் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்பியும், தவறி விடுகின்றோம். மனுஷீக அன்பு, அனுதாபம், ஈவஇரக்கம் இவைகளினாலோ அல்லது, மனுஷீக ஞானம், ஆசை இவைகள் குறுக்கிடுவதினாலோ நாம் தேவனுக்கு முற்றிலுமாய்க் கீழ்ப்படியாமலிருக்கலாம். இஸ்ரவேலரின் நிலைமையும் இவ்வாறேதானிருந்தது. ஒரு முறை தவறின பின்னும் மேலும், மேலும் பல தவறிழைத்தனர். உதாரணமாக, ஒரு முறை அவர்கள் கானானியரால் வஞ்கிக்கப்பட்டதால் அவர்களைக் கொல்லாமல் உயிரோடே வைக்கவேண்டியதாயிற்று. இதனால் யோசுவா அவர்களைத் தேவனுடைய ஆலயத்துக்கு விறகு வெட்டுகிறவர்களாயும், தண்ணீர் எடுக்கிறவர்களாயும் நியமித்தான் (யோசு. 9:1 – 23). இவ்வாறு அவர்கள் சத்துருக்கள் தங்கள் மத்தியிலிருக்க இடங்கொடுத்தனர். பின்னர் விவாக காரியங்களிலும் தவறி, கடைசியாக கர்த்தருடைய ஜனங்கள் விக்கிரக வழிபாட்டிற்கும், பிறகு வேசித்தனத்திற்கும், மற்றும் பல பாவங்களுக்கும் அடிமைப்பட்டு விட்டனர். இதனிமித்தமே, அவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நாட்டிற்குள் பிரவேசித்த போதிலும் அதன் நன்மைகளை அவர்கள் அனுபவிக்கக் கூடாதிருந்தனர்.
விசுவாசிகளில் அநேகரின் நிலைமையும் இவ்வாறேயுள்ளது. அவர்கள் மறுபடியும் பிறந்து தேவனுடைய வசனத்தை அறிந்தவர்களாயிருந்தாலும் தங்களுடைய அரைகுறையான கீழ்ப்படிதலினாலே தேவன் தங்களுக்கருளியுள்ள ஆசீர்வாதங்களைப் பூரணமாய் அனுபவிப்பதில்லை. விசுவாசிகளில் அனேகர் அவிசுவாசிகளை விவாகம் செய்துகொள்வதால் வாழ்க்கை முழுவதிலும் உபத்திரவங்களை அனுபவித்து வருகின்றனர். அநேக விவாகங்களில் இத்தகையச் சோக இணைப்புகளுக்குப் பெற்றோரே காரணமாயிருக்கின்றார்கள். பெற்றோரின் இல்லற வாழ்க்கையே தோல்வியாயிருக்கும்பொழுது, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வழி காண்பிப்பது எங்ஙனம்? சில ஆண்களும், பெண்களும் தாங்களாகவே தங்கள் வாழ்க்கைக்குத் துணை யைத் தேடிக்கொள்ளும்போது, அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள் எனத்தெரிந்தும், நாளடைவில் அவர்களை இரட்சிக்கப்படும்படி செய்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டு விவாகம் செய்து கொள்கின்றனர். இத்தகைய இணைப்பால் ஒரு ஆத்துமாவை ஆதாயஞ் செய்யலாம் என்றெல்லாம் கருதி, தங்களைத் திருப்தி செய்துகொள்ளுகின்றனர். ஆனால் அவர்கள் நினைத்ததற்கும், எதிர்பார்த்ததற்கும் மாறாக, இரட்சிக்கப்படாதவர், இரட்சிக்கப்பட்ட துணையைத் தமது பக்கமாய் இழுத்து விடுகின்றனர். இதன் முடிவு யாதெனில், பல விசுவாசிகள் தங்கள் ஆயுள் முழுவதும் கண்ணீர் வடித்துக்கொண்டே, வேதனையுடனிருக்கின்றனர். இவ்வாறு தங்கள் பலவீனம், அறியாமை, குருட்டாட்டத்தினால் தங்கள் முழு வாழ்வையும் பாழ்படுத்திக்கொள்கின்றனர்.
பென்யமீன் கோத்திரத்தார் எபூசியரில் சிலரை எருசலேமில் தங்கியிருக்கும்படி விட்டதால் முதலில் அவர்கள் அங்கு அடிமைகளாக இருந்து பிற்காலத்தில் அவர்கள் ஒரு பலத்த ஜாதியாக மாறினர். தாவீதும் அவனுடைய மனிதரும் எருசலேமுக்கு வந்தபொழுது, இந்த எபூசியர் அவர்களைப் பரியாசம் செய்தனர் என்று 2 சாமுவேல் 5 இல் வாசிக்கின்றோம். போர்கள் பலவற்றில் வெற்றி வாகைசூடி வரும் வீரனான தாவீதும், அவனுடைய பராக்கிரமசாலிகளும் எருசலேமுக்கு வந்தபோதிலும், “தாவீது யார்? எங்களில் ஒரு குருடன்கூடத் தாவீதுடன் போரிட்டு ஜெயிப்பானே!” என்று பரியாசம் செய்தனர் (வ 6). தேவனுடைய மனுஷனும் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுமாகிய தாவீதை ஏளனம் பண்ணுமளவிற்கு எபூசியர் வலிமை பெற்றிருந்தனர் ! எனவே இந்த எபூசியரினிமித்தம் இஸ்ரவேல் மக்கள் பெருத்த நஷ்டமடைந்தனர். இஸ்ரவேலர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட, விசேஷித்த ஜனங்களாயிருந்தும், ஆவிக்குரிய ஜீவியத்தில் குருடர்களாயிருந்தனர். தேவனுடைய நோக்கத்தையும், தீர்மானத்தையும் அறிந்து கொள்ளாததாலும், அவனவன் தன்தன் பார்வைக்கு ஏற்றபடி செய்து வந்ததாலும், அவர்கள் தேவனை அறிந்து கொள்ளும் உணர்வையும், அவரது வழிகளைப் புரிந்து கொள்ளும் பகுத்தறிவையும், அவரை ஆராதிக்க வேண்டிய ஆவிக்குரிய முறையையும் இழந்தனர். அவர்களைக் கொண்டு தேவன் தமது நோக்கத்தைப் பூரணமாய் நிறைவேற்ற முடியவில்லை; அவர்களை முழுவதுமாய்ப் பயன்படுத்த இயலவில்லை. இக்காரணங்களினால், இஸ்ரவேல் மக்கள் பிறரால் அடிக்கடி தாக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, இழுக்கடைந்தார்கள்.
விசுவாசிகளாகிய நாமும் பலவகையான நஷ்டங்களை அநுபவிப்பது வருந்தத்தக்கதே! மறுபடியும் பிறவாத பெயர்க்கிறிஸ்தவர்களை நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால், அவர்கள் இன்னமும் இருளின் பிடியில் சிக்கிக்கொண்டு, தாங்களடையும் நஷ்டத்தைப்பற்றிச் சற்றும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறார்கள். இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் ஒரு சிறிது காலம் மிகுந்த சந்தோஷமும், சமாதானமும், வைராக்கியமும், திருமறையை வாசித்தறிவதில் அதிகப் பசிதாகமும் உடையவர்களாயிருந்தனர். ஆனால் இப்பொழுதோ, அவர்கள் இருளிலும், தோல்வியிலும், தவறிலும் இருக்கின்றனர். கோபம், பொறாமை, எரிச்சல், கனியற்ற நிலைமை இவை போன்ற அநேக எபூசிய எதிரிகள் அவர்களுடைய இதயங்களிலும், இல்லங்களிலும் புகுந்துவிட்டன.
பழங்காலத்தில் மாம்சப்பிரகாரமான எபூசியர் எவ்வாறு தாவீதைப் பரிகாசம் செய்தனரோ, அவ்வாறே ஆவிக்குரிய எபூசியர் நமது இதயங்களிலும், இல்லங்களிலும் புகுந்து நம்மையும் பரிகசிப்பர். நமது பரம தாவீதாகிய இயேசு கிறிஸ்துவையும் பரிகசிப்பர். நமது நண்பர்களும், உற்றார் உறவினருங்கூட, “நீ எவ்வகையில் எங்களைவிடச் சிறந்தவன்? தங்களை விசுவாசிகள் என்று சொல்லிக் கொள்ளுகிற அநேகரைப் பார். இரட்சிக்கப்பட்டோம் என்று பெருமை பாராட்டியும், பாவத்திலும், விபசாரத்திலும் ஜீவிப்பதைப் பார்!” என்று இகழுவர். இவ்வாறு நமதாண்டவர் பல சந்தர்ப்பங்களில் நிந்திக்கப்படுகிறார்.
அந்த எபூசியரை விரட்டியடிப்பது தாவீதுக்கு அவ்வளவு எளிதான வேலையாக இருக்கவில்லை. தேவன் தாமே தமது சொந்த வழியின்படியே தாவீதைப் பக்குவப்படுத்த வேண்டியதாயிற்று. முதல் எட்டு ஆண்டுகளாக சவுல், அப்சலோம் ஆகியோரிடமிருந்து வந்த எதிர்ப்புகள், இடர்ப்பாடுகள் மூலமாகத் தாவீதைத் தேவன் ஆயத்தப்படுத்தினார். பின்னர் தாவீதை எபிரோனுக்குக் கொண்டுவந்து, அங்கு ஏழரை ஆண்டு காலமாகப் பயிற்சி அளித்தார். அங்கிருந்து இறுதியாக, சீயோனுக்குக் கொண்டு சென்றார். தாவீது இவ்வித முதிர்ந்த அநுபவம் பெற்ற பின்னரே எபூசியரை முறியடிப்பதற்குத் தகுதியுள்ளவனானான்.முடிவிலே, எபூசியர் சீயோனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு பரலோகத் திட்டம் கொடுக்கப்பட்டது; அதையடுத்து ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது; எடுபட்டுப்போன தேவமகிமை திரும்ப வந்தது.
எபூசியரை விரட்டியடிப்பதற்கு இரு பலத்த போராயுதங்கள் தேவை. ஒன்று சீயோன். மற்றொன்று’எபிரோன்’; இவ்விரு ஆயுதங்கள் மூலம் தாவீது எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொண்டான். இப்பெயர்களின் பொருளை விளங்கிக் கொள்வோமென்றால் இழந்ததைத் திரும்பப் பெறுவதெவ்வாறு என்றும் அறிந்து கொள்ளலாம். ‘எபிரோன், சீயோன் ‘என்னும் போராயுதங்கள் மூலமாகத்தான் நீங்கள் இழந்த எல்லாவற்றையும் மீண்டும் பெற முடியுமென்பதை தேவ நாமத்திற்கு மகிமையுண்டாக நான் உறுதியாகக் கூற முடியும். இவ்விருபெயர்களின் பொருளை பத்தாம், பதினோராம் அத்தியாயங்களில் விரிவாகத் தியானிப்போம்.
முதலாவதாக, நாம் எதை இழந்துள்ளோம்! அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைக் கணித்துப் பார்த்தல் வேண்டும். அதன்பின், இழந்த அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதெவ்வாறு என்றும் அறிந்து கொள்ளவேண்டும். இதற்குச் சான்றாக, யோபின் வாழ்க்கையைச் சற்று பார்ப்போம்.
யோபு மனிதர் முன்னிலையில் பெரியவனும், செல்வந்தனும், உத்தமனும், சன்மார்க்கனுமாயிருந்தான். கர்த்தரும் அவனது சன்மார்க்க ஜீவியத்தைக் குறித்துச் சாட்சிபகர்ந்துள்ளார். ஆயினும், அவன் ஆவிக்குரிய சில காரியங்களில் குருடனாகவும், செவிடனாகவும், குறையுள்ளவனாகவும் காணப்பட்டான். கர்த்தர் அவனை அக்கினியில் புடமிட்டு, உபத்திரவத்தின் குகையில் தெரிந்துகொள்ளும் முன், யோபு தன் உள்ளான நிலைமையை அறியாதிருந்தான். ஒரே நாளில் அவன் தன் பிள்ளைகளெல்லாரையும் இழக்கக் கொடுத்தான். அதன்பின், அவனுடைய வீடுகள், கட்டடங்கள் எல்லாம் அழிந்தன; கடைசியாக அவனுடைய ஆடுமாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டது. பெரிதும், பயங்கரமுமான நஷ்டத்தையடைந்தான். அவனுடைய ஆப்த நண்பர்களே, அவன் மீது பொய்யான குற்றங்களைச் சாட்டினார்கள். அவன் மனைவியும் அவனுக்கு விரோதமாய்ப் பேசினாள். ஏன் தேவன் அவனுக்கு இந்த அக்கினிப் பரிசோதனையை வரவிட்டார்? இதன் மூலம் யோபு தனது உள்ளான நிலையை அறிந்து கொள்ளவும், பிறகு அதிலிருந்து விடுதலை பெற்று, தனது உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதேயாகும். யோபு 42 : 5,6, 12 ஆம் வாக்கியங்களின் மூலம் தேவன், யோபுக்குத் தம்மை மிகவும் நெருங்கின, மெய்ப்பொருளாகவும், ஒரு ஆள்போல அறிந்து கொள்வதற்காகவும் இக் கஷ்டங்களை வரவிட்டார் என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம். இப்பொழுது தேவனோடு பேசவும், உறவாடவும், மன்றாடவும் கற்றுக் கொண்டதுடன், தான் முன்பு இழந்த யாவையும் மீண்டும் இரட்டிப்பாகப் பெற்றுக்கொண்டான் என்று பார்க்கிறோம். நாமும் யோபைப் போலவே எவ்வளவு இழக்கிறோம் என்று துவக்கத்தில் அறியாதிருக்கிறோம். நமது மெய்யான ஆவிக்குரிய நிலையை நாம் அறிந்து கொள்ளாமலிருக்கின்றபடியால் துன்பமும் வேதனையுமுள்ள சில முறைகளின் மூலமாய்த் தேவன் நம்மைப் பரீட்சித்து மேலான நிலைக்கு நடத்திச் செல்லுகிறார்.
எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயர்ந்த சிகரமென நாம் அறிவோம். அது 51 மைல் உயரமுள்ளது. காலையில் சூரியோதயத்தின் போது எவரெஸ்ட் காட்சியின் எழிலை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. டார்ஜிலிங் ஊரில் புலிமலை என்ற மலைமீது நின்று இவ்வரிய காட்சியைக்காண, உலகின் பல பாகங்களிலுமிருந்து வரும் உல்லாசப்பிரயாணிகள் நூற்றுக்கணக்கில் தினமும் கூடிவருவர். 1956 ஆம் ஆண்டில் ஒரு வழிகாட்டியின் துணையுடன், நானும் ஒரு சகோதரனும் எவரெஸ்ட் முனையைப் பார்க்கச் சென்றிருந்தோம். அன்று அதிகாலமே நாங்கள் புறப்பட்டு, புலிமலை மீது சிரமப்பட்டு ஏறி நின்றோம். ஆனால் எங்களுக்கு முன்னதாக சுமார் இருநூறு மக்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்தனர். சூரிய ஒளியில் அவ்விடமெங்கும் அழகு மலர்ந்திருந்தது. ஒருவர் பின் ஒருவராக அந்த அழகைப்பருகிக் கொண்டும், அக் காட்சியின் எழிலைக் கண்டும் திருப்தியடைந்தவர்களாய்த் திரும்பிச் சென்றனர். கடைசியாக நாங்கள் நான்கு பேர் மட்டும் நின்று கொண்டிருந்தோம். நான் என் நண்பரிடம் எவரெஸ்ட் முனையைச் சுட்டிக்காண்பிக்கும்படி கூறினபொழுது, அவர் ஓரிடத்தைத் தம் விரலால் சுட்டிக் காண்பித்தார். அதைக் குறிப்பாக உற்றுக் கவனித்தேன், அது மிகவும் அழகாகத்தானிருந்தது. ஆனால் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அது அசையத்தொடங்கிற்று. பின்பு நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. அது எப்படி எவரெஸ்ட் ஆக இருக்கக் கூடும்? மலைச்சிகரமாக இருந்தால் நகருமா? இல்லை, இல்லை, அது மேகமாக, அல்லது பனிப்படலமாக இருக்கவேண்டும் என்று கூறினேன். பின் இன்னொருவரைக் கேட்ட பொழுது, சற்று தாமதிக்கும்படியாகவும், பனி மண்டலம் நீங்கின பிறகு எவரெஸ்ட் சிகரத்தைக் காணலாம் என்றும் கூறினார். அவ்விதமே, அதி சீக்கிரத்தில் சூரிய வெப்பத்தில் மூடுபனி மறைந்தவுடன் எவரெஸ்ட் சிகரம் புலனாயிற்று. ஆ! அது என்ன அற்புதமான தோற்றம் ! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகு ! மனதை மயக்கும் மனோகரக்கண்காட்சி! மற்றவர்களெல்லாரும் மேகத்தை மட்டும் பார்த்து விட்டு, எவரெஸ்டையும் அதன் அழகையும் தரிசித்து விட்டதாக எண்ணித்தங்களையே ஏமாற்றிக் கொண்டு சென்று விட்டனரே.
இது நம்முடைய ஆவிக்குரிய நிலைமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாம் கர்த்தரைக் கண்டு விட்டதாக கருதுகின்றோம். ஆனால் உண்மையில் இன்னும் அவரைக் காணவில்லை. அவரை அறியவேண்டிய பிரகாரம் அறியவில்லை. இதனிமித்தம் சில நெருக்கமான சூழ்நிலைகள், சோதனைகள் மூலமாய்த் தேவன் நம்மை நடத்தி அவற்றின் மூலம் இவைகளைக் காணத்தக்கதாகக் செய்கின்றார். தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். தேவ மகிமை திரும்ப வந்தது. அப்படியே தேவன் நம்மீது இரங்கி, நம்மிடமாகத்திரும்புவார். நாம் அவர் ஜனமாவோம்; அவர் நமது தேவனாக இருப்பார். எபிரோன், சீயோன் என்னும் சாதனங்களின் மூலமாக நாமிழந்தவற்றையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.