January

ஐனவரி 3

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும் (சங்.71:1).

குழப்பம், வெட்கம் என்கிற இரண்டுக்கும் எபிரெய மொழியில் ஒரே சொல்தான் உள்ளது. இது எவ்வளவு பொருத்தம். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம் எனக் கருதும் மக்களுக்கென்றே இந்த 71ம் சங்கீதம் எழுதப்பட்டுள்ளது எனலாம். இதில் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் யாவும் தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் கிட்டக்கூடியவை.

அவன் தேவனுடைய பிள்ளை. பல ஆண்டுகளாக அவருடன் நடந்தான். அவரையே தன் பலமுள்ள இருப்பிடமாகவும், கன்மலையாகவும் கோட்டையாகவும் (வச.3) தெரிந்து கொண்டான். நித்திய வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவதாக வாக்களித்துச் சென்றுள்ளார் நமது ஆண்டவர். இந்நாட்களில், இவ்வுலக பரதேச வாழ்வில், ஆவிக்குரிய வாசஸ்தல மாகவும் அவர் இருக்கிறார். தன்னை விட்டு விலகாத தேவனுடைய வல்லமையைக் கண்டு கொண்டபடியால் அவன் மிகவும் உறுதியுடன், உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மை பாராட்டவேன் (வச.16) எனக் கூறுpயுள்ளான். அவன் அநேக இக்கட்டுகளையும், ஆபத்துக்களையும் கண்டான் என்பது உறுதி (வச.20). ஆனால் தேவன் இவைகள் யாவற்றிலிருந்தும் மீட்டார் எனவும் கண்டுகொண்டான்.

ஆண்டவரோடு நடக்கும்போது வேதனைகளும், சோதனைகளும், கஷ்டங்களும் வரும். ஆரம்பத்தில் இது நமக்கு விளங்காத புதிராகவே இருக்கும். போகப் போக ஆழ்ந்த பிரச்சனைகளும், பெரிய துன்பங்களும் எதிர்காலத்தில் வந்து சேரும். அப்பொழுது அனுபவத்தில் முதிர்ந்த பரிசுத்தவானுங்கூட தேவன் தன்னை விட்டு விலகிவிட்டாரோ என நினைக்கத் தோன்றும். அந்த வேளையில் அவர்கள் 71ம் சங்கீதத்தை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இச் சங்கீதம் வெட்கம் அடையாதபடி செய்யும் என்ற எளிய ஜெபத்துடன் ஆரம்பமாகி, தேவனுடைய நன்மைகளுக்காகவும், கிருபைக்காகவும் ஆர்ப்பரிப்புடன் நன்றிகூறி முடிவடைகிறது.