July

யூலை 8

யூலை 8

புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர் (சங்.102:11-2).

புறக்கணிக்கப்பட்ட உள்ளம், கலைந்து செல்லும் மேகம் போன்றும், மறைந்து செல்லும் நிழலைப்போன்றும் நம்பிக்கையற்ற நிலையில் வாழும். அது புல்லைப்போல் உலர்ந்து போகிறேன் என்று கவலையுடன் கூறும். புல் சூரியனால் சுட்டெரிக்கப்பட்டு காற்றினால் பயனின்றி பறக்கடிக்கப்படுவதுபோல் இந்த உள்ளம் எதையும் செய்யாமல் சோர்வுற்று, தேவனுக்கும், மனிதனுக்கும் பயன்படாமல் போய்விடும். இதுதான் உலர்ந்துபோன உள்ளத்தின் கதை.

இதற்கு மாறாக, கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர் என்று எவ்வளவு அழுத்தமாகக் கூறியுள்ளார்! இதே போன்று மனந்திரும்பிய பாவியின் வாழ்விலும் அழுத்தமாகக் கூறும் ஒரு நிலை உண்டு. கிறிஸ்தவர்களாகிய நாம், சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம் எனக் கூறும் பவுல் அடுத்து, தேவனோ, இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்தார் எனக் கூறி முடிக்கிறார் (எபேசி.2:3-4). இயேசு கிறிஸ்துவின் வாழ்வைப் பற்றி கூறிய பவுல், அவரை மரத்திலிருந்து இறக்கி கல்லறையிலே வைத்தார்கள் என்று கூறி முடிக்காமல், தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழும்பினார் என்று அழுத்தமாகக் கூறி முடிக்கிறார் (அப்.13:29-30). இவ்வாறு வேதத்தில் சோர்ந்துபோன உள்ளத்திற்கு உற்சாக மூட்டும்படியாக சில அழுத்தமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆறுதலும், தேறுதலும், நண்பர்களும், உற்றார் யாவரும் போய்விடுவார்கள். ஆனால் இரட்சகர் இயேசுவோ நம்மோடு நிலைத்து நிற்கிறவராயிருக்கிறார். உள்ளம் உடைந்து புல்லைப்போன்று உலர்ந்து போய்விடலாம். ஆயினும் தேவனால், வனாந்தரமும், வறண்ட நிலமும், மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்படிச் செய்யமுடியும் (ஏசா.35:1).

சோர்ந்துவிடாதே! தேவனால் வளம்பெறச் செய்யமுடியும் !