July

யூலை 30

யூலை 30

ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் (லூக்.9:23).

சீடனாக வாழ விரும்புவோர் சீரான வழியில் நடக்க வேண்டும். நமது ஆண்டவர் கூறிய அருமையான வார்த்தைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் கூறியதாவது: யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக்.14:26).

எல்லாவற்றையும் வெறுத்துவிடவேண்டுமென்றால் அதாவது தன் ஜீவனையும் வெறுத்துவிடுதல் என்றால் என்ன? நாம் நம்முடைய பெற்றோரையும், பிள்ளைகளையும், சகோதரரையும் நேசித்து போஷிக்கவேண்டும். நாம் கிறிஸ்தவர் களாக இருக்கிறபடியால் நம் அயலாரையும் அதிகமாக நேசிக்கவேண்டும். அப்படியிருக்க ஆண்டவர் ஏன் இப்படிக் கூறியுள்ளார்? தர்சு பட்டணத்துச் சவுலும் இதைப்பற்றி, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி.3:8) எனக் கூறியுள்ளாரே! நாம் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எல்லாவற்றிற்கும் மேலானவராகக் கொள்ளவேண்டும். நம் உள்ளத்தில் அவருக்கே முதலிடம் கொடுத்து, வேறு எவரும் அல்லது எந்தப் பொருளும் அதை எடுத்துக்கொள்ளாதபடி விழிப்பாக இருக்கவேண்டும்.

நம்மையும், நமக்குள்ள எல்லாவற்றையும் வெறுத்துவிடுவதுதான் உண்மையான சீஷனுக்குரிய தன்மையாகும். தாம் நேசிக்கிறவர்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர் இயேசு ஒருவரே. அவருக்கே நாம் சொந்தமாக வாழுவோம். அவருக்கென பிறரைச் சொந்தமாக்குவோம்.