June

யூன் 8

யூன் 8

இந்த மனுஷர் வேலையை உண்மையாகச் செய்தார்கள் (2.நாளா.34:12)

இவ்வுலகிலுள்ள நாமனைவரும் தேவனால் படைக்கப்பட்டவர்களேயன்றி படைக்கிறவர்களல்ல. மனித ஆவியால் கொடுக்கப்பட்ட பொருளை ஒழுங்குபடுத்தி அழகுபடுத்தி வைக்கவே இயலும். ஆகவே புதிய கண்டுபிடிப்புகள்மூலம் நாம் பொருள்களை முன் இருந்ததைக் காட்டிலும் அழுகுள்ளதாயும், சிறப்புள்ளதாயும், பயனுள்ளதாயும் மாற்றமுடியும். வாழ்க்கைத்தரம் எவ்வளவுக்கெவ்வளவு உயரவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதற்கேற்ப நாம் உழைக்கவும், சிந்திக்கவும் வேண்டும். படைப்பின்போது தேவன் படைத்த பொருள்களிலிருந்து மாத்திரமே நாம் யாவற்றையும் உருவாக்குகிறோமேயன்றி புதிய படைப்புகள் அல்ல. நாம் குறைவாக உற்பத்தி செய்து, அதிகமான கூலியைப் பெற்றால் நம் நிலைமை உயரும் என்கிற மார்க்சிய கருத்து தறவானது. இது பொருளாதார வாழ்விலும், ஒழுக்கமுள்ள வாழ்விலும் பொய்யான கருத்தாகும். இதனால் உழைப்பவனின் ஆர்வம் குறைகிறது. சமுதாயம் பாதிக்கப்படுகிறது. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதினால் வேலைகள் பெருகுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை. அதிகமாக உற்பத்தி செய்துவிட்டோம் என்பது நமது பிரச்சனையல்ல. அவற்றைச் சரியானபடி பகிர்ந்துகொடுக்கவில்லை, நமக்குத் தேவையானவை கிடைக்கவில்லை என்பதுதான் பொருளாதார பிச்சனைக்கு அடிப்படைக் காரணம்.

ஆலயத்தின் வேலையைச் செய்த அந்தப் பெயர் சொல்லப்படாத உழைக்கும் மக்கள் யாவரும் அக்கறையுடன், கண்ணும் கருத்துமாக நேரம் தவறாமல், பாதுகாப்புடன் உழைத்தனர். நெகேமியா 4:6ல் அவர்கள் வேலை செய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள் எனக் காண்கிறோம். கிறிஸ்தவர்கள் தம் அன்றாடம் கடமைகளைத் தேவனுக்குச் செய்யும் ஆராதனையைப்போல் கருதி செய்யவேண்டும். அவனது மேலதிகாரிகள் கவனிக்கிறார்களோ, இல்லையோ, அவன் உண்மையுன் உழைக்கவேண்டும். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாயச் செய்யுங்கள் (கொலோ.3:23-24).