July

யூலை 9

யூலை 9

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணினார் (1.தீமோ.1:12).

தான் வாழ்வது கிறிஸ்துவின் கிருபையால்தான் என்பதை நன்குணர்ந்தவன் பவுல் (1.கொரி.15:10). தன் ஆண்டவரை அவன் முதன் முதலாகச் சந்தித்து, அவருக்குத் தன்னை ஒப்புவித்தபோது தனக்காக அவர் என்ன வைத்திருக்கிறார் என்பதை அறியாமல் இருந்தான். ஆனால் இயேசு கிறிஸ்து அவனைப்பற்றி அனனியாவிடம், அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார் (அப்.9:16). அவன் அந்தப் பரம தரிசனத்iதிற்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை. எங்கும் சுற்றித் திரிந்து, உயிருக்கு வந்த ஆபத்தையும் கருதாமல் கிறிஸ்துவுக்கென சாட்சி பகர்ந்தான் (அப்.26:19,21). தன்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, அவர் தனக்களித்த பொறுப்பினை உணர்ந்த பவுல் மிகுந்த மகிழ்ச்சியோடு ஊழியம் செய்வதையே தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதினான்.

உனக்கும், எனக்கும் நம் ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் தேவன் ஒரு திட்டத்தையும், நோக்கத்தையும் வைத்துள்ளார். நம்மை உண்மையுள்ளவர்களென்று எண்ணி, இந்த ஊழியத்திற்கு தேவன் நம்மை ஏற்படுத்தினபடியால் நீண்ட காலத்திற்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ, மற்றவர்கள் பார்க்கும்படியாகவோ அல்லது இரகசியமாகவோ எப்படிப்பட்ட ஊழியமாயினும், உறுதியுடனும், ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும், அபாயத்தை எதிர்நோக்கியும் நமக்கென கொடுக்கப்பட்ட சிலுவையைச் சுமந்து செல்லவேண்டும். அவருக்கு உண்மையாக இருக்க விரும்புவோர் அநேக இக்கட்டுகளை எதிர்நோக்கியிருக்கவேண்டும். நீதியின் வழியில் நடந்து, தேவபக்தியும், விசுவாசமும், அன்பும், பொறுமையும், தாழ்மையும் உள்ளவர்களாயிருந்து, நல்ல போராட்டத்தைப் போராடவேண்டும். என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்தரிக்கிறேன். இது எவ்வளவ பெரிய சிலாக்கியம்!