July

யூலை 31

யூலை 31

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6).

எப்பொழுதாகிலும் நீங்கள் அதிகப் பசியோடு இருந்ததுண்டா? தாகத்தோடு தவித்ததுண்டா? கெட்டுப்போன உணவுத் துண்டுகளுக்கெனப் போரடிய, பஞ்சத்தில் அடிபட்ட மக்களை நான் கண்டுள்ளேன். தாகத்தால் தவித்து, தண்ணீருக்காகக் கதறிய மக்களையும் நான் கண்டுள்ளேன். பசியும், தாகமும் தவிர்க்க முடியாத கொடிய அனுபவங்கள்.

வேதாகமத்தில் நமக்கு முரணாகத் தோன்றும் காரியங்கள் பல உண்டு. இன்றைய வசனத்தையும் இயேசு கூறிய கீழ்க்கண்ட வாக்குத்தத்தத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான் (யோ.6:35). பசியடையாமல் இருக்கிற ஒருவன் எப்படி பசித்திருக்கும் பாக்கியத்தையும், தாகமடையாமல் இருக்கிறவன் தாகமடையும் பாக்கியத்தையும் பெறமுடியும் எனக் கேட்கத்தோன்றுகிறதல்லவா? இது முரணாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் தெரிகிறதல்லவா? இந்த வாக்குத்தத்தத்தில் ஆண்டவர் இயேசு சரீரத் தேவைகளை, ஆத்மீக வாஞ்சைகளைப் பசி தாகத்துடன் ஒப்பிடுகிறார். ஏனெனில் இந்த வாஞ்சைகள் தவிர்க்க முடியாதவை, அத்தியாவசியமானவைகள். இது இவ்வுலகப் பொருள்களால் திருப்தியடையக்கூடாதவைகள் என்பது உறுதி.