June

யூன் 28

யூன் 28

ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் (1.இராஜா.20:40).

நம் கடமையினின்று தவறச் செய்வதற்கென பல அபாயங்கள் ஏற்படுகின்றன. ஆகவே நாம் நமது சொந்த வல்லமையைக் கொண்டு நினைத்ததைச் செய்து முடிப்போம் என்று நம்பிக்கை கொள்வது நல்லதல்ல.

நமது இன்றைய தியான வசனத்திலுள்ளதுபோல நாம் நமது கவலையீனத்தால் கடமையினின்று தவறிவிடுவோம். அந்த வேலைக்காரனுக்கு இராணுவ சட்டதிட்டங்களும், அதை மீறுவதினால் கிடைக்கும் தண்டனைகளும் நன்கு தெரியும். இருப்பினும் அவன் கவலையீனமாய் இருந்தான். இதேபோன்றுதான், தான் தேர்வில் தோல்வியடைந்தபோது, ஐயோ என்னை சரியானபடி படிக்கவிடாமல் ரேடியோவும், சினிமாவும், என் நண்பர்களும் தடுத்துவிட்டனரே என்று எந்த மாணவனும் கதறுவான்.

வெளியேயிருந்து வரும் அபாயங்களும், நம்மைக் கடமையினின்று தவறச் செய்யும். தானியேல் தன் ராஜ்ய வேலைகளையும், தெய்வீகக் கடமைகளையும் தவறாது செய்துவந்தான் (தானி.6:4). அவன் பெருமையைத் தடைசெய்ய அவனது விரோதிகள் திட்டமிட்டனர். தன் உலக உத்தியோகத்தைவிட தேவனுக்கு உத்தமமாயிருக்க தானியேல் விரும்பினான். வரும் அபாயத்தை அறிந்திருந்தும் தொடர்ந்து கடமையில் தவறாதிருந்தான். நமக்கு அப்படிப்பட்ட ஆபத்துக்கள் வராதிருப்பினும், சிங்கக் குகையிலிருந்து விடுதலையடையும் அனுபவம் ஏற்படாவிடினும், ஆபத்துக்களை எதிர்நோக்கி, கடமையினை தவறாது செய்வோமாக.

அதிக அக்கறையெடுத்து சில காரியங்களைச் செய்யும்போது நாம் கடமையிலிருந்து தவறிவிடுகிறோம். லூக்.10:38-42 பார்க்க. இங்கு நமது ஆண்டவர் மரியாளைவிட மார்த்தாளைக் குறித்து அதிக கவலைப்படுகிறார். மரியாள் பாதுகாப்புடன் இருக்கிறாள் என அறிந்த அவர், மார்த்தாள் விருந்து உபசரிக்கும் காரியத்தில் அதிக அக்கறை செலுத்தி பரலோகத்தின் நித்திய ஆசீர்வாதங்களை விட்டு வலிகிவிடக் கூடாதெனவும் விரும்புகிறார். குறிப்பிட்ட வேலையில் அதிக அக்கறையெடுத்தக்கொண்டு மார்த்தாள் நல்ல பங்கை இழந்துவிடக்கூடும் அபாயத்தை உணர்ந்தவர் அவர்.

கடந்த காலத்து தோல்விகைள நினைத்து தேவனுடைய நலமான ஈவுகளை இழந்துவிடக்கூடாது. ஆகவே நாம் பி;ன்னானவைகளை மறந்து, இலக்கை நோக்கித் தொடர தேவன் கிருபை புரியட்டும்.