August

ஓகஸ்ட் 4

ஓகஸ்ட் 4

ஜாதிகள் கொந்தளித்து,…. கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும்… எழும்பி(னர்) (சங்.2:1-2).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே பகைக்கப்பட்டார். சிருஷ்டி கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்திற்கும், ஸ்தீரியின் வித்திற்கும் பகையை உண்டாக்கி வைத்தாரல்லவா? (ஆதி.3:15). அவர் இவ்வுலகில் இருந்த காலத்திலும் அதிகமாக வெறுத்துத் தள்ளப்பட்டார். ஏரோது இராஜா தன் கொடிய சேவகரை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப்புறத்திலுள்ள ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லும்படி கட்டளையிட்டு நிறைவேற்றினான். ஆனால் இம்மானுவேல் என்றென்றும் நம்மோடிருக்கும்படி தப்பினாரல்லவா! அவரை எப்படி கொலை செய்வது என்று பரிசேயரும், ஏரோதியரும் அவரது ஆரம்ப கால ஊழியத்தின்போதே சதித் திட்டம் தீட்டினர்.

குஷ்டரோகத்தினால் பிடிக்கப்பட்ட அந்த மனிதனைத் தொட்டதுமுதல், கெத்சமனேயில் மல்குஸ் காதைத் தொட்டு குணமாக்கினதுவரையில் அவரது ஊழியம் முழுவதிலும் இரக்கத்தையும், மன உருக்கத்தையுமே வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட இரட்சகர் மக்களால் வெறுக்கப்பட்டு, தள்ளப்பட்டு, துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவிக்கிறவருமாக மாறக் காரணம் யாது?

இன்றும் அவரை நேசிப்போர் பலர் உண்டு. ஆயினும் அவரை மறுத்து வெறுத்துத் தள்ளுவோர் இலட்சக்கணக்கில் உண்டு. அவர்கள் சமாதானப் பிரபு தங்களை ஆளுகை செய்ய விரும்பாதவர்கள். ஆயினும் அபிஷேகம் பண்ணப்பட்டவரை என்றென்றுமாகத் தள்ளிவிடமுடியாது. ஏனெனில் தேவன், எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைகண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் (பிலி.2:9-11).