March

மார்ச் 8

மார்ச் 8

அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ கொஞ்சம் கிடைத்தது (ஆகாய் 1:9)

பாபிலோனின் சிறையிலிருந்து தப்பிய சிறுபான்மை மக்கள் யூதேயாவில் இக்கட்டுகளின் நடுவே வசித்து வந்தனர். அவர்களுக்கு வருவாய் குறையாக இருந்ததோடன்றி கொடிய எதிரிகள் எப்பக்கத்திலிருந்தும் நெருக்கினர். ஆகவே பதினாறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த தேவாலயம் கட்டும் வேலையை விட்டுவிட்டனர். தங்கள் வீடுகளைக் கட்டுவதிலேயே அவசரம் கொண்டு, மச்சுப் பாவப்பட்ட அலங்காரமான வீடுகளைக் கட்டத் தொடங்கினர். தன்னலத்தை முதலாவதாகவும், தேவனை இரண்டாவதாகவும் வைத்து செயல்ப்பட்டு வந்தனர்.

தன்னலத்தாலும், தனக்கு முதன்மை கொடுப்பதாலும் பல விதமான இக்கட்டுகள் தொடர்ந்து வருகின்றன. ஆகாயின் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல, இன்றுள்ள நமக்கும் இது பொருந்தக்கூடியதே. அப்பொழுது தேவனுக்குக் கொடுக்க இயலாத நிலையில் ஏழ்மையாக இருந்தோம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒத்துவராதபடியால் எங்கள் சொந்தக் காரியங்களைப் பார்க்க வேண்டியதாயிருந்தது என்று நாமும் ஆகாயின் காலத்து மக்களைப்போன்று சாக்குப்போக்கு கூறுகிறோம். நாளைக்கு அல்லது இன்னொரு நாள் நாமும் வசதியும் வளமும் பெருகும்போது சமாதானத்தோடு இருக்கும்போது, தேவனுக்கென பெரிய காரியங்களைச் செய்வதாகக் கூறுவது இயல்பு.

ஜென்மசுபாவமுள்ள மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை அறிந்துகொள்ளான். தனக்குத் தேவையான வசதிகளைத் தேடின ஆகாயின் காலத்து மக்கள் கஷ்டப்பட்டு கூலியைச் சம்பாதித்து பொத்தலான பையிலே போடுகிறவர்களாக இருந்தனர். அவர்களுக்கு உணர்வை உண்டுபண்ணுவதற்காகவே தேவன் இவ்வாறு செய்தார்.

நாமும்கூட தேவனுக்கும் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முதலிடம் கொடுக்கலாமே! நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார் என்பது நிச்சயம். இது அவரால் கூடாததல்ல.