May

மே 20

மே 20

…. தேவனே விளையச் செய்தார் (1.கொரி.3:6)

நாம் செய்யும் காரியங்கள் யாவற்றிற்கும் பிறரிடம் நன்மதிப்பை எதிர்பார்ப்பது நம் உள்ளத்தின் இயல்பு. நம் அயலாரின் பாராட்டை நாம் அதிகமாக விரும்புகிறோம். தேவனுடைய ஊழியத்தின் பாதையில் சுயநலம் குறுக்கிட்டு, அதை அழித்து நாசமாக்கிவிடுகிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் நமது இரட்சகருக்குச் சாட்சியாக வாழவேண்டும். ஒவ்வொரு விசவாசிக்கும் பரிசுத்த ஆவியின் வரங்களில் ஏதாகிலும் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு. எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது (1.கொரி.12:6-7).

தேவனுடைய வேலையை நாம் ஒரு குழுவாகத்தான் செய்யுமுடியும். நாம் தேவனுடைய ஊழியத்தில் உடன் வேலையாட்கள். இதை நான் செய்து முடித்தேன் என்று ஒருவரும் பெருமை பாராட்ட இயலாது. ஆதியில் இருந்த கொரிந்து சபையினர் தேவஊழியர் சிலருடன் ஒட்டிக்கொண்டனர். சிலர் பவுலைச் சேர்ந்தவர்களாயும், சிலர் அப்பொல்லோவைச் சேர்ந்தவர்களாயும் இருந்தனர். விளையச் செய்கிறவர் தேவன் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதிருந்தது.

அறுவடைக்குப் பின்பு உழுது நிழலத்தைப் பண்படுத்தியவன் ஒருவன். விதை விதைத்தவன் மற்றொருவன். அறுக்கிறவன் இன்னொருவன். அறுக்கிவன் மட்டும் அந்த விளைச்சலுக்கு பொறுப்பாக முடியாது. அறுவடைக்கென தேவன் சூரிய ஒளியினையும், மழையையும் கொடுக்கவேண்டியது அவசியம். நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட வேலையை நாம் செய்யவேண்டும். வெளியரங்கமான ஊழியமாயினும், அந்தரங்கமான ஊழியமாயினும், மனிதரால் காணக்கூடியதாயினும், காணக் கூடாததாயினும், எதுவாக இருந்தாலும் நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம் கடமையைச் செய்யும்போது தேவன் விளையச் செய்கிறார்.