April

ஏப்ரல் 14

ஏப்ரல் 14

கர்த்தாவே, மனுஷருடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன் (எரேமி.10:23).

தன்னால் எவ்வளவு வேலை செய்யமுடியும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டும். ஏனெனில் ஒரு காரியத்தில் ஒருவன் தன் தகுதியைக் கடந்து செயல்ப்பட முயன்றால், விரைவில் தன் அறியாமையை வெளிப்படுத்துவான். உண்மையான தேவவழிநடத்துதலிலும் இப்படித்தான். நாம் நம்மால் ஏதும் ஆகிறதில்லை என உணரவேண்டும். ஏனெனில் நமக்கு தேவனுடைய வழிகளை உணர்வதற்குப் போதுமான அறிவும், உணர்வும் கிடையாது. நாம் சர்வ ஞானமுள்ள, எல்லாம் அறிந்த தேவனுடைய ஆலோசனைக்குச் செவிகொடுக்கவேண்டும்.

காலங்களைக் குறித்த அறிவும் நமக்குக் கிடையாது. உடனே அந்தக் கதவகள் திறக்கப்படவேண்டும் அல்லது இன்றே நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். தேவசித்தத்தின்படி நம் வேலைகளில் தாமதம் ஏற்படும்போது நாம் கவலைப்படுவது இயல்பு. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மை நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும் ஆண்டவர் நல்லவராயிருக்கிறார். ஆகவே நாமும், கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும் (சங்.25:4) என்று சங்கீதக்காரனைப்போன்று ஜெபிக்கலாமே!

நம்முடைய குறைவுகளையும், பொறுமையின்மையையும் உணர்ந்து தாழ்மையுள்ள இருதயத்தோடு தேவனிடம் அறிக்கையிடும்போது, அவர் சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார் (சங்.25:9). தாழ்மையுள்ள இருதயத்தில்தான் தேவனுடைய நடத்துதலை உணரமுடியும். தாழ்மையுள்ளவர்களுக்கு அவர் உதவியளித்து தமது திறமையுள்ள பரலோகத்தின் கரத்தினால் வழிநடத்துகிறார்.