April

ஏப்ரல் 13

ஏப்ரல் 13

கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்… எழுதியிருக்கிறபடியே நடந்தார் (ரோ.15:3).

நான் இவ்விதமாக நடந்தேனா? நடக்க விரும்புகிறேனா? இப்படி நடப்பது அவசியம்தானா? இது சரியான முறையா? என்று ஒவ்வொரு விசுவாசியும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்தவ வாழ்விற்குரிய பண்புகளை நாம் வளர்த்துக் கொள்வதற்குக் கீழக்கண்ட சில காரியங்கள் பயன் தரும் என நம்புகிறேன்.

(1) உலகத்தோடு உறவு கொள்ளாமை வேண்டும் (ரோ.12:1-2). இதையே ஜான் வெஸ்லி, கிறிஸ்துவின் மேலுள்ள என் அன்பைக் குறைத்துப்போடும் யாவும் உலக சிநேகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

(2) மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்கவேண்டாம். ரோமர் 14ம் அதிகாரம் முழுமையும் இதைப்பற்றிக் கூறுகிறது.

(3) தேவனுடைய வார்த்தையால் உணர்த்தப்பட வேண்டும். தேவன் நமக்கென முன்னதாகவே யாவற்றையும் செய்து முடித்துள்ளார். இதில் நம் அயலாரின் நன்மைகளும் அடங்கியுள்ளன.

(4) அயலாரின் கருத்துக்களுக்கும் இடங்கொடு. நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள் (14:13).

(5) பிறனுக்குப் பிரயோஜனமாக வாழவேண்டும். உங்கள் நன்மைகள் தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள் (14:16).

(6) அனைவருக்கும் பயனுள்ளபடி வாழவேண்டும். நம் வார்த்தைகளும், செய்கைகளும், அறிவும், சமாதானமும், சந்தோஷமும் பிறரைத் தேவனுடைய சத்தியற்திற்குள் கொண்டு வர உதவ வேண்டும்.

(7) மனச்சாட்சியைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பலவீனமுள்ள கிறிஸ்தவனின் மனச்சாட்சியைப் புண்படுத்தாதபடி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

(8) கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொள். நாம் ஒவ்வொருவரும் நம் அயலானின் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சிக்கென பாடுபட வேண்டும். ஏனெனில் கிறிஸ்துவும் தமக்கே பிரிமயாய் நடக்கவில்லையல்லவா?