June

யூன் 29

யூன் 29

… நீ பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு….. போ…. (1.இராஜா.14:3).

யெரொபெயாம் தன் மகனின் வியாதி அதிகரித்த வேளையில் ஏன் தேவனுடைய ஊழியரிடத்து விசாரிக்க ஆள் அனுப்பினான்? இஸ்ரவேலின் இராஜாவுக்கென சொந்த தெய்வங்களும், பூசாரிகளும் இருந்தனர். அப்படியிருந்தும் இந்த இக்கட்டான வேளையில், துக்கம் பெருகியபோது அவன் ஏன் அவர்களை நம்பவில்லை!

அவிசுவாசிகள், சில நேரங்களில், கிறிஸ்தவ விசுவாசத்தை அவமதித்தபோதிலும் தங்களுக்கு இக்கட்டான நிலை வரும்போது பரிசுத்தவான்களின் உதவியை நாடுகிறார்கள். அநேக சமயங்களில் மாய்மாலமில்லாமலும், தேவனுடைய இரக்கத்திற்கு அருகதையற்றவர்கள் என்பதை உணர்ந்து உண்மையான மனதோடும் வருகிறார்கள். இப்படி வரும்போது தேவ இரக்கத்தைப் பெற்று கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அறிந்துகொள்ளுகிறார்கள். ஏனெனில், அவர் இரக்கங்களுக்கு முடிவில்லை.

ஆனால் அவர்கள் தேன் சொட்டும் வார்த்தைகளோடும், தாழ்மையோடும் வருவர்களாயின் எச்சரிக்கையாயிரு! இது போன்றே யெரோபெயாம் திரும்பத் திரும்ப விக்கிரகங்களை வணங்கி, அக்கிரமத்தில் உழன்றுகொண்டிருந்தான். மாறுவேடத்தில் மறைவாகச் சென்று தேனைக் கொடுத்து தேவையைச் சந்திக்க விரும்பினான். இராஜா தன் மனைவியிடம், நீ எழுந்து…. வேஷம் மாறிச் சீலோவுக்குப் போ,… ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு…. போ எனக் கூறினார். வேஷம் மாறிச் சென்ற இராணியால் யெரேபெயாமைத் தவிர வேறு எவரும் ஏமாற்றமடையவில்லை. அகியா கண் தெரியாத குருடன், ஆயினும் அவன் உள்ளம் தேவனை அறியும். அவன் இராணி உள்ளே வரும்போது, உன்னை அந்நிய ஸ்திரியாகக் காண்பிக்கிறதென்ன? எனக் கேட்டான்.

இவ்வுலகத்தை நியாயந்தீர்க்கப்போகிற நியாயாதிபதியை ஒரு கலசம் தேனை லஞ்சமாகக் கொடுத்து ஏமாற்றிட வகை தேடாதே. இதனால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஆகவே நாம் கபடற்ற உள்ளத்தோடும், உண்மையோடும் அவரிடம் செல்வோம். தாழ்மையாக இருப்பதாக பாவனை செய்ய வேண்டாம். மெய்யான மனந்திரும்புதலின் கண்ணீரோடு அவரிடம் மனந்திரும்புவோமாகில் அவர் நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தைப் புறக்கணியார். நம்மை இரட்சிப்பார். கபடத்துடன் கொடுக்கும் தேனை அவர் புறக்கணித்து விடுவார்.