August

ஓகஸ்ட் 5

ஓகஸ்ட் 5

தேவனே நியாயாதிபதி. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங்.75:7).

ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திப்பானேன்? என்று கேட்ட சங்கீதக்காரன் பதிலையும் கண்டுகொண்டு, கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியில் ராஜா க்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணினர் (சங்.2:1-2) என்று கூறியுள்ளான். உன்னதமானவருடைய ஆளுகையைக் குறித்து அவர்கள் அறியவில்லை. இதையே சங்கீதம் 103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபிக்கிறார். அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது எனக் கூறுகிறது. இவ்வுலகத்தின் அரசாங்கங்களைவிட அவரது இராஜ்யம் மேலானது. கொடியவரும், அதிகார வெறியரும் ஆட்சிசெய்யும்போது, தேவன் அமைதியுடனுடம் இல்லாதவர்போலும் தோன்றினாலும், கடைசி அதிகாரம் முழுவதும் அவர் கையில்தான் இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.

இரண்டாம் உலகப் பெரும் போர் முடிந்த பின்பு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பே மக்கள் முசோலினி யார்? கிட்லர் யார்? என்று கேட்கத் துவங்கினர். தங்களுடைய வெற்றி நிலைத்து நிற்கும் என்று கனவு கண்டுகொண்டிருந்த அந்த இரண்டு சர்வாதிகாரிகளும் நம்மைப் போன்ற மனிதர்களாயிருந்தும் வெற்றியே கிட்டும் என்று நம்பினர்.

தேவனோ பேராசையுள்ளவர்களுக்கும், தேவனற்றவர்களுக்கும் மேலானவர். அவர்களது பொல்லாத திட்டங்களுக்கும் மேலான வல்லமையுள்ளவர். எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா? மனிதன் தன்னை எவ்வளவாய் உயர்த்தினாலும் தேவனை எட்ட இயலாது. அவரே மேலானவர். சர்வ வல்ல தேவன் பொறுமையுடன் இருக்கிறார். அவர் போதும் என்று சொல்லும்வரை மட்டுமே கொடுங்கோன்மை நிலைத்து நிற்கும். அவர் உலகையும் ஆளுகிறவர், உன்னையும் ஆளுகிறவர்!