Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home கிறிஸ்தவ நூற்கள்

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – இழப்பிற்குச் சில காரணங்கள்

Webmaster by Webmaster
February 25, 2025
in கிறிஸ்தவ நூற்கள்
0
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை
75
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சகோ. பக்த் சிங்

You might also like

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்- தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம்

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள்

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக் கொள்வதின் இரகசியம்

அத்தியாயம் – 8

இழப்பிற்குச் சில காரணங்கள்

நாம் இழந்து விட்ட சில பொருட்களைத் திரும்பப் பெறும்போது, மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊழியத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு சகோதரனும் நானுமாக பாக்கிஸ்தானிலுள்ள லாகூரில் இரண்டு நாட்கள் கூட்டங்கள் நடத்தினோம். முதற் கூட்டம் காலை 9 மணிக்குத் துவங்கியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் இராவல்பிண்டியிலிருந்து இரவெல்லாம் பிரயாணம் செய்து லாகூரை அடையும்போது மணி 9.30 ஆகிவிட்டது. உடனே நாங்கள் வாடகைமோட்டார் வண்டி அமர்த்தி ஆராதனை வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். எங்களை வரவேற்பதற்கு எல்லோரும் பெருங்கூட்டமாகக் கூடியிருந்தனர், நாங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து அறிமுகமாக்கிக் கொள்ளச் சிறிது நேரமாகி விட்டது. இதனால் வண்டியிலிருந்து எங்கள் சாமான்களையெல்லாம் இறக்கிவைத்து விட்டார்களா என்று கவனிக்க முடியவில்லை. நான் கூட்டத்திற்கு ஆயத்தப்படுவதற்காக, வீட்டிற்குள் சென்றபோது எனது கைப்பை காணவில்லை. அந்த பைக்குள் தான் எனது பாஸ்போர்ட்டு அநுமதிச் சீட்டுகளும் மற்றும் எனக்குத் தேவையான பொருட்களுமிருந்தன. மறு நாள் கூட்டங்கள் முடிந்தவுடன் நாங்கள் பாக்கிஸ்தானை விட்டு வெளியேறவேண்டியதாயிருந்தது ! மற்றவை காணாமற்போனாலும், பாஸ்போர்ட் இல்லாவிடில் இந்தியாவிற்குத் திரும்ப முடியாது. வீடு முழுவதும் தேடியும் அந்தப் பையைக்காணோம். வேறொரு பாஸ்போர்ட்டுக்கு மனுச் செய்தாலும், புதியது கிடைப்பதற்கு மூன்று வாரங்களாவது ஆகும். என் செய்வது! பை எப்படித் தொலைந்திருக்கக் கூடும்? ஒரு வேளை வண்டியில் விட்டிருப்போமோ? என்று பலவாறு யோசித்தேன். ஆனாலும் இப்பொழுது என்ன செய்ய முடியும்? டாக்சியின் நம்பரை ஒருவரும் குறித்து வைக்கவில்லை. இருந்தாலும் போலீசுக்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுப்போமா, அல்லது அதை மீட்டுக் கொள்வதற்கு வேறு என்னசெய்யலாம் எனப் பலவாறு மனுஷீகப்பிரகாரமாக யோசிக்கலானேன்.

இறுதியில். இம்முறைகளால் அந்தப்பையைத் திரும்பப் பெறுவது கூடாத காரியம் என்ற முடிவிற்கு வந்தவர்களாக, எல்லோருமாகக் கூடி ஜெபித்தோம். “ஆண்டவரே, நான் மேலும் சில நாட்கள் பாக்கிஸ்தானில் தங்கியிருக்க எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆயினும் இந்தியாவில் காத்துக் கொண்டிருக்கும் உமது ஊழியம் தடைபடுமே. இதற்கடுத்ததாக ‘காலிம்பாங்’ செல்ல வேண்டும். அதற்கு பிறகு ஹைதராபாத்தில் பரிசுத்த சபை கூடுதல் இருக்குமென்று ஏற்கனவே விளம்பரப்படுத்தி விட்டோம். இவற்றை ஒத்திப்போட முடியாது. ஆதலால் அந்தப்பை இப்பொழுதே என்னிடம் வந்து சேருவதற்கு உதவி செய்யும். கர்த்தாவே, அது அந்த டாக்சியிலே இருக்குமானால், உடனே என்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு அந்த டிரைவரிடம் பேசும்; இதர பொருட்களை இழந்து விட்டாலும், பாஸ்போர்ட்டுகளாவது எங்களுக்குக் கிடைக்குமாறு கிருபை செய்யும்” என்று ஜெபித்தேன். நாங்கள் ஜெபத்தை முடித்த சில நிமிடங்களில், அந்த டாக்சி டிரைவர் திரும்பி வந்து, அந்தப் பையைப் பத்திரமாய்க் கொடுத்து விட்டுச் சென்றார். அவன் அந்தப் பையுடன் வெகுதூரம் சென்று விட்ட போதிலும், உள்ளத்தில் ஏதோ ஒரு பயம் மேலிட்டதாகவும், அதனிமித்தம் தான் வந்ததாகவும் அவன் கூறினான். யாவருடைய முகங்களும் மலர்ந்தன. ஏனென்றால் நாங்கள் இழந்ததைத் திரும்பப் பெற்றுக் கொண்டோம். மேலும் எங்கள் மூலமாய் அவ்வேளையில் நிறைவேற்றப்படவேண்டிய தேவ ஊழியமும் அதைச் சார்ந்தேயிருந்தது. காணாமற் போன பையைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், நாங்கள் குறிப்பிட்ட வேளையில் இந்தியாவிற்குத் திரும்பவும், தக்க சமயத்தில் ஹைதராபாத் சபை கூடுதலில் பங்கு பெறவும் முடிந்தது. காணாமற்போனதைக் கண்டு பிடித்ததில் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தோம் எனப்பாருங்கள்!

நாம் சிந்திக்கும் நஷ்டங்களை, தனிப்பட்ட இழப்பு, பொதுவான இழப்பு என இரு வகைப்படுத்தலாம். முதலாவது இழப்பு ஒரு தனி நபருக்கு ஏற்படும் நஷ்டம் ; இரண்டாவது, சபை முழுவதிற்கும் ஏற்படும் தீங்கு அல்லது நஷ்டம். நாம் விசுவாசிகளென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம் என்று வேதவசனம் நமக்குப் போதிக்கிறது. சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பும் அருமையானதும், இன்றியமையாததுமாகும். சில உறுப்புக்கள் பெரியனவாகவும், சில சிறியனவாகவும் இருக்கின்றன. மிகச் சிறிய உறுப்புக்களாக இருந்த போதிலும், அவை சரீரத்தில் மிக முக்கியமான பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. சரீரத்தில் ஓர் அவயவம் வேதனைப்படும்போது, சரீரம் முழுவதும் வேதனையடைகிறது. நமது சுண்டு விரலில் ஒரு சிறு புண் இருக்கிறதெனக் கொள்வோம். அது ஒரு சிறு காயமாகவோ, கட்டியாகவோ இருக்கலாம். ஆனாலும் அதனிமித்தமாக, இரவெல்லாம் நித்திரையின்றி, வலியுடனிருக்கலாம். ஏனென்றால் அவ்வேதனையினால் சரீரம் முழுவதும் பாடுபடுகிறது. இவ்வாறே நம்முடைய நஷ்டம் தனிப்பட்ட நஷ்டமாயிருந்தாலும், அது சபை முழுவதிற்கும் ஏற்பட்ட நஷ்டமாகும். அது போலவே இலாபமடையும்போதும் அல்லது விடுதலை, வெற்றி கிடைக்கும்போதும், அது எல்லாருக்குமே மகிழ்ச் சியையும், ஆசீர்வாதத்தையும் தருகின்றது.

ஐந்து அப்பங்கள் கொண்டு ஒரு சமயம் நமதாண்டவர் ஐயாயிரம் பேரைப் போஷித்தாரல்லவா! எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியான பின், நமதாண்டவர் சீஷர்களை நோக்கி: “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள்” என்றார் (யோவான் 6:12). ஏன் இந்தத் துணிக்கைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டன? பறவைகளுக்கோ, மிருகங்களுக்கோ தீவனமாகக் கொடுப்பதற்காக மட்டுமல்ல; ஒரு விசேஷித்த நோக்கத்திற்கென்றேயாகும். மற்றொரு சமயம் ஆண்டவர், “நீங்கள் உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் என்று கற்பித்தார். நாம் பேசும் வீணான வார்த்தைகள் ஒவ்வொன்றும் மீதியான துணிக்கைக்கு ஒப்பானவைகளாகும். இம் மீதமான துணிக்கை ஒவ்வொன்றிற்கும் கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். அதாவது, அற்பமான காரியத்தைக் குறித்தும் கவனமாயிருக்கவேண்டும். “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத் தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும்” (மத்தேயு 12:36). இந்த அளவுகோலின்படி நம்மில் அநேகர் நமதாண்டவரை அடிக்கடி துக்கப்படுத்துகிறோம் என்று அறிக்கை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம்.

இனி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நமக்கு ஒரு மேலான, ஆவிக்குரிய சுதந்தரமிருக்கிறது என்றும் அறிவோம். அது அழியாததும், மாசற்றதும், வாடாததும், பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதுமான சுதந்தரம். ஒரு மனுஷனாலும் தேவ தூதனாலும், இதை இப்பொழுது சரிவர அறிந்துகொள்ள முடியாது. 1 கொரிந்தியர் 2:9 இல் கூறப்பட்டிருக்கிறபடியே, “தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” இந்த வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானவைகளாயுள்ளன! மேலும், தேவன் நமக்குக் கொடுக்கும் நம்பிக்கையாவது : ” … எல்லாம் உங்களுடையதே; பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும். ஜீவனாகிலும், மரணமாகிலும், நிகழ் காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது.” (I கொரி.3:21 -23). இத்துணை அருமையான வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்தும், நாம் தோல்வியும், தவறுகளுமுள்ள வாழ்க்கை நடத்தி வருகிறதற்குக் காரணம்  என்ன? நம்முடைய பரலோக சுதந்தரத்தை அனுபவிக்கத்தெரியாமலிருப்பதேயாகும். தமது அநாதித் தீர்மானத்தின்படி தேவன் மனிதருக்கு எல்லாவற்றையும் அன்பளிப்பாகக் கொடுப்பதற்காகவே யாவையும் செய்து முடித்தார். தேவன் ஆதாமைச் சகல சிருஷ்டிகளுக்கும் அதிகாரியாக்கினார் என்று ஆதியாகமம் விளம்புகின்றது. அவன் பாவம் செய்யாதிருந்திருப்பானேயாகில், அவன் இப்பொழுது சர்வலோகத்திற்கும் சக்கரவர்த்தியாக இருந்திருப்பான். ஆனால் பாவம் பிரவேசித்தபோதோ தேவனின் திட்டமும் குறிக்கோளும் தடைப்பட்டது. மனிதனால் இவ்வாறு இடையூறு ஏற்பட்டாலும், தேவனின் அன்பும் நோக்கமும் மாறவில்லை அது மாறாது. “நான் அநாதி சிநேகத்தால் உன்னைச்சிநேகித்தேன்” என்று எரேமியா 31:3 ல் தேவன் தம்முடைய நித்தியமான, தெய்வீக அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய சித்தமும், தீர்மானமும் ஒருபோதும் மாறாதது. மனிதர் மாறிப்போவர்! ஆனால் கர்த்தர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவர். அவர் செய்ய நினைத்தது எப்படியும் நிறைவேறியே தீரும். மனிதர் மாறிப் போவர் ; ஆனால் கர்த்தர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவர்.

மகிமையின் தேவன் எவ்வாறு ஆபிரகாமுக்குத் தரிசனமாகி ஏழு பெரிய நித்திய ஆசீர்வாதங்களை அருளினார் என்பதை ஆதி. 12ல் காண்க. ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பது நிபந்தனை. ஆபிரகாமுக்கும் அவனது சந்ததியாருக்கும் தேவன் வாக்கருளியள்ள தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்வதற்காக, ஆபிரகாம் தனது ஜாதி, ஜனம், வீடு, வாசல் யாவற்றையும் மறந்து புதிய இடத்திற்குப் போகும்படி தேவன் கட்டளையிட்டார். ஆபிரகாமும் கீழ்ப்படிந்து சென்றான். ஆனால் பிற்காலத்திலோ சத்துருவாகிய சாத்தான் ஆபிரகாமின் சந்ததியாரிடமிருந்து அவர்களது சுதந்தரத்தை வெகு தந்திரமாகக் களவாடி விட்டான். சில வேளைகளில் நாம் நம்மிடமிருந்த பொருட்கள் காணாமற்போனதை அறியாமலும் உணராமலும் இருக்கலாம். ஒரு சமயம் ஒரு மிஷினரி ரயிலில் 3-வது வகுப்பில் பிரயாணம்செய்து கொண்டிருந்தார். அவர் தம்முடைய பெட்டியைத் தமக்கு எதிர்புறத்திலிருந்த ஆசனத்திற்கடியில் வைத்து, அதை ஒரு சங்கிலியால் கட்டியிருந்தார். அப்பெட்டியிலும் பலத்த பூட்டு போடப்பட்டிருந்தது. அவருடைய கவனம் எல்லாம் அப்பெட்டியின் மீதிருந்தது. ஆனால் இரவில் தூக்கம் மேலிடவே அவர் அயர்ந்து தூங்கி விட்டார். அவர் நித்திரை கலைந்து விழித்தவுடன் முதலில் அவரது கண்கள் பெட்டியின் மீதுதான் சென்றது. ஏனெனில் அவருடைய நினைவெல்லாம் அந்தப் பெட்டியின் மேலேயே இருந்தது. பெட்டி அவர் வைத்தபடியே, பத்திரமாக, பெஞ்சுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டபடியே தானிருந்தது. பூட்டுப்போட்டபடியே இருந்தது. எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்க்க, பெட்டியைச் சிறிது இழுத்தார். அப்போது அது மிகவும் இலேசாகயிருந்தது. சந்தேகத்துடன் தூக்கிப் பார்த்தார். அதில் ஒன்றுமில்லை எனக் கண்டார். என்ன ஆச்சரியம்! பெட்டியை நகர்த்தாமல், பூட்டைத் திறக்காமல் திருடன் எப்படி எல்லாவற்றையும் எடுத்து விட்டான்? அவர் பெட்டியைத் திருப்பிப் பார்க்கும்பொழுது அந்த தந்திரசாலியான திருடன் பின் புறத்தில் கத்தியைக் கொண்டு பெட்டியைக் கிழித்து, பொருட்களைக் களவாடிச் சென்று விட்டான். அந்த மிஷினரி தமது பெட்டியை இரவெல்லாம் கவனமாகப் பார்த்திருந்தும் அதிகாலையில் தான் தமது இழப்பைக் கண்டு பிடித்தார். இதேவிதமாக, அநேக விசுவாசிகளும் தங்கள் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், விசுவாசத்தையும் இழந்தும் அதை அறியாமலிருக்கின்றனர் …! விழிக்கும்போது அதாவது தேவனுடைய வசனத்தைக் கேட்பதின் மூலமாக வெளிச்சத்திற்குள் வரும்போதுதான், தங்களது கவலையீனம், அறியாமை மதியீனம் இவற்றால் எவ்வளவு பெரிய நஷ்டத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிவார்கள்.

ஒரு மனிதனின் பிழையின் மூலமாக, ஒரு தேசம் முழுவதுமே, தேவகோபாக்கினைக்குட்பட்டு, ஜனங்களெல்லாரும் நியாயந்தீர்க்கப்பட்டார்கள். தேவன் அவர்களை விட்டுவிலகி நின்றார். தேவனைப் பற்றிக் கொள்வது எவ்வாறு என்று தெரியாமல் தயங்கினவர்களாய், இருளிலும், துக்கத்திலும், வெட்கத்திலும் காலம் தாழ்த்தி வந்தனர். ஆனால் தேவன் மாறுகிறவரல்லர். அப்படியே அவரது அன்பும் மாறுவதில்லை. அந்த தேசத்தார், தங்கள் நஷ்டங்களை எல்லாம் திருப்பிக் கொள்ள வேண்டுமென்பதே தேவனுடைய திட்டம். இன்னின்ன வழிகளால், ஆவிக்குரிய நஷ்டம் நமக்கு ஏற்படுகிறதென்றும், அவற்றிற்கு மாற்று யாது, நிறைவு பெறுவது எப்படி என்பதைக் குறித்தும் வேத வசனம் நமக்கு வெகு தெளிவாகப் போதிக்கிறது. எபிரோன், சீயோன் மூலமாக, ஒவ்வொரு ஆவிக்குரிய நஷ்டத்திற்கும், இழப்பீடு கிடைக்கும் என்று வேதவசனம் விளக்குகிறது. நீண்ட காலமாகவே, தேவன் தம்முடைய ஜனத்திற்கு இவ்விரண்டு இடங்களின் சிறப்பையும், பொருளையும் விளக்கி வந்திருந்தார். இந்தத் தெய்வீக உண்மையை உணர்ந்துகொள்ள நமக்கும் நெடுநாள் பிடிக்கலாம். ஆனால், தேவன் நீடிய சாந்தமும் தயவும் மிகுந்த கிருபையுமுள்ளவராதலால், நமது இழப்புகளை மீண்டும் திருப்பிக் கொள்ளும்வரை அவர் நம்மை மறக்கமாட்டார். இவ்விதமான, இழப்பை மீட்பதற்காகவே தேவன் ஆபிரகாமை எபிரோனுக்கு அழைத்துச் சென்றார்.

தேவன், ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, “நீ உன் நாட்டையும், வீட்டையும் விட்டு, உன் இன ஜனத்தை மறந்து, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ” என்று மிகத் தெளிவும் திட்டமுமாகக் கட்டளையிட்டார். ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார். ஆனால் முழுவதுமாக அல்ல; ஒரு சிறு தவறுக்கு இடங்கொடுத்ததின் மூலமாக, அவனது ஜீவியத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. இதுவும் நட்பால் ஏற்பட்ட நஷ்டம். தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஆபிரகாம் எல்லாவற்றையும், சேர்த்துக் கொண்டு புறப்படுகிற வேளையில், அவனுடைய அண்ணன் மகன் லோத்தும் அவனுடன் செல்லும்படி கெஞ்சிக்கேட்டிருப்பான். லோத்தின் கண்ணீரையும், கெஞ்சுதலையும் கண்டு, மனமிளகியவனாய் ஆபிரகாம் அவனது விருப்பத்திற்கு இணங்கியிருக்கலாம். எவ்வாறாயினும், இவ்விஷயத்தில் ஆபிரகாம் வஞ்சிக்கப்பட்டான் என்பதைப் பின்னால் நடந்த சம்பவங்களின் மூலம் ஒருவாறு அறிகிறோம்.

அவர்கள் போய், குடியேறிய நாட்டிலே, சில ஆண்டுகள் கழிந்தபின், ஒருவன் ஆபிரகாமிடம் வந்து லோத்தின் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடு, சண்டை போடுகின்றனர். நீங்கள் துரிதமாய் வந்து, வழக்கு தீர்க்கவேண்டும் என வேண்டிக் கொண்டனர். ஆபிரகாம் அவர்களுடன் சென்று, அது உண்மைதான் என்று அறிந்து தன் தவறை உணர ஆரம்பித்தான். லோத்தைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தது, பெரும் பிழை என்று தேவனிடம் அறிக்கை செய்தான். பின்பு, அவன் லோத்தை அழைத்து “எனக்கும், உனக்கும், என் மேய்ப்பருக்கும், உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது. நீ என்னை விட்டுப் பிரிந்து போகலாம். நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன். நீ வலப்புறம் போனால் நான் இடப்புறம் போகிறேன்” என்றான் (ஆதி. 13 : 8-9). அப்பொழுது, லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, யோர்தான் நதிக்கருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தியிருக்கக் கண்டு, சோதோமுக்கு அருகிலுள்ள அச் செழிப்பான இடத்தில் வசிக்கத் தெரிந்து கொண்டான். அக்காலத்தில், சோதோம், கொமொராவின் மக்கள், மிகப் பயங்கரமான கொடிய பாவங்களில் உழன்று வந்தனர். அவர்கள் நடுவிலே, காணப்படாத பாவங்கள் ஒன்றுமில்லை ! ஆனால் லோத்து, “நான் சோதோம் நகரத்திற்குள் வசிக்க மாட்டேன். ஓரிரு மைல்களுக்கு அப்பாலே குடியிருப்பேன். இவ்விதமாய் என் குடும்பத்தைத் தேவ பயத்தில் காத்துக் கொள்ளுவேன். அவர்கள் பாவ வழிகளினின்று நான் விலகிக் கொள்வேன், என்று தனக்குள் எண்ணியிருந்திருப்பான். அவனது காரியங்களிலிருந்து, அவனுக்கு உண்மையிலேயே, தேவனிடத்தில் பற்று இல்லை என்பது தெளிவாகிறது. அவன் பேராசையுள்ளவன், செல்வம் திரட்டுவதற்குக் கிடைக்கும் தருணத்திற்காகக் காத்திருந்தான். ஆரம்பத்தில், ஆபிரகாமுக்கு எல்லாக் காரியத்திலும் கீழ்ப்படிந்து ஆபிரகாமின் தேவனை விசுவாசித்து, அவன் சொற்படி நடப்பேன் என்றெல்லாம், ஆபிரகாமுக்குத் தான் கொடுத்த உறுதி மொழியினின்று தவறிவிட்டான்.

இக்காலத்திலும், இவ்விதமாகத் தங்களை ஏமாற்றிக் கொள்வோர் பலருண்டு. அநேகர் நம் நாட்டை விட்டு,அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். “நாங்கள் இவ்வளவு காலமாக, எங்கள் தாய்நாட்டில் இருந்து கர்த்தரை அறிவித்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் வெளிநாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்ய வேண்டும்” என்று அவர்கள் சொல்வதெல்லாம் தேவ மகிமைக்காக அல்ல; பணம் திரட்ட ஒரு தன்னயமான நோக்கத்திற்கென்றேயாகும். தங்களுக்குக் கார் எப்படி கிடைக்கும்? தங்களுக்கென நவீன முறையில் வீடுகளைக் கட்டிக் கொள்வதெப்படி? என்ற வஞ்சகமான நோக்கத்துடனே லோத்தைப் போன்று செழிப்பான தேசத்தையே நாடித் தேடுகின்றனர்! கர்த்தர், லோத்தின் நிமித்தமாக, ஆபிரகாமுடன் பேசக் கூடாதவராக இருந்தார். ஆரம்ப முதல் தேவன் ஆபிரகாமை நடத்தி வந்தும், லோத்து கூட இருந்ததால் ஆபிரகாம் தேவ பிரசன்னத்தை உணரக் கூடாதவனாயிருந்தான். பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியத்தின் மூலமே நாம் தேவனோடு தொடர்புகொள்ள முடியும். இழப்பீடு வேண்டுமெனில் பிரிந்திருத்தல் இன்றியமையாதது. லோத்து ஆபிரகாமை விட்டுப்பிரிந்து சென்ற பின்பு, தேவன் மறுபடியும் ஆபிரகாழுக்குத் தன்னை வெளிப்படுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது (ஆதி 13 : 14). அதன் பின்னரே தேவன் ஆபிரகா டே பேசத் தொடங்கினார். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி’ “உன் கண்களை ஏறெடுத்து நீ இருக்கிற இடத்திலிருந்து, வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் உனக்கும், உன் சந்ததிக்கும், என்றைக்கும் கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப் போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக் கூடுமானால் உன் சந்ததியையும் எண்ணக் கூடும். நீ எழுந்து, தேசத்தின் நீளமும், அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி. உனக்கு அதைத் தருவேன்” என்றார். தேவன், ஆபிரகாமோடு நித்திய உடன்படிக்கை செய்து ஆபிரகாமுக்கும், அவன் சந்ததிக்கும் எவ்வளவு மேலான சுதந்திரத்தை அளிக்கப் போகிறார் என்பதை இப்போது வெளிப்படுத்தினார்.

இதே ஆசீர்வாதத்தை தேவன் இக்காலத்திலும் ஒவ்வொரு விசுவாசிக்கும் அருளச் சித்தங் கொண்டுள்ளார். ஆனால் ஏதோ ஒரு லோத்து, நமது ஜீவியத்திலிருப்பதால், தேவன் அவ்வாசீர்வாதங்களைத் கொடுக்கக் கூடாதவராயிருக்கிறார். அது ஒருவேளை உலகப் பிரகாரமான ஒரு சிநேகிதனாயிருக்கலாம். அல்லது தேவனற்ற கணவனாகவோ, இரட்சிக்கப்படாத மனைவியாகவோ அல்லது வேறு எந்த அவிசுவாசியோடுள்ள ஐக்கியமாகவோ, இருக்கலாம். மனுஷீகப் பிரகாரமான அன்பினாலோ, அனுதாபத்தினாலோ, உந்தப்பட்டவர்களாய்ப் பல நஷ்டங்களை அடைந்து கொண்டிருக்கலாம். “லோத்தை உன்னோடு அழைத்துச் செல்ல வேண்டாம். அவனை உன்னோடு வைத்திருக்க வேண்டாம்” என்று தேவன் நம்மை எச்சரிக்கின்றார். உமக்கு அருமையானவர்களின் கண்ணீர், ஒருவேளை தேவனுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து, உம்மைத் தடுத்துக் கொண்டிருக்கலாம். அதன் விளைவாக ஆவிக்குரிய குருட்டாட்டம் உம்மைப் பிடித்திருக்கிறது. தேவனுடைய சத்தம் உமது காதுகளில் தொனிக்கிறதில்லை. உமது பரலோக சுதந்தரத்தையும், ஆவிக்குரிய சிலாக்கியங்களையும், நீர் அனுபவிக்க இயலாதவராயிருக்கிறீர். தேவனுடைய காரியங்களைக் குறித்துப் பசிதாகமில்லை. இவையெல்லாவற்றிற்கும் காரணம், உமது வாழ்க்கையில் குறுக்கிட்ட லோத்துதான். நீர் அந்த லோத்தை விட்டு உடனடியாகப் பிரிந்து வந்துவிட வேண்டும். இல்லை என்றால், தேவனுக்குக் கீழ்ப்படியாததினால், உமக்கு விளைந்த தீங்கும் இழப்பும் மிகப் பெரியது என்று ஒருநாளில், கண்டு பிடிப்பீர். உம்முடைய லோத்தை விட்டு நீர் பிரிந்து வந்தால் மட்டும் தேவன் தம்மை உமக்கு வெளிப்படுத்துவார். உம்மோடு பேசுவார். தமது வல்லமையை உம்மில் ஊற்றுவார்.

தேவன், ஆபிரகாமுக்குத் தரிசனமான பின்பு ஆபிரகாம் அவ்விடம் விட்டு குடிபெயர்ந்து, எபிரோனுக்குப் போய்க் குடியேறினான் (ஆதி 13;18). அங்கு, அவன் மகிழ்ச்சியாலும், துதியாலும், தொழுகையாலும் நிறைந்திருந்தான். அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி கர்த்தரைத் தொழுது கொண்டான். “எபிரோன்’ என்ற பதத்திற்கு ஐக்கியம் என்று பொருள். நாம் பாவிகளானபடியால் தேவ சமுகத்தினின்று விரட்டியடிக்கப்பட்டோம். எந்தப் பாவியும் தேவனோடு பேசவோ அவர் சத்தத்தைக் கேட்கவோ முடியாது. நீர் ஒருவேளை, பல அற்புத அடையாளங்களைக் காணலாம். சொப்பனங்களைக் காணலாம். ஆகிலும், உமது பாவங்கள் மன்னிக்கப்பட்டாலொழிய தேவனோடு ஒருபோதும் பேச முடியாது. நாம் பாவிகளாயிருக்கும்போது, தேவன் நம்மை விட்டு வெகு தூரமாயிருக்கிறார். ஆனால் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போதோ தேவன் மிகச் சமீபமாக வந்து விடுகிறார். எந்த வேளையும், அவருடைய சந்நிதியில் செல்லலாம்; அவரோடு உ றவாடலாம்; விண்ணப்பங்களை ஏறெடுப்பது மட்டுமின்றி அருடைய சமுகத்தையே அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.

உதாரணமாக ஒரு குழந்தை நாள்முழுதும் தன் தாயின் மடியிலே இருக்கக்கண்டு அதை நோக்கி, “பாப்பா! உன் அம்மாவின் மடியிலேயே இவ்வளவு நேரம் இருக் கிறாயே ! உனக்குச் சலிப்பாக இல்லையா? கஷ்டமாக இல்லையா?” என்று கேட்பின், அது என்ன பதில் கூறும்? இல்லை ! மாமா! எனக்குக் கொஞ்சமும் களைப்பாகவோ, சலிப்பாகவோ இல்லை. இதுதான் எனக்கு சுகமாக இருக்கின்றது. அம்மாவின் மடியை விட்டுக் கீழிறங்க எனக்கு மனமில்லை !” என்றே பதிலளிக்கும். இவ்வாறு, அக்குழந்தை கூறுவதில் வியப்பொன்றுமில்லை! ஹைதராபாத்திலோ, சென்னையிலோ, பரிசுத்த சபை கூடுதல் கூட்டங்களில், நீங்கள் பங்கெடுப்பீர்களென்றால், ஒருவேளை, நீங்கள் கீழ்வருமாறு, அபிப்பிராயம் தெரிவிக்கலாம் ; ஒவ்வொரு கூட்டத்திலும், மணிக்கணக்காக உட்கார வேண்டியிருப்பதால், நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். என் முதுகு வலிக்கின்றது: கால்கள் மறத்துவிட்டன; வயிறு பசிக்கின்றது. இடையிடையே, காபியோ சிற்றுண்டியோ தேவை. இவர்களுக்கு வேறு வேலை என்ன எபிரோனிலோ, யெகோவா ஷம்மாவிலோ, உள்ளவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாங்களோ, மிக முக்கியமான அலுவல்களும், கவலைகளுமுடையவர்கள். இவ்வாறு கூட்டங்களில் நெடுநேரம் செலவழிப்பது எங்களுக்கு வீணென்று தெரிகிறது. 3 மணிக்குத்தான் சாப்பாடு ! எங்களைப் போன்றோருக்கு இது உண்மையிலேயே காலத்தை விரயம் செய்வதாகும்” எனலாம். இவ்விதமான கருத்தை, நீங்கள் கொண்டிருப்பீர்களாகில், நீங்கள் கிறிஸ்துவின் மெய்யான ஐக்கியம் இன்னதென்று தெரியாதவர்களாக இருக்கின்றீர்கள் என்றே கூறலாம். உண்மையான ஐக்கியத்தை நீங்கள் அனுபவிக்க முடியாமலிருக்கின்றதற்குக் காரணம், உங்கள் வாழ்க்கையிலிருக்கும்

ஒரு லோத்தாக இருக்கலாம். எவ்வாறு, ஆபிரகாம், தன் அண்ணன் மகன் லோத்தை விட்டுப் பிரிந்து சென்ற பின்பு, தேவனோடுள்ள தனது உறவைப் புதுப்பித்துக் கொண்டு ஒரு நண்பரோடு பழகுவது போல தேவனோடு பழகி ஐக்கியப்பட்டிருந்தானோ, அவ்வாறு நீங்களும். தேவனோடு தொடர்பு கொண்டு, ஐக்கியப்பட்டிருக்கலாம்.

லோத்து, ஆபிரகாமோடிருந்தபோது, தேவன் அவனோடு பேசவில்லை. ஆபிரகாமுடைய மனதில் இவ்விதமான எண்ணங்கள் பல தோன்றியிருக்கலாம். “நான் செய்ய வேண்டுவது என்ன? லோத்தின் மேய்ப்பர், அடிக்கடி வாக்கு வாதம் செய்து, சண்டையிடுகின்றனரே, நான் எவ்வாறு இதைத் தீர்த்து வைப்பது? இதற்கு, நிரந்தரமான பரிகாரம் ஏதுமில்லையா?” என்று கலங்கியிருக்கலாம். ஆனால் தேவன் அவருடைய கேள்விகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆபிரகாம், லோத்துடன் பேசி, முடிவான தீர்மானத்திற்கு வந்து, லோத்தை அனுப்பி விட்ட பின்னரோ, தேவன் தாமே ஆபிரகாமோடு பேசினார். ஆதி. 43 : 14-17இல் நாம் வாசிக்கும் வாக்குத்தத்தத்தையும், உடன் படிக்கையையும் கொடுத்தார். ஆபிரகாமின் கண்கள் திறக்கப்பட்டன. தேவ இரகசியத்தை அறிந்து கொண்டதோடு தேவனோடு சம்பாஷிக்கும் சிலாக்கியமும் பெற்றான்.

“உங்கள் பாவங்களைத் தேவன் உங்களுக்கு, மன்னித்து விட்டார் என்று எந்த ஆதாரத்தின் பேரில், நீங்கள் இவ்வளவு நிச்சயமாகக் கூறுகிறீர்கள்? உங்கள் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதாக சாட்சி சொல்லுகிறீர்களே ! அதை, உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று யாராவது நம்மிடம் கேட்பார்களென்றால், “எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். நித்தமும் தேவனோடு பேசுகிறேன். என் ஆண்டவரும் என்னோடு பேசுகின்றார். நான் எப்பொழுதும் என் கர்த்தரின் சமுகத்தை அனுபவிக்கிறேன். அவர் பிரசன்னத்திலிருப்பதையே வாஞ்சிக்கிறேன் ; அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்ற சாட்சியைத்திட்டமாகக் கூறமுடியுமா.

மனிதரோடு பேசிக் கொண்டிருப்பதை விட, தேவனோடு பேசும்போது தான், நாம் அதிக மகிழ்ச்சியடைய முடியும். ஏனென்றால், நாம் அவருடையவர்கள், அவர் நம்முடையவர். நாம் அவரை அறிந்திருக்கிறோம், அவரும் நம்மை அறிந்திருக்கிறார். இந்த ஐக்கியத்தின் மூலமாக, நாம் அநேக நஷ்டங்களை, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். முதலாவதாக, நம்முடைய ஐக்கியம், பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் உள்ளது. இரண்டாவதாக அவருக்குச் சொந்தமானவர்களோடு நம்முடைய ஐக்கியம் உள்ளது (1யோவா. 1:3). தேவனோடு நமக்கு மெய்யான ஐக்கியம் இல்லாவிடில், உடன் விசுவாசிகளோடும் நமக்கு உண்மையான பூரண ஐக்கியமிராது. இவ்விரு ஐக்கிகியங்களும், ஒன்றோடொன்று இசைந்திருக்கும்.

நீங்கள், ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, உங்களுக்கருகில் இருப்பவரை, புகை பிடிக்க வேண்டாம் என்று ஒருவேளை நீங்கள் கேட்டுக் கொள்வீர்களென்றால், அவரும் இணங்கி புகைபிடிக்காதிருக்கலாம். ஆனால், ரயில், நிலையத்தில் வந்து நின்றவுடன், அவர் கீழே இறங்கி, தனது சிகரெட்டைப் பற்றவைத்து விடுவார். அவரிடம் இல்லாவிட்டால், கடையில் வாங்கியாவது புகைத்துக் கொள்வார். ஏனென்றால் அவரால் நீண்ட நேரம், புகைக்காமல் இருக்க முடியாது. அவர் அதில் ஆர்வமுடையவராயிருக்கிறார். குடிகாரர்களும் இவ்விதமாகவே நடந்து கொள்கின்றனர். அவர்கள் போகுமிடமெல்லாம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, “மது கிடைக்குமிடம் எது” என்பது தான். அவர்கள் அதிலே பழகி விட்டதினால், நாட்டமெல்லாம் மது அருந்துவதிலே தான் இருக்கும். சென்னைக்கோ, ஹைதராபாத்திற்கோ, பரிசுத்த சபை கூடுதலுக்குச் செல்லும் விசுவாசிகளில் சிலர், தங்களுக்கு வேண்டிய நல்ல துணிமணிகளையோ அல்லது வேறு ஏதாவது சிறந்த பொருட்களையோ தங்கள் வீடுகளுக்கு, வாங்கிச் செல்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நீங்கள், உண்மையாக, தேவனுடைய பிள்ளையாகும்போது, இதரக்காரியங்களை விட, அவருடைய பிள்ளைகளோடு, ஐக்கியப்படுவதிலேயே அதிக இன்பம் பெறுவீர்கள். “பரிசுத்த சபை கூடுதலில், இரசம் நன்றாக இருக்கிறது. உப்புமா முதல் தரமானது, காப்பி ருசியாக இருக்கின்றது, என்று சிலர் விமரிசிப்பதுண்டு. இவையெல்லாம், எந்த எந்த காரியத்தில் நீங்கள், நாட்டமும், தேட்டமுமாயிருக்கிறீர்கள் என்பதை பிரதிபிம்பித்துக்காட்டுகின்றது, பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் உண்மையிலே மகிழ்ச்சியடைகிறவர்கள் அநேகர் உண்டு. தேவனோடு பேசுவதில் உங்களுக்கு உண்மையான ஆர்வமுண்டா ? அவருடைய சமுகத்தில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதில் இன்பம் அடைகிறீர்களா? தேவமக்களோடு ஐக்கியப்பட்டு, அவருடைய வீட்டில் தரித்திருப்பதில், வாஞ்சையோடியிருக்கிறீர்களா? இவ்விதமாகக் கர்த்தரோடும் அவருடையவர்களோடும் ஐக்கியப்படுவதின் மூலமாக நீங்கள் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள்.

அப்போஸ்தலர் காலத்திலிருந்த ஆதி விசுவாசிகள் ஒருவரோடொருவர் ஐக்கியப் பட்டிருப்பதில், தீவிரமாக இருந்தனர் (அப் 2:42). “அவர்கள் உறுதியாய்த் தரித்திருந்தார்கள், அவர்கள், சொத்து சுகம் சேர்ப்பதிலோ, பேரும், புகழும் பெற வேண்டுமென்றோ, ஆர்வம் கொள்ளாமல், ஒருவரோடொருவர், உண்மையான அந்நியோந்நியத்துடன் இருப்பதிலேயே ஆர்வம் காட்டினர். உண்மையான கிறிஸ்தவ ஐக்கியத்தில் வளருகிறவர்களைக் கண்டு சாத்தான் ஏளனம் பண்ணுவான். பலவகையிலும் தாக்குவான். என்றாலும் அவர்கள் ஆவியிலே மென்மேலும் வளர்ந்து சிறப்படைவார்கள். நீங்களும், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டு, கர்த்தருடைய வீட்டிலுள்ள சிலாக்கியங்களிலெல்லாம் பங்கு பெறக் கற்றுக் கொள்வீர்களாக.

தேவன், தனக்குத் தரிசனம் அளிக்கும் போது, அவரை எவ்வாறு தொழுது கொள்ள வேண்டுமென்று, ஆபிரகாம் அறிந்திருந்தான். அவரோடு உரையாடுவதற்கும் ஆயத்தமாயிருந்தான். ஒரு முறை அவன் அவரைச் சந்திப்பதற்கு ஓடிச் சென்று தரை மட்டும் குனிந்து வணங்கி வரவேற்றான் (ஆதி 18). இவ்வாறே, கர்த்தர் லோத்துக்கும் தரிசனமானார் (ஆதி 19;1). ஆயினும், இவ்விரண்டு பேருக்குமுள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். ஆபிரகாம், சந்தோஷத்தின் மிகுதியால் ஓடிச்சென்று தாழ விழுந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டான். ஆனால் லோத்தோ, கர்த்தருக்கு எதிர்கொண்டு சென்று தரை மட்டும் குனிந்தான் என்று பார்க்கிறோம். ஆபிரகாம், தன் பரலோக விருந்தினரை, “ஆண்டவரே! உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததினால் நீர் உமது, அடியேனை விட்டு கடந்து போக வேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள், கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள்” என்று பணிவன்புடன் வரவேற்றான். பின்பு உள்ளே ஓடிச் சென்று சீக்கிரமாக ஆகாரத்தை ஆயத்தம் செய்யும்படி, சாராளைத் துரிதப்படுத்தினான். அடுத்ததாக, ஆபிரகாம், மாட்டு மந்தைக்கு ஓடி, கொழுத்த கன்றைச் சமைப்பதற்கு ஏற்பாடு செய்தான். இவ்வளவு, உற்சாகத்திற்குக் காரணம், ‘அவன் தேவன்பால் கொண்டிருந்த மிகுந்த அன்பேயாகும்’ லோத்து தன் தெய்வீக விருந்தினரை வீட்டிற்குள் அழைத்த போதிலும் அவர்கள், உள்ளே வரமறுத்தனர். பலமுறை அவன், வருந்தி அழைத்த பிறகுதான், அவர்கள் உள்ளே வந்தனர். அப்படி வந்த போதிலும், லோத்து, தன் மனைவியையோ, மக்களையோ அழைத்து, விருந்தை ஆயத்தம் பண்ணச் சொன்னதாக குறிப்பு ஒன்றுமில்லை. ஏன் அவர்கள் லெளகீக மக்களாக மாறியிருந்த காரணந்தான். லோத்து தன் மனைவியிடம் சென்று, அந்தத் தெய்வீக விருந்தினருக்கு, உணவு தயாரிக்க வேண்டுமென்று சொல்லிருப்பானாகில், என்ன பதில் கிடைத்திருக்கு மென்று நினைக்கிறீர்கள்? “அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீரே அதைச் சமைத்துக் கொள்ளும், நீர் கண்டவர்களையும் வீட்டிற்கு, அழைத்து வருவீர் ! அவர்களுக்கெல்லாம் சமைத்துப் போட என்னால் முடியாது, என்று கூறியிருப்பாள். லோத்தின் பெண்களும், உவப்புடன் அவர்களை வரவேற்றிருக்க மாட்டார்கள். முடிவில், லோத்து தான் ஆயத்தம் பண்ணியிருப்பான். ஆபிரகாமுக்கும், லோத்துக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்கள்?

ஆபிரகாம் தேவனோடு பழகியிருந்தான். தேவனோடு பேசுவதில் அவனுக்குத் தனி இன்பமிருந்தது. தேவனுக்காக எதையும் தியாகம் பண்ணுவதில் அதிக ஆர்வமுடையவனாயிருந்தான். லோத்தோ, முதலாவது, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டிருந்தான் (ஆதி 13: 12) இரண்டாவதாக, சோதோம் நகரிலேயே குடி புகுந்தான். இறுதியில், சோதோம் நகரிலே ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றுக்கொண்டு, சோதோம் நகரின் வாசலிலேயே உட்கார்ந்திருந்தான் (ஆதி 19:1). இவ்விதமாக அவன் மனுஷர் முன்பாகப் பெரியவனாகக் கருதப்பட்டாலும், தேவனோடுள்ள ஐக்கியத்தில், குறைவுபட்டு, பரலோக சிலாக்கியங்களை முழுவதுமாக இழந்து ஆவிக்குரிய தரித்திரனானான்! ஆவிக்குரிய பார்வையை இழந்தான். சோதோமின் துன்மார்க்கரை, “சகோதரரே!” என்று அழைத்தான் (ஆதி 19:7). இவையெல்லாம், அவன் உலகத்தையும், உலகப் பொருளையும் சிநேகித்து, உலகத்தில் பெரியவனாயிருக்க விரும்பினமையால் ஏற்பட்ட விளைவாகும்.

‘எபிரோன்’ என்ற பதத்திற்குரிய, ‘ஐக்கியம்’ என்ற பொருள் மிக முக்கியமானது. இது, முதலாவதாக தேவனோடுள்ள ஐக்கியத்தையும், உடன் விசுவாசிகளோடுள்ள அந்நியோந்நியத்தையும் குறிக்கின்றது. லோத்துடன் உமக்குள்ள நட்பு, இவ்வித மேன்மையான ஐக்கியத்தை அளிக்காது. உலகத்தாரோடுள்ள உமது சிநேகத்தையும், சம்பந்தங்களையும், நீர் முறித்து விட்டால் மாத்திரமே, தேவன் நித்தியமாகத் தம்முடைய சகவாசத்தையும், அவர் பிள்ளைகளுடைய கூட்டுறவையும் அளிப்பார்.

‘எபிரோன்’ என்பதற்கான இரண்டாவது பொருள் ‘விசுவாசம்’. கானான் தேசத்தை வேவு பார்க்கச் சென்றவர்கள் பன்னிருவர். யோசுவாவையும் காலேபையும் தவிர, ஏனையோருக்கு விசுவாசமே இல்லை. கானானிலுள்ள இராட்சதர்களையும், பராக்கிரமசாலிகளையும் கண்டு நடுங்கினர். ஆனால் யோசுவா 14 : 11 -13ல் காலேபைக் குறித்து வாசிக்கிறதென்ன? காலேப், யோசுவாவிடம், “கர்த்தர் அந்நாளிலே சொன்ன அந்த மலை நாட்டை,-‘எபிரோனை’- எனக்குத் தாரும். அங்கே, ஏனாக்கியர் என்ற இராட்சதர்களும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் இருந்தாலும் கர்த்தருடைய பலத்திலே அவர்களைத் துரத்தி விடுவேன். கர்த்தர் உண்மையையும், உடன்படிக்கையையும் காக்கிறவரானபடியால், அவருடைய கிருபையால், நான் என் எதிரிகளின் மீது ஜெயங் கொள்வேன். ஆதலால், எபிரோனை எனக்குத் தாரும்” என்று கேட்டான். அப்படியே யோசுவா காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை. அவனுக்குச் சுதந்திரமாகக் கொடுத்தான். “காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், இந்நாளில் இருக்கிறபடியே, எபிரோன் அவனுக்குச் சுதந்திரமாயிற்று.” தேவன் அவன் விசுவாசத்தைக் கனப்படுத்தினார். கானானிலுள்ள இராட்சதர்களைக் கண்டு, நீங்கள் பயப்படவேண்டாம்! அவர்களோடு எதிர்த்து நிற்க தயாராகுங்கள்! இராட்சதர் போன்ற அநேக பெருந் தடைகளும், இடையூறுகளும் உங்கள் வழியில் குறுக்கிடலாம். ஆனால் உங்கள் உறுதியான விசுவாசம் உங்களது, ஒவ்வொரு எதிரிகளையும் மேற்கொள்ள உங்களுக்கு உதவி செய்யும். எனவே ‘எபிரோன்’ மேற்கொள்ளும் விசுவாசத்தைக் குறிக்கிறதாயுள்ளது.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்- தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம்

April 4, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின் ஆவிக்குரிய பொருளைக் குறித்தும் திருமறையின் ஆதாரத்தைக்...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள்

March 10, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக் கைக்கொண்டு நடப்போமாகில் நாம் இழந்ததைத் திரும்பப்...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக் கொள்வதின் இரகசியம்

March 7, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும் முன்பு நாம் யாராயிருந்தாலும், நாம் செய்வது...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தாவீதின் நான்காவது இழப்பு

March 5, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில் வசித்தனர். தாவீது தேவனுக்குக் கீழ்ப்படிந்ததின் மூலம்,...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும்

February 23, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 7 மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும் நாம் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத தேவை கீழ்ப்படிதலாகும். இந்த அத்தியாயத்திலும் நமது நூலின் தலைப்பை மையமாகக் கொண்டே ஆராய்வோமாக. இம் மூன்று பதங்களின்...

Read moreDetails
Next Post
நாள் 1 – ஆதியாகமம் 1-3

ஆதியாகமம் 37

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?