January

ஐனவரி 2

மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான் (எபி.3:5).

இஸ்ரவேலருக்குள் மோசேயைப்போன்ற சிறந்த தலைவனைக் காணமுடியாது. காலங்கள் தோன்றி மறைந்த தலைவர்களுள் சிறந்த தலைவன் என்றே கூறலாம். தலைசிறந்த பெருந்தலைவன் மோசே. இதற்கென அவன் நாற்பதாண்டு காலம் வனாந்தரத்தில் பயிற்சி பெற்றான். இதனால்த்தான் அவன் பார்வோனை எதிர்த்து நிற்கவும், ஒழுங்கீனமான இஸ்ரவேலரை ஒழுங்குபடுத்தி ஒரு பெரும் படையாகத் திரட்ட முடிந்தது. அவன் அவர்களை வானந்தரத்தில் பொறுமையோடும், ஜெபத்தோடும் வழி நடத்தினான். முறுமுறுப்பின்றி தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தனக்கென ஆதாயம் தேடாமல், சுயநலமின்றி மக்களுக்கென உழைத்தான். ஆகவேதான் அவனைப்பற்றி, பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான் என்று பெருமையாக வேதத்தில் கூறப்பட்டு இருப்பதைக் காண்கிறோம். அவன் தன்னைத் தேவனுக்கென்று அடிமையாக்கிக்கொண்டான். இதை உணர்ந்தே அவன், நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்ததையும்…. நினைவுகூரக்கடவாய் (உபா.15:15) எனக் கூறியுள்ளான்.

பணிவிடைக்காரனான மோசேயும், பரம வீட்டின் குமாரனாகிய இயேசுவுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளான். உண்மையுள்ள பணிவிடைக்காரனாக இருப்பது மோசேக்கு மகிமையாக இருந்தது. தேவனுடைய மனுஷனுக்கு இருந்த வாஞ்சையே நமக்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நாமும் பவுலைப்போன்றே நானும் இயேசுகிறிஸ்து வின் ஊழியக்காரன் (அடிமை) (ரோ.1:1). எனக் கூறமுடியாது. நாம் அவரைப்பற்றி அறியவேண்டும். அவரது சித்தத்தின்படி செய்யவேண்டும். இதை நாம் மகிழ்ச்சியுடன் செய்யும்போது அவரது நுகம் மெதுவாயும்… சுமை இலகுவாயும் இருப்பதை உணரலாம். நாமும் அவரது வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர்களாக இருந்தால், மோசேயைப்பற்றி புகழ்ந்து கூறிய தேவன் (எண்.12:7). நம்மைப்பற்றியும் கூறுவார்.