இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் சென்றதாகவும் சரித்திரம் கூறுகிறது. வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், மிக விலையுயர்ந்த பலவித வண்ணக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இச்சிறந்த கட்டிடத்தின் மேன்மை இதன் கட்டிடக்கலை நுட்பத்தையோ, கைவன்மையையோ, செலவிட்ட பொருட் செல்வத்தையோ சார்ந்ததாயிராமல், அது கட்டப்பட்ட நோக்கத்தையும் சார்ந்துள்ளது. மன்னன் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அன்பின் நிமித்தம், அவளுக்காக எழுப்பின ஒப்பற்ற அன்பின் சின்னமே இந்த தாஜ்மகால் ஆகும். இந்த அன்பின் உன்னத சின்னத்தைக் கண்டுகளிக்க இன்றும் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் திரண்டு வருகின்றனர்.
அன்புடையீர்! உலகில் மிகச்சிறந்த அன்பின் சின்னம் எது என்று அறிந்திருக்கிறீர்களா? அது மூன்று முக்கிய கண்டங்கள் சந்திக்கும் இஸ்ரவேல் நாட்டிலுள்ள எருசலேம் என்னும் நகரில் உள்ள கல்வாரி என்ற குன்றில் உள்ளது. இது ஆச்சரியமாக உள்ளதா? அந்த இடத்தை நீங்கள் எப்பொழுதாகிலும் கண்டிருக்கிறீர்களா? இப்பொழுது வாருங்கள்! நாம் போய், அந்த அன்பின் சின்னம் என்னவென்று கண்டு, அவ்வன்பில் திளைத்து இன்புறுவோம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் கல்வாரிக் குன்றில் சரித்திரத்தின் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி காலத்தையும், சரித்திரத்தையும், மனுமக்களையும் இரு கூறுகளாகப் பிரித்துள்ளது. “நாம் பாவிகளாய் இருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”(ரோமர் 5:8). “பிதாவாகிய தேவன் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள்”(யோவான் 3:1). இந்த இறை வசனங்கள் கூறும் உண்மைகளாவன:
01. மனிதர்களாகிய நாம் அனைவரும் பாவ மக்களாக உள்ளோம்.
நாம் அனைவரும் பாவம் செய்து தேவ மகத்துவத்தை இழந்து விட்டோம்.(ரோமர் 3:23) என் இருதயம் சுத்தமாக இருக்கிறது. நான் பாவங்களுக்கு விலகி தூய்மையாயிருக்கிறேன் என்று சொல்லக் கூடிய மனிதர் எவரேனும் இவ்வுலகில் உண்டோ? இவ்வுலக மக்கள் அனைவரும் தூய, நீதியுள்ள தேவனுக்கு முன்பாகக் குற்றம் புரிந்தவர்களாகவே உள்ளனர். ஒரே மனிதனாலே (படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம் மூலமாக) பாவமும், (அந்த) பாவத்தினாலே, மரணமும் உலகத்தில் பிரவேசித்தது”(ரோமர் 5:12) என்றும், “பாவத்தின் சம்பளம் மரணம்”(ரோமர் 6:23) என்றும் திருமறை தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
02.தேவன் இத்தகைய மனுமக்களையும் நேசித்து அன்பு கூறுகிறார்.
என்ன ஆச்சரியம்! நாம் பாவிகளும், துரோகிகளுமாக இருப்பினும், பெரும் பாதகர்களாக நாம் இருப்பினும், தேவன் அளவு கடந்து நம்மீது அன்பு கூறுகிறார். தேவன் அன்பு கூறுபவராகவே இருக்கிறார். இதுவே தேவனுடைய பண்பு. நம்மில் உள்ள பாவத்தையோ பாவத் தன்மையையோ அல்ல, கொடும் பாவியாக உள்ள நம் அனைவரையும் அவர் அன்பு கூர்ந்து நேசிக்கிறார். அவர் பாவத்தை மன்னித்து நமக்குப் புதியதோர் வாழ்வை அருளும்படி காத்து நிற்கிறார். இதற்காகத் தம்மண்டை வரும்படி நம்மை அழைக்கிறார்.
03.இயேசு கிறிஸ்து பாவிகளாக இருக்கும் நமக்காகவே மரித்தார்.
தேவன் அன்புள்ளவராக மட்டுமல்ல, நீதியும் தூய்மையுள்ளவராகவும் இருக்கிறார். தூய்மை, நீதி, நேர்மை, அன்பு ஆகிய இம் மூன்று பண்புகளும் சரிசமமாகவே அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. இதனிமித்தம் அவர் பாவத்தை அவசியம் தண்டித்து, நீதியான தீர்ப்பைக் கொடுக்க வேண்டும். “ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி 9:27). இதுவே பாவத்துடன் மரிக்கும் மனிதருடைய மாற்றமில்லா முடிவாகும். தேவன் பாவத்திற்கு கொடுக்கும் நீதியான தீர்ப்பு, நித்திய மரண தண்டனையாகிய நரகமே.
ஆயினும், தேவன் துதிக்கப்படத்தக்கவராக உள்ளார். அவர் மனிதர்களாகிய நம்மீது வைத்துள்ள பெரிதான அன்பினிமித்தம் பாவிகளாகிய நாம் தேவ தண்டனைக்குத் தப்பித்துக் கொள்வதற்கான ஒரே நல்வழியை உருவாக்கியுள்ளார். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). மெய்தேவனுடைய ஒரே பேறான குமாரனே, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து. உங்களையும் என்னையும் போல அவர் ஒரு மனித சரீரம் எடுத்துக் கொண்டு, ஒரு கன்னியின் வயிற்றில் பாவம் அற்றவராக பிறந்து, தூய வாழ்க்கை நடத்தி, உலக மக்கள் யாவருக்கும் பதில் ஆளாக சிலுவை மரத்தில் மரித்து ஜீவபலியானார்.
அவர் தம் சொந்த சரீரத்தில் நம் அனைவரின் பாவ சாபங்களையும் ஏற்றுக் கொண்டு, கல்வாரிக் குன்றில் நாட்டப்பட்ட சிலுவை மரத்தில் நமக்காகவே மரித்தார். பாவத்தினிமித்தம் நாம் பெறவேண்டிய தண்டனையாகிய மரணத்தையும், நரகவேதனையையும் தாமே சுமந்து தீர்த்தார். அவரே நமது பாவங்களைக் கழுவுவதற்கென்று கிருபையின் ஆதாரமாகி பலியானார். நமது பாவங்களைக் கழுவிச் சுத்திகரிக்க அவர் சிலுவையில் தமது தூய இரத்தத்தைச் சிந்தினார். “இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம்(நமது) சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்”(1யோவான் 1:7).
ஆம், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களுக்காகவே மரித்தார். ஆயினும் அவருடைய மரணத்தோடு எல்லாம் முடிவடைந்து விடவில்லை. அடக்கம் செய்யப்பட்ட அவர், மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, பலருக்கும் காட்சியளித்து, தாம் உயிரோடுள்ளதை உறுதிப்படுத்தினார்.
மற்றும் அநேக உறுதியான செயல்களினால் தாம் உயிரோடு எழுந்துள்ளதை நிரூபித்துக் காட்டி, விண்ணுலகம் போனார். அங்கு தம்முடைய மாட்சிமையிலும், மேன்மையிலும் தேவனுடைய ஆசனத்தின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே எல்லோருக்கும் ஆண்டவர்! இயேசுக்கிறிஸ்துவை அண்டிக்கொள்ளும் அனைவருக்கும், அவருடைய சிலுவைப் பலியினால் பாவ மன்னிப்பாகிய மீட்பு உண்டு.
இவ்வுலகில் மெய்யன்பின் உன்னதச் சின்னம், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பாவ மனிதனுக்குப் பதிலாகப் பலியான சிலுவை தான். “நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது: நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாக இருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”(ரோமர் 5:7,8).
இது தகுதியற்ற நம் ஒவ்வொருவருக்காகவும் காண்பிக்கப்பட்ட இறையன்பு,
இறைவன் தம்மையே மரணத்தில் ஊற்றிவிட்ட அன்பு, உங்களையும் என்னையும் கவரும் அன்பு, நம் அனைவரின் பாவத்திற்காக மரித்துப் பலியான அன்பு, இந்த சிலுவை மரணமே மெய்யான அன்பின் சின்னம், ஒப்பற்ற அன்பின் சின்னம்!
அந்த சிலுவையில் தம்மை ஒப்புவித்த ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவிற்கு முன் நீங்களும் அடிபணிவீர்களா? அவ்வாறு பணிவீர்களாயின் உங்கள் பாவம் நீங்கி, பாவத்திற்காக வரும் தண்டனையாகிய நரக ஆக்கினையாவும் விலக்கப்பட்டு, இரட்சிக்கப்படுவீர்கள். இந்த மகா அன்பின் சின்னத்தின் மேன்மைதான் எவ்வளவோ!