June

யூன் 10

யூன் 10

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1).

இரட்டிப்பான துன்பத்திற்குப் பதிலாக இங்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் மகிழ்ச்சியினை எடுத்துரைக்கும் தலைசிறந்த அதிகாரங்களில் இதுவும் ஒன்றாகும். இது தேவனுடைய மன்னிப்பில் ஆரம்பமாகிறது. நீதிமான்களின் ஆனந்த முழக்கத்துடன் முடிவடைகிறது. இவ்விரு உயர்ந்த நிலைகளுக்கும் இடையே துயரம் ஆழத்தில் மண்டிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட பள்ளத்தாக்கினைக் கடந்து சென்றால்தான் உயரமான இடத்தை அடையமுடியும். கிப்போவைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் இச்சங்கீதத்தை அதிகமாக விரும்பினார். அவர் இதை அடிக்கடி கண்ணீரோடும், அழுகையோடும் வாசிப்பாராம் அவர் மரணப் படுக்கையில் இருக்கும்போதும், வியாதியின் வேளையிலும் தன் கண்ணெதிரே இச்சங்கீதத்தைச் சுவரில் எழுதச் சொல்லி வாசித்து, வாசித்து ஆறுதலடைந்தாராம்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் அறிக்கை செய்யப்பட்ட மீறுதல்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. திறந்து வைக்கப்பட்ட பாவங்கள் மூடப்படுகின்றன. பாவியை வேதனைப்படுத்தாதபடிக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட பாவங்கள் முழுவதுமாக சுத்திகரிக்கப்படுகின்றன! அல்லேலூயா! தேவனுக்கு முன்பாக எவன் செம்மையாக இருக்கிறானோ அவன் மிகுந்த பாக்கியமுள்ளவன்.

இப்படிப்பட்ட நிலையில் ஒருவன் தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்வான். ஏனெனில், நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர். என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கி காப்பீர் என அவன் அறிவான். தன்னைத் தேவன் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆகவே அவன் களிகூருவான். ஆனந்த முழக்கமிடுவான் (சங்.32:7-11).

எவ்வளவு நிறைவான சந்தோஷம் இது !