June

யூன் 9

யூன் 9

ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான் (நீதி.11:13).

புறங்கூறுதலைக் குறித்த கடிந்துரைத்தலையும், அதற்கு வரும் ஆக்கினைத் தீர்ப்பைப்பற்றியும் வேதாகமத்தில் காண்கிறோம். மோசேயின் நியாயப்பிரமாணம், உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக என எச்சரிக்கிறது (லேவி.19:16). இதைப்பற்றி ஆராய்ந்த சாலோமோன், கோள் சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். கோள்காரனுடைய வார்த்தைகள்…. உள்ளத்தில் தைக்கும் (நீதி.26:20,22) என்றும், பேலியாளின் மகன் கிண்டி விடுகிறான். எரிகிற அக்கினி போன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான். கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான் (16:27-28) என்றும் கூறியுள்ளார். பவுலும், சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும், வீணலுவற்காரர்களாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்காளயும் இருப்பவர்களை எச்சரித்துள்ளார் (1.தீமோ.5:13). தேவபக்தியுள்ளவர்கள் இவைகளுக்கு விலகியிருந்து இவற்றைச் செய்தவர்களையும் மறக்கவேண்டும். பகை விரோதங்களை எழுப்பும். அன்போ சகல பாவங்களையும் மூடும் (நீதி.10:12).

அன்பு மனம்கொண்ட நீங்கள் கைக்கொள்ள வேண்டியதை பவுல் கலாத்தியர் 6:1ல் சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், அவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னை குறித்து எச்சரிக்கையாயிரு என்று கூறுகிறார். ஆவிக்குரிய மனிதன் சோதிக்கப்பட்டவர்களுக்கும், பின்வாங்கிப் போனவர்களுக்கும் உதவி செய்யவேண்டும். அவர்களைக் குறைகூறாமலும் அவர்களது பலவீனங்களைப் பிறரிடம் கூறாமலும் இருக்கவேண்டும்.

எதிரி அல்லது நண்பனைப்பற்றி பொல்லாதவைகளைப் பேசுவதைவிட அவர்களைப் பற்றி ஏதும் சேபாமல் இருப்பது நல்லதல்லவா? உண்மையுள்ள நண்பன் தவறுகளைப் பிறரிடம் கூறாமல் அவனிடமே கூறுவான். விழுந்துபோனவனுக்கென ஜெபிப்பான். இதுவே கிறிஸ்தவப் பண்பு.