சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 11
தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள்
விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக் கைக்கொண்டு நடப்போமாகில் நாம் இழந்ததைத் திரும்பப் பெறுவோம். எவ்வாறு தேவன் தாவீதை எபிரோனுக்கும், சீயோனுக்கும் கொண்டு வந்து, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுவான தேசீய வாழ்க்கையிலும் ஏற்பட்ட தோல்விகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் தம்முடைய தெய்வீகக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், திருப்பிக் கொள்ளும்படி அவனுக்கு உதவி செய்தார் என்று ஏற்கனவே நாம் சிந்தித்துள்ளோம்.
தாவீது எபிரோனில், ஏழரை ஆண்டுகாலம் இருந்தபின், சீயோனுக்கு வந்தான். எபிரோன் என்றால், ஐக்கியம் என்று பார்த்தோம். தாவீது, எபிரோனில் போதுமான காலம் தங்கியிருந்ததின் மூலம் ஐக்கியம் என்பதன் முழு இரகசியத்தையும் அறிந்து கொண்டான். இவ்விதமாக தாவீது எபிரோனில் ஆயத்தமாக்கப்பட்ட பின், கர்த்தர் அவனைச் சீயோனுக்குக் கொண்டு வந்தார். இந்தச் சீயோனைக் குறித்து ஏழு காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை, நாம் கற்றுக் கொள்ளும்போது நாம் சீயோனுக்குள் எப்படி வருவதென்றும், அங்கு அன்னியோன்னியமாயிருப்பதன் மூலம் எவ்வாறு இழந்த ஒவ்வொன்றையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதையும் அறிந்து கொள்வோம் (2 சாமுவேல் 5 : 6, 7, 10).
- ஸ்தலம்
தாவீதின் காலம் வரைக்கும் எபூசியர், சீயோனில் வசித்து வந்தனர். பென்யமீனியர், அவர்களைத் துரத்திவிடத் தவறி விட்டதால், அவர்கள், எருசலேமிலேயே தங்கிவிட்டனர். உபாகமம் 7-ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் கானானிலிருந்த ஏழு ஜாதிகளையும், முழுவதுமாக அழித்து, நிர்மூலமாக்க வேண்டுமென்றும், அவர்களோடு உடன்படிக்கை செய்யவோ. சமரசம் செய்யவோ, அல்லது விவாக சம்பந்தங்களில் ஈடுபடவோ கூடாது என்றும் தேவன் திட்டமாகக் கட்டளையிட்டிருந்தார். இதுவுமன்றி அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்துப் போட்டு, விக்கிரகங்களையும், சிலைகளையும் நொறுக்கி, விக்கிரக ஆராதனையின் அடையாளமோ, நினைவோ சிறிதேனும் இல்லாமற் போகும்படி செய்துவிட வேண்டும் என்றும் கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், இஸ்ரவேலரோ தங்களது, மனுஷீக ஞானத்தினால் அவர்களுக்கு இரக்கம் காண்பித்து தேவனைத் துக்கப்படுத்தினார்கள். இந்த ஏழு ஜாதியினருமே கானானில் தங்கியிருந்து இஸ்ரவேலருக்கு இடையூறும், கண்ணியுமாயிருந்து பெரும் நஷ்டத்தை விளைவித்தனர்.
2 சாமுவேல் 5-ம் அதிகாரத்தில், தாவீது, எவ்வாறு சீயோனை எபூசியரிடமிருந்து பிடுங்கித் தனது சிங்காசனத்தை அங்கு ஸ்தாபித்தான் என்பதைக் குறித்து வாசிக்கிறோம். ஆனாலும், அந்தோ, தாவீது பெருமைக்கிடங்கொடுத்து தேவனுடைய விதிகளை அறியக்கூடாத குருடனாகி, ஜனங்களைத் தொகையிடும்படி வற்புறுத்தினான். இப்பாவத்தினிமித்தம், தாவீது மட்டுமன்று, இஸ்ரவேலர் எல்லாரும் தண்டிக்கப் பட்டார்கள்.
பாவங்களுள் மிகப்பெரியது ‘பெருமை’ என்னும் பாவமேயாகும். அநேக விசுவாசிகள் பெருமை கொண்டு பெரும் நஷ்டத்தையடைந்திருக்கின்றனர். அவர்கள் சிறந்த விசுவாசிகள்தான். வேதாகமத்தை நன்கு கற்றறிந்தவர்கள்தான், தேவ சேவையின் நிமித்தமாக பெருந்தியாகம் செய்தவர்கள் தான். ஆயினும் இப்பக்தி வைராக்கியத்தின் மத்தியிலும் ‘பெருமை’ அவர்களிடத்தில் காணப்படுவது ஒரு பெருங்குறையாகும். தாவீதிடமும் இந்தக் குறையே காணப்பட்டது. தளபதியான யோவாப், மக்களை எண்ணிக்கையிட வேண்டாம் என்று எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக் கொண்டான். ஆனால் தாவீதோ அவனது ஆலோசனையைக் கேளாது போனான். அவனது மனமேட்டிமையினிமித்தம், தேவன் அவனைத் தண்டிக்க வேண்டியதாயிற்று. பின்பு, தீர்க்கதரிசி தாவீதுக்குக் கட்டளையிட்டபடியே; தாவீது அர்வனாவின் போரடிக்கும் களத்திற்குச் சென்று அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின்னர் எருசலேமின், தேவாலயம் கட்டப்படும் இடம் அதுவே என்பதைத் தாவீது கண்டறிந்தான்.
தாவீது சீயோனில் வாசம் செய்து வந்த போதிலும், தேவன் அங்கு அவனைக்கொண்டு வந்ததின் பெரிய நோக்கத்தை அறியாமலிருந்தான். தேவன் தமது மகிமையை வெளிப்படுத்துவதற்கென்று ஆலயம் எங்கு கட்டப்பட வேண்டுமோ அந்த இடத்தைக் காட்டும் படியாகவே அவனை அங்கு கொண்டு வந்தார். இதுவே சீயோனைப் பற்றிய முதலாவது தெய்வீக ஏற்பாடு அல்லது நோக்கமாகும். தம்முடைய வாசஸ்தலம் இருக்க வேண்டிய ஸ்தானத்தை நாம் காணும்படியாகவே தேவன் நம்மைச் சீயோனுக்குக் கொண்டு வருகிறார். தாவீது, முழுவதுமாக நொறுக்கப் பட்டுச்சிறுமைப்படுத்தப்பட்ட பின்னரே, ஆலயம் இருக்க வேண்டிய ஸ்தானத்தை அறிந்து கொள்ளக்கூடியவனானான். இந்த ஒரு பாடத்தை நாம் காற்றுக் கொள்ள எத்தனையோ ஆண்டுகளாகின்றன. நமக்கு அதிகக் கல்வி, அறிவு, மற்றும் தகுதிகள் இருந்த போதிலும், நமது பெருமையினால் ஏற்படும் சில தடைகளினால் தேவன் நம்மைப் பயன்படுத்தக் கூடாமற்போகிறது. அநேகருக்குத் தேவன் அநேக தாலந்துகளையும், வரங்களையும், கொடுத்திருந்த போதிலும், பெருமையின் காரணமாக அவையெல்லாம் பயன்படுத்தப்படாமல் பிரயோஜனமற்றவைகளாகி விடுகின்றன. ஆனால் சிலர் இதை அறிந்து செயல்படுகின்றனர். சிலர் இக்குறைபாட்டை அறியாத நிலைமையிலேயே இருக்கின்றனர்.
இந்த உள்ளான சீர்க்கேட்டை நமக்கு எடுத்துக் காட்டும்படியாக தேவன் பல சாதனங்களைக் கையாளுகிறார். அந்த நாளிலும், தேவன் எருசலேமின் மீது அனுப்பின கொள்ளையினிமித்தமே தாவீது தன் பாவத்தை அறிந்து கொள்ளக்கூடியவனானான். பின்னர் தேவனுக்கென்று ஒரு பலிபீடம் கட்டவும், அதன்பின் அங்கேயே ஆலயத்தைக் கட்டவும் தேவன் விரும்பினார் என்பதைத் தாவீது அறிந்து கொள்ளும்படி அவனைச் சீயோனுக்குக் கொண்டு வந்தார் எனக் காண்கிறோம். தேவன் தம்முடைய வேலையை நாம் விரும்புகிறபடியல்ல, தாம் விரும்புகிறபடியே செய்து வருகிறார். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. இவ்வாறே தேவனும் தமது சித்தத்தின்படியே கிரியைகளை நடப்பித்து வருகிறார். சில இடங்களில் ஊழியர் அநேக வருடங்கள் அதிகக் கஷ்டப்பட்டு உழைத்தும் கனி அல்லது பலன் காணப்படுகிறதில்லை. வேறு சில இடங்களில் சிறிது காலம் ஊழியம் செய்தவுடனேயே மிகுந்த கனிகள் காணப்படுகிறது. காரணமென்ன? தேவன் தமது வேலைகளை நடப்பிக்கும் படி ஒவ்வொரு இடத்திற்கும் குறிக்கப்பட்ட காலமுண்டு. இதை நாம் கர்த்தரிடத்தில் விசாரித்து அறிந்து கொள்ளாது. நமது வைராக்கியத்தின்படியும், வசதியின்படியும் ஊழியத்தை ஆரம்பிக்கும் போது நமது நேரமும் உழைப்பும் வீணும் விருதாவாகவும் போகின்றது.
உதாரணமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஊழியத்தை எடுத்துக் கொள்வோம். பல ஆண்டுகளாக அநேக நண்பர்கள் அங்கு சென்று ஊழியம் செய்யும்படி எங்களை அழைத்தார்கள். ஆனால் அங்கு செல்வதற்கு தேவன் சற்றேனும் அனுமதி கொடுக்கவில்லை. சில சமயங்களில் ஹைதராபாத்திற்கு வெகு சமீபமாய்ச் சென்றிருந்தும் ஹைதராபாத்துக்குள் சென்று ஊழியம் செய்ய தேவன் விடுதலை கொடுக்கவில்லை. ஆனால் குறித்த காலம் வந்த போதோ அங்கு போவதற்குக் கர்த்தர் பூரண சுயாதீனமும், சமாதானமும்அருளிச் செய்தார். அப்போது “ஹைதராபாத்தில் ஊழியம் செய்வதற்குக் கர்த்தருடைய வேளை இதுவே,” என்றறிந்து ஊழியத்தை ஆரம்பித்தோம். கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்து அவருடைய நடத்துதலின்படி எந்த இடங்களுக்குச் சென்றோமோ அங்கெல்லாம் ஊழியம் ஆரம்பிக்கிறதற்குத் தேவனால் குறிக்கப்பட்ட நேரம் அதுவே என்பதை அறிந்தோம். எங்களுக்கு முன்னாக தேவன் அங்கு சென்றிருந்தார். எரிகோவின் மதில்கள் விழுந்தது போலவே, அவ்விடங்களும் அசைக்கப்பட்டன. கர்த்தர் தமது திட்டங்களைத் தமது ஒழுங்கின்படியே நிறைவேற்றியதை நாங்கள் கண்டோம்.
முதலாவதாக நாம் தேவனுடைய வழிகளில் அல்லது ஒழுங்கிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். சீயோனைக் குறித்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் உண்மை அல்லது பாடம் இதுவே. இரண்டாவதாக நாம், நம்முடைய அறிவு, திறமை, சக்தி அல்லது மற்ற மனுஷீகத் தகுதிகளைச் சார்ந்து கர்த்தருடைய ஊழியத்தைச் செய்யாது, முற்றிலுமாய்க் கர்த்தரைச் சார்ந்து எல்லாவற்றையும் செய்யவேண்டும். அப்பொழுது மாத்திரமே அவருடைய வல்லமையையும், மகிமையையும் வெளிப்படுத்துவதற்காக அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட அல்லது குறிக்கப்பட்ட இடத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
2 ஆலயத்தின் மாதிரி
(1நாளாகமம் 28:11).
தேவன் தாவீதிற்கு ஆலயம் கட்டப்பட வேண்டிய இடத்தைக் காட்டியபின், அது அமைக்கப்பட வேண்டிய மாதிரியையும் விவரமாக அவனுக்கு எழுதிக் கொடுத்தார். இதுவே சீயோனைப் பற்றியுள்ள இரண்டாவது தெய்வீக நோக்கமாகும். தனிப்பட்ட விசுவாசிகளின் வாழ்க்கையாயினும், குடும்பக் காரியங்களாயினும், சபை விவகாரங்களாயினும் ஒவ்வொன்றிற்கும் தேவனுடைய பரம திட்டம் அல்லது ஒழுங்கு உண்டு. அதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதவசியம். தேவாலயம் கட்டப்பட வேண்டிய இடத்தை வெளிப்படுத்திய பின் தேவன் கிரியை செய்ய ஆரம்பிக்கிறார். அதன் பின்னரே நமது வாழ்க்கைக்கான தேவ தீர்மானங்களை அல்லது ஒழுங்குகளை நாம் தெளிவாகக் கண்டறிய முடியும்.
அநேகர் தங்களுடைய ஜீவியத்திற்கு தேவன் கொண்டிருக்கும் திட்டம் அல்லது நோக்கமின்னதென்பதை அறியாமலே வாழ்க்கை நடப்பித்து வருகின்றனர். தங்களுடைய வாழ்க்கைக்குரிய நோக்கத்தின் நிச்சயமின்றி அங்குமிங்கும் அலைந்து அலசடிப்பட்டு பெரும் நஷ்டத்திற்களாகின்றனர். நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கோ, குடும்பம் அல்லது சபையின் பொதுவான வாழ்க்கைக்கோ தெய்வீக திட்டம் உண்டு. அதை நாம் அறிந்து கொள்வதற்குச் சீயோனுக்கு வரவேண்டியதவசியம். தேவனுடைய பரிசுத்தவான்களோடு ஐக்கியப்படுவதின் மூலம் தேவனுடைய சித்தம் இன்னதென்று இலகுவில் கண்டு கொள்ளலாம். கர்த்தருடைய வீட்டை விட்டுத் தூரமாய் ஜீவிக்கிறவர்கள் அதாவது கர்த்தருடைய ஜனங்களின் ஐக்கியத்திலிராது தனி ஜீவியம் செய்வோர், கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்வது மிகவும் சிரமம். நல்ல பிரசங்கங்களைக் கேட்பதற்கு மட்டும் நீங்கள் கர்த்தருடைய வீட்டிற்குச் செல்வீர்களாகில் நீங்கள் பரவசமான செய்திகளைக் கேட்டாலும் தேவனுடைய பரலோகத் திட்டத்தை அறிந்து கொள்ள முடியாது. தேவனோடுள்ள ஐக்கியம், உடன் விசுவாசிகளோடுள்ள ஐக்கியம் என்ற இந்த பாடங்களையும் நீங்கள் சரிவரக் கற்றுக் கொள்ளாவிடில் தேவ சித்தத்தை அறிந்து கொள்வது சாத்தியமன்று. இந்த இருமுனை ஐக்கியத்தின் மூலமாகத் தான், நாள் தோறும் மாதந்தோறும், வருடந்தோறும், ஒவ்வொரு சிறுகாரியத்தைக் குறித்தும் தேவன் தமது ஒழுங்கை நமக்குத்தெரியப்படுத்துவார்.
“நான் இப்பொழுது இங்கிருப்பது, அல்லது இதைச் செய்வது, தேவனுடைய சித்தம் தான்” என்று நீங்கள் நிச்சயமாகக் சொல்லக் கூடுமானால் அது எவ்வளவு சந்தோஷத்திற்குரியதாகும்! ஒவ்வொரு நாளும், நம்மிலும் நமது மூலமாயும், தேவ தீர்மானம் நிறைவேறுவது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி ! தேவனுடைய பிள்ளைகள் என்ற முறையில், நாம் எப்பொழுதும் தேவனால் நடத்தப்பட வேண்டும். வேளாவேளைகளில் மட்டுமன்று, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு சிறு காரியத்திலும் தேவ நடத்துதல், நமக்கு அவசியம். தாவீதினுடைய வாழ்க்கையிலும், அவன் முழுவதுமாக நொறுக்கப்பட்டபின்னரே இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டதுடன் பரலோகத் திட்டத்தையும் தெரிந்து கொண்டான்.
3 ஆலயத்திற்குரிய பணி முட்டுகள்
(1 நாளாகமம் 26:27)
யுத்தத்தில் சேர்க்கப்பட்ட கொள்ளைப் பொருட்களில்;கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படி பரிசுத்தம் என்று சில பொருட்களை நேர்ந்து கொண்டார்கள் (வ,27). சீயோனைப் பற்றிய மூன்றாவது தெய்வீக பிரமாணம் தேவையான பொருட்கள் அல்லது பணிமுட்டுகளைச் சேகரிப்பதாகும். கர்த்தருடைய வீட்டிற்குரிய பரலோகத் திட்டத்தைத் தேவன் கொடுத்தபின், அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருட்களைத் தேடினார். ஒரு மண் சுவர் எழுப்ப விரும்பினால், அதற்குத் தேவையான முக்கியமான கச்சாப் பொருள் மண்தானல்லவா? ஆனால் பெரியதொரு நிரந்தரமான, வீட்டைக் கட்ட வேண்டுமென்றால், அதற்குத் தேவையான வேறு சிறப்பான பொருட்கள் வேண்டுமல்லவா? அவ்வாறே தேவனுடைய வீட்டை, தேவ சித்தத்தின்படி கட்டுவதற்கு, தேவன் விரும்பும் பொருட்களே தேவை. எனவே தேவனுடைய பரலோகத் திட்டம் என்னவென்று அறிந்து கொண்டீர்களானால், அதற்குத் தேவையான பொருட்கள் எவையென்றும் அறிந்து கொள்வீர்கள். தாவீதுக்குத் தேவன் தமது ஆலயத்தின் மாதிரியைக் காண்பித்தபின், தேவையான பொருட்கள் எவை என்று தாவீது அறிந்து ஒவ்வொரு யுத்தத்திலும், கொள்ளையடித்த பொருட்களில் ஆலயப்பணிக்குப் பயன்படும் பொருள்களை எடுத்து அவற்றைச் சேர்த்து வைத்தான் (1நாளாகமம் 29;1-4). இதனிமித்தமே அவன், “நான் என்னாலே இயன்றமட்டும், என் தேவனுடைய ஆலயத்திற்குப் பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும் இரும்பு வேலைக்கு இரும்பையும், மர வேலைக்கு மரத்தையும், பலவர்ணக் கற்களையும், விலையேறப் பெற்ற சகல இரத்தினங்களையும், வெண்கல கற்பாளத்தையும், கோமேதகம் போன்ற கற்களையும் ஏராளமாகச்சவதரித்தேன் என்று விளம்பக்கூடியவனாயிருந்தான்.(வ:2).
நம்முடைய வாழ்க்கையிலும் அநேகமாக, ஒவ்வொரு நாளும், எதிர்ப்புகளும், போராட்டங்களும் நமக்கு நேரிடுகின்றன. நம்முடைய உள்ளங்களில், குழப்பங்களும், பிரச்சனைகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதை நாமறிவோம். இத்துடன் சத்துருவிடமிருந்து, எதிர்ப்புகளும், தாக்குதல்களும், வறுமையும் வேறு பல சிக்கல்களும், நமக்கு ஏற்படுகின்றன. கர்த்தரின் வீட்டைக் கட்டும் வேலைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரும் சிலாக்கியத்தை நாம் பெறுவதற்காகவே, இவ்விதமான, எதிர்ப்புகளையும் போராட்டங்களையும், தேவன் நமது ஜீவியத்தில் வரவிடுகிறார். கொள்ளைப் பொருட்களை ஏராளமாக சேர்ப்பதற்குத் தாவீது பல போர்களைப் புரிய வேண்டியதாயிற்று. தேவனுடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை அவன் அந்த யுத்தங்களின் மூலம் சேகரித்தான். அப்போராட்டங்களினிமித்தம் தாவீது மனம் சலித்துப் போகாமல் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தான். இவ்வாறே தேவனுக்கும் பொருட்கள் தேவை. நீங்கள் தேவனுடைய ஒழுங்கிற்குள் வந்த பின்னரே தேவனுக்குத் தேவையான பொருட்களைக் சேகரிக்க முடியும். இவ்விஷயத்தில் தாவீது சிக்கல்களைக் கண்டு பின் வாங்காதது போல, நீங்களும் சேர்ந்து பின் வாங்காமலிருக்க வேண்டும். ஏனென்றால் இவற்றின் மூலமாகவே தேவனுடைய வீட்டிற்குத் தேவையான பொருட்களை நீங்கள் சேகரிக்க முடியும். அவை எவ்வளவு வேதனை நிறைந்த சோதனைகளாயிருப்பினும் சந்தோஷமடைவீர்களேயன்றி, அவைகளைக் கண்டு பின் வாங்க மாட்டீர்கள். தேவன் உங்களுக்குத் தேவையான சகல உதவியையும் அருளிச் செய்வார். தாவீது அநேகமாக தன் ஆயுட்காலம் முழுமையுமே ஆலயத்திற்குரிய பணிமுட்டுகளைச் சேர்த்துக் கொண்டிருந்தான். அவ்விதமாகவே நாமும் ஒருவேளை, நீண்டகாலமாக கர்த்தரின் வீட்டிற்கென பொருட்களைச் சேகரிக்க வேண்டியதிருக்கும். நாம் பரலோகத்திற்குச் சென்று பரம எருசலேமைக் காண்கையில், நாம் எதைச் சம்பாதித்தோம், எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை அறிந்து கொள்வோம்.
4 புத்தியுள்ள சிற்பாசாரி
(1 நாளாகமம் 28:9 – 13 ; கொரிந்தியர் 3:10)
தாவீது ஆலயமிருக்க வேண்டிய இடத்தை அறிந்துகொண்ட பிறகு, ஆலயத்தின் மாதிரியையும் தேவனிடத்திலிருந்து பெற்றான். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்த பின், அவ்வாலயத்தைக் கட்ட தேர்ச்சி பெற்ற கட்டிட நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினான்.
எந்தக் கட்டடமானாலும், அதைக் கட்டப் பொறுப்பாக, ஒரு பொறியாளர் அவசியம், கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும், திட்டமிட்ட ஒழுங்கின்படியே கட்டப்பட்டு வருகின்றதா என்று மேற்பார்வையிட ஒரு நிபுணன் அவசியம். எனவே தாவீதுக்கும், பெரிய நிபுணரான சிற்பாசாரி வேண்டியதாயிருந்தது! ஏனென்றால் கர்த்தருக்குக் கட்டும் ஆலயம் மிகப்பெரியதாகவும், சிறப்பாகவும் இருக்கவேண்டும். அது மனிதருக்கல்ல; தேவனுக்கு கட்டும் அரண்மனை என்று அடிக்கடி கூறி வந்துள்ளதைக் காண்க. தாவீது தன் குமாரனை நோக்கி “என் குமாரனாகிய சாலமோனே! கர்த்தர், தமக்கு வீட்டைக்கட்ட உன்னைத் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆதலால் நீ, தைரியங் கொண்டு திடமனதாயிரு! ஆலயத்தின் மாதிரியும், தேவையான பொருட்களும், இதோ இருக்கின்றன. இப்பொழுதும் இப்பெரிதான வேலையைத் தீவிரமாக ஆரம்பிப்பாயாக” என்றான். ஆகவே சாலமோன் இந்தப் புத்தியுள்ள சிற்பாசாரியாக விளங்கினான்.
புதிய ஏற்பாட்டுக் காலத்திற்கு வரும்பொழுது, அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு புத்தியுள்ள சிற்பாசாரியனாக இருந்து, தேவ திட்டத்தைத் தேவ ஒழுங்கின்படியே, நிறைவேற்றி வந்ததை நாம் பார்க்கிறோம். இதுதான் சீயோனைப்பற்றிய நான்காவது சட்டமாகும். நம்மையும் இவ்வாறு தேவ ஒழுங்கின்படி கட்டுவதற்கு இன்றும், புத்தியுள்ள சிற்பாசாரிகள் பலர் தேவை.பிரசங்கமோ, போதனையோ, மட்டும் போதாது. அப்போஸ்தலர்களும், தீர்க்கதரிசிகளும், போதகர்களும், மேய்ப்பர்களும் கர்த்தருடைய ஒழுங்கின்படியே கட்டத் தேவைப்படுகின்றனர் (எபேசியர் 2 : 20). அப்போஸ்தலர் காலத்தில், இவ்விதமான, உண்மையுள்ள ஊழியர்கள் பற்பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து ஆர்வத்துடன் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றினமையால், கர்த்தருடைய சபை உறுதியான அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டது. ஒவ்வொரு காலத்திலும் இவ்விதமாகவே, கர்த்தருடைய வேலை நடைபெற்று வருகின்றதை நாம் காணலாம். தேவனுடைய ஊழியம், பலமுள்ளதாயும், ஸ்திரமுள்ளதாயும் இருக்க வேண்டுமானால் தேவனுடைய சிந்தையின்படியும் ஒழுங்கின்படியும் செய்யக் கூடிய அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட உண்மையும், உத்தமுமான ஊழியர்கள் நமக்குத் தேவை.
தேவன் சாலமோனைத் தெரிந்து கொண்டபோது (1 இராஜாக்கள் 2;12; 3 : 11). தேவன் தனக்கு ஞானம் கொடுக்கும்படியாகச் சாலமோன் தேவனை வேண்டிக்கொண்டான். அவன் ஒரு புத்தியுள்ள சிற்பாசாரியானான். கர்த்தர், அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். தவிர “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியானுக்கு ஞானமுள்ள இதயத்தைத் தந்தருளும்” எனவும் கேட்டான். அவன் ஐசுவரியத்தையோ நீண்ட ஆயுசு நாட்களையோ ஆரோக்கியத்தையோ நாடாமல் புத்தியுள்ள சிற்பாசாரியாக இருப்பதற்கு வேண்டிய ஞானத்தை மட்டும் தேவன் தர வேண்டுமென விண்ணப்பித்தான். இவ்விதமான பரலோக, தெய்வீக ஞானமுடையவர்கள் மட்டுமே தேவசித்தத்தைத் தெளிவாக அறிந்து, அதற்கேற்றாற்போல் செயல்பட முடியும். தேவனுடைய வேலை, தங்குதடையின்றி வளர வேண்டுமென்றால், அப்போஸ்தலரின் அனுபவமும், தரிசனமும் உள்ளவர்களாயிருத்தல் வேண்டும்,
- தேர்ச்சி பெற்ற ஊழியர்கள்
ஐந்தாவதாக, கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான ஏராளமான செல்வமும், பொருட்களும் திறமையான வேலையாட்களும், அவனது நாட்டிலே இருந்த போதிலும், மகிமையான தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்கு அவர்கள் போதுமானவர்கள் அல்ல என்பதை சாலமோன் அறிந்து, தீருவின் இராஜாவாகிய ஈராம் தனக்கு லீபனோனிலிருந்து கேதுரு மரங்களையும், கல், மரம் இவைகளை இழைத்து வேலை செய்வதற்கு வேண்டிய, திறமையான பணியாட்களையும் அனுப்பும்படியாக எழுதி அனுப்பினான். தேவனுடைய வேலைக்கு திறமை வாய்ந்த பணியாட்கள் தேவை. அதுபோலவே உலகத்தின், ஒவ்வொரு பாகங்களிலிருந்தும் தேவன் தமது ஊழியத்திற்கென, ஞானமுள்ள வேலையாட்களைத் தேடுகிறார். மரவேலைகளையும், கல் வேலைகளையும் செய்வதற்கு, பல இடங்களிலுமிருந்து சாலமோன் எவ்வாறு, பணியாட்களைக் கொண்டு வந்தானோ, அவ்வாறே நமது ஆண்டவருடைய ஊழியம் நிறைவேற்றப்படுவதற்கும், உலகத்தின் பல பாகங்களிலிருந்து ஆண்களும் பெண்களும் அவசியம் தேவை. ஏனென்றால், ஒருவராவது தனது சுய பலத்தின் மேல் சார்ந்து கர்த்தருடைய வீட்டைக் கட்ட முடியாது. அத்தேசத்தார், எவ்வளவோ, சிறந்த ஞானமும் செல்வமும் நிறைந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தனியே நின்று, கர்த்தருடைய வீட்டைக் கட்டவே முடியாது. கர்த்தருடைய வீட்டைக் கட்டுவதற்கான, மரங்களும், கற்களும் உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் கொண்டு வரப்பட வேண்டும். இதுவே, சீயோனைப்பற்றிய, கர்த்தருடைய ஐந்தாவது தெய்வீக பிரமாணமாகும். தேவனுடைய வீட்டைக் கட்டும் வேலையில், நாமும் ஈடுபடும் பொழுது அவ்வேலைக்காக உலகத்தின் ஒவ்வொரு பாகத்திலுமிருந்தும் உடன் வேலையாட்கள் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது மாத்திரமே, கர்த்தருடைய வேலை சுலபமாக நடைபெறும்.
- ஒருமைப்பாடும் ஐக்கியமும்
(1 இராஜாக்கள் 6:7)
ஆறாவதாக, கட்டட வேலைக்கு அவர்கள் பெரிதான கற்களையும், மரங்களையும் உபயோகித்த போதிலும், சுத்தி வாச்சிகள் முதலான, எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் ஆலயத்திலே கேட்கப்படவில்லை. வேலையாட்களும், அமைதியாகப் பணி புரிந்து வந்தனர். ஏனென்றால், ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய வேண்டிய வேலையைக் குறித்தும், கர்த்தருடைய வீட்டைக் குறித்த திட்டத்தையும், ஒழுங்கையும் குறித்தும் நன்கு அறிந்திருந்தனர். மற்றப் பணியாட்கள் கற்களை வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு, வெட்டி எடுக்கப்பட்டு, பணி தீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களைக் கொண்டு சிலர், இசைவிணைப்பாகக் கட்டினர். ஏனெனில் அவர்கள் முன்னதாகவே, செம்மையாக, கர்த்தருடைய வேலைக்கென்றே, ஆயத்தமாக்கப்பட்டவர்களாயிருந்தனர்.
நாம், தேவனுடைய பரலோக ஒழுங்கைத் திட்டவட்டமாக அறிந்து, அதற்கான, பொருட்களையும், வேலை செய்வதற்காக ஆயத்தம் செய்யப்பட்ட உடன் வேலையாட்கள் புத்தியுள்ள சிற்பாசாரி ஆகியோரையும் உடையவர்களாயிருப்போமானால், கர்த்தருடைய வேலை மெய்யாகவே, உற்சாகத்துடனும், முழு பலத்துடனும் செய்யப்படும் என்பது திண்ணம். எங்கே கர்த்தருடைய ஒழுங்கையும் திட்டத்தையும் அறியாது ஊழியம் நடைபெறுகிறதோ’ அங்கே, மிகுந்த சச்சரவும், சண்டையுமே காணப்படும். எனவே, கர்த்தருடைய ஊழியத்தைக் குறித்த திட்டத்தையும், ஒழுங்கையும், நாம் அறிவது மிக முக்கியமானது. அப்பொழுது மாத்திரமே, தேவனுடைய ஊழியம், சிறப்பான முறையில், கிரமமாகவும் செம்மையாகவும் நடைபெறும்.
- கர்த்தருடைய மகிமை
(2 நாளாகமம் 7 : 1, 2)
ஏழாவதாக, சாலமோன் ஜெபம் பண்ணி முடித்தபொழுது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்கதகன பலியையும், மற்ற பலிகளையும், பட்சித்தது. கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. வேலைகளெல்லாம், முடிந்த பின்பே மகிமை ஆலயத்தை நிரப்பிற்று. அவ்வாறே கர்த்தருடைய மகிமையைக் காண முடியும். முற்றுப் பெறாத நிலையில், தேவனுடைய மகிமையை நாம் காண முடியாது. ஆசாரிப்புக் கூடாரமும், முற்றுப் பெற்றபோதே, கர்த்தருடைய மகிமை கூடாரத்தை நிரப்பினதாக நாம் வாசிக்கின்றோம். அது போன்றே கர்த்தரின் ஆலயத்திலும் வேலைகள் முடிவு பெற்ற பின்னரே, பரலோகத் திட்டத்தின்படி கர்த்தரின் மகிமை இறங்கி ஆலயத்தை நிரப்பிற்று. அதன்பின்பே, தேவன் அவர்களோடு பேசி, தமது நோக்கத்தை வெளிப்படுத்தலானார். “ஜனங்களெல்லாரும், சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டார்கள்” (2 நாளாகமம் 7 : 8-11). ஒவ்வொரு இஸ்ரவேலனும், அம்மகிழ்ச்சியில் பங்கு பெற்றானந்தித்தான். கர்த்தர், சாலமோனுக்குத் தரிசனமாகி, “நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்கு பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்; (வசனம் 15) இந்த ஸ்தலத்தில் செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.” என்றார். கர்த்தர், தமது பரிபூரணத்தில் அவர்களோடு வாசம் பண்ணத் தொடங்கினார். கர்த்தர் தமது அநாதி நோக்கத்துடனே தம்முடைய ஜனங்களுக்குத் தம்மைத் தாமே வெளிப்படுத்த தாவீதைச் சீயோனுக்குக் கொண்டு வந்தார்.
நாம், இதுவரை சிந்தித்த, ஏழுவிதமான, கர்த்தருடைய தெய்வீக பிரமாணங்கள் அல்லது கோட்பாடுகள் யாவன :
- கர்த்தருடைய வீடு அல்லது ஆலயத்திற்கான, ஸ்தானத்தைக் கண்டு பிடித்தல்.
- கர்த்தருடைய வீட்டைக் குறித்த பரலோகத் திட்டம்
- கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்கள்.
- கட்டட வேலையனைத்தையும், திறமையாக, மேற்பார்க்கக்கூடிய புத்தியுள்ள சிற்பாசாரி.
- உலக முழுவதிலும் பல பாகங்களிலிருந்தும், வேலைசெய்வதற்கான திறமையுள்ள வேலையாட்கள்.
- ஒருமைப்பாட்டிலும், ஐக்கியத்திலும், கர்த்தருடைய வேலை பூரணமாக நடைபெறுதல்.
- கர்த்தருடைய மகிமை இறங்கி ஆலயத்தை நிரப்புதல் என்பவைகளேயாகும்.
இவ்விதமாக, தேவன் சீயோனைக்குறித்து தமது நோக்கத்தை நிறைவேற்றி, அங்கு தம்மை வெளிப்படுத்தித் தம்முடைய ராஜரீக மகிமையிலே ஆளுகை செய்தார்.