April

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்… அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் (2.நாளா.32:7)

புதிய இங்கிலாந்தின் கரையைவிட்டு தூரமாய்ப்போன ஒரு கப்பல் பயங்கரமான புயலில் சிக்கித் தவித்தது. அதிலிருந்த பயணிகள் யாவரும் பயந்து நடுங்கினர். எந்த நேரத்திலும் கப்பல் மூழ்கி, நாம் மடிந்துபோவோம் என்றிருந்தனர். குழப்பமடைந்த ஒரு பெண் கொந்தளிக்கும் அலைகளையும், சுழலில் சிக்கித் தவிக்கும் கப்பலையும் தெளிவாய்க் காண விரும்பி, கப்பலின் மேல் தட்டிற்கு ஏறினாள். சிறிது நேரத்தில் கீழே திரும்பி வந்தாள். பயத்திற்குரிய அறிகுறி ஏதுமின்றி வந்த அவள், மாலுமியின் முகத்தில் எந்தவித அச்சமுமில்லையென்ற தன் பயம் நீங்கியதற்குரிய காரணத்தைத் தெரிவித்தாள்.

தலைவனின் தைரியம் யாவருக்கும் அதிக ஊக்கமளித்தது. அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் (வச.7) என்றான் எசேக்கியா இராஜா. அவனோடிருக்கிறது மாம்ச புயம். நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான். யூதாவின் இராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள் (வச.8).

அந்த இராஜா ஒரு மதவெறியனல்ல. அவன் அசீரியரின் படையெடுப்பைச் சமாளிக்க எல்லாவிதமான ஆயத்தங்களும் செய்து வந்திருந்தான் (வச.3-5). தன் படைத்தலைவர்களுக்கு அவன் தைரியமூட்டினான். வாக்கு மாறாத தேவனிடம் தன் இருதயத்தின் பாரத்தை வைத்துவிட்டான். உண்மையுள்ள தேவன் தன்னைக் கைவிடமாட்டார் என்று அவன் மீண்டும் உறுதி செய்துகொண்டான்.

பிறரை நாம் உற்சாகப்படுத்தி, தைரியமூட்டுவதற்காக தேவனை நாம் நமது நம்பிக்கையாகக் கொள்ளவேண்டும். அப்பொழுது நாமும் பயப்படாதிருப்போம்.