நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம்.
மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன் சுமக்கிற சுமைகள் யாவை? அச்சுமைகளைப் போக்கும் வழிமுறை உண்டா?
மனிதனுக்கு உழைப்பு ஒரு சுமை
“வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?” (பிர 3:9). உழைப்பே மனிதனின் பெரும் சுமையாக உள்ளது. “நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைக்கிறான்” என்பது வழக்குச் சொல். மூட்டை சுமக்கிற உழைப்பாளி முதல் பெரும் அலுவலங்களில் குளிர்சாதன அறைகளிலிருந்து பணியாற்றும் உயர் அதிகாரி வரை, அவரவர் செய்யும் வேலைகள் யாவும் அவரவர்களுக்கு பெரும் சுமையே. முதன் முதலில், மனிதன் பாவம் செய்த போது தேவன் அவனைப் பார்த்து, “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்பும் வரைக்கும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்” (ஆதி 3:19) என்று சபித்தார். ஆகையால் தான், எம்மனிதனும் தன் பிழைப்புக்காகச் செய்யும் எந்தத் தொழிலும் அவனுக்குப் பெரும் பாரமாகவே உள்ளது.
இதை அவன் சுமக்க முடியாததினால்தான் எத்துறையில் உள்ளவர்களும் இன்று காரணங்கள் பல கற்பித்து, எதிர்ப்புகள் தெரிவித்து, வேலை நிறுத்தம் செய்கிறார்கள். பாவத்தின் காரணமாய் விழுந்த தேவ சாபம் மனிதன்மேல் இருக்கும்வரை தொழிலாளரின் பிரச்சினைக்கும், அவன் சுமக்கும் பாரத்திற்கும் தீர்வு காண முடியாது.
மனிதனுக்கு மதம் ஒரு சுமை
“மனிதன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான். அதை வணங்கிப் பணிந்து கொள்கிறான். அதைத் தோளில் எடுத்து, அதைச் சுமந்து அதைத் தன் ஸ்தானத்தில் வைக்கிறான்” (ஏசா 46:7) என்று திருமறை மனிதர்களின் மதச் செயல்களை எடுத்துக் கூறுகிறது. மனிதன் தெய்வங்களை சுமந்து கொண்டு இருக்கிறான். ஆம், மனிதன் ஏற்படுத்திய மதக்கோட்பாடுகள், நோன்புகள், விரதங்கள், அனுசாரங்கள் அனைத்தும் சுமக்கிறதற்கு அரிய பாரமாகவே உள்ளன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அந்நாட்களில் இருந்த குருக்களையும், மதத்தலைவர்களையும் பார்த்து, “உங்களுக்கு ஐயோ! சுமக்க அரிதான சுமைகளை மனிதர் மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவுமாட்டீர் கள்” (லூக்கா 11:46) என்று அவர்களை கண்டித்தார். ஆம் நண்பரே! நீர் மதச் சடங்குகளைக் கடைப்பிடித்து இளைத்து, மனச்சோர்வுற்றிருக்கிறீர் அல்லவா? மனித இருதயத்தின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் பாவத்தை, இருண்ட குற்ற மனசாட்சியை அகற்ற, மனிதன் செய்யும் ஓயாத முயற்சிகளே இந்த சமயச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஆகும். மனிதனுக்கு இது எத்தனை பெரிய பாரம் பாருங்கள்!
மனிதனுக்கு வியாதி ஒரு சுமை
மனிதன் நோயையும் வேதனையையும், உடல் ஊனத்தையும் சுமந்து, துக்கித்து நிற்கிறான். சிலர் குருடர், சிலர் செவிடர், சிலர் தீராத நோய் கொண்டோர். மற்றும் பலர் எண்ணிலடங்கா கொடும் நோயினால் பீடிக்கப்பட்டோர். மருத்துவத் துறையின் வளர்ச்சியும், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பும் நோய்களின் வலிமையை மிஞ்சிவிடவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் பெருக்கத்தை ஈடு செய்துவிடவில்லை. பாவத்தின் விளைவும், பாவத்தின் சம்பளமாக இருக்கும் சாவும், மனிதனின் உடலில் குடிகொண்டிருக்கும்வரை, மனிதன் நோய் நொடியைச் சுமக்கிறவனாகவே இருப்பான்.
மனிதனுக்கு சாவு ஒரு சுமை
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருநாள் நாயீன் என்ற ஓர் ஊருக்குச் சென்ற போது, இறந்துபோன ஒரு வாலிபனைச் சுமந்து கொண்டு வருவதைக் கண்டார். அவர் அருகில் சென்று, பாடையைத் தொட்டு, மரித்த அவனை உயிரோடு எழுப்பினார். பாடையில் மரணமே இருந்தது. அதை அவர்கள் சுமந்து வந்தனர். ஆம்! மனிதன் மரணத்தையும் சாவையும் சுமந்துகொண்டுதான் இவ்வுலகில் அலைகிறான். மரணத்திற்குப் பயப்படாதோர் எவர்? மரணபயம் நாள்தோறும் நம்மை அழுத்திக் கொண்டே இருக்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்”, (ரோமர் 6:23) என்றும், ஜீவ காலமெல்லாம் மனிதன் மரண பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான் என்றும் மரணத்தின் அடிப்படைக் காரணத்தை வரையறுத்தியும் வேதம் கூறுகிறது. நண்பரே! இதை நம்புவீரா?
நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்ட கடவுள்
“மெய்யாகவே கிறிஸ்து நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,” என்றும், “கர்த்தரே நம் எல்லோருடைய அக்கிரமத்தையும், இயேசு கிறிஸ்துவின் மேல் விழப்பண்ணினார்” என்றும் “அநேகருடைய அக்கிரமத்தை கிறிஸ்து சுமந்தார்” என் றும் அவரைக் குறித்துப் பரிசுத்த வேதம் கூறுகிறது.
ஆம்! மனிதன் சுமக்கும் எல்லாப் பாரங்களையும் போக்கி, இளைப்பாறுதல் காணும் வழியினைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திறந்துள்ளார். அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தபடியினாலே, நம்முடைய சுமைகளை அறவே நீக்கிப்போட அவர் ஒருவரே அதிகாரம் பெற்றுள்ளார். “இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” என்று அவரைக் குறித்து திருவார்த்தை கூறுகிறது. நம்முடைய பாவங்கள் யாவற்றிற்கும் சிலுவையில் மட்டுமே தீர்வு உண்டு. ஆகையால் பாவத்தின் அடிப்படையில் மனிதன்மேல் விழுந்த எல்லாவித சுமைகளும், பாரங்களும் நீக்கி, ஆன்மாவிலும் சரீரத்திலும் விடுதலை வழங்கும் வழியானது நமக்கு இப்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இளைப்பாறுதல் தரும் இயேக கிறிஸ்து
அன்பர்களே! இனியும் உங்கள் பாரங்களைச் சுமந்து களைத்துப்போக வேண்டாம். நம்முடைய சுமைகள் எதுவாயினும், பாரங்கள் எவ்வளவாயினும் இரட்சகராகிய இயேசுவினிடம் அவற்றிற்குத் தீர்வு உண்டு. அவரே நமக்கு உண்மையான இளைப்பாறுதலைத் தருகிறார். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்” (சங் 55:22) என்று விளம்பிய தேவன் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆதாரமாகக்கொண்டு, அவரிடம் உம் சுமைகள் அனைத்தையும் இறக்கி வைத்துவிடுங்கள். நாம் சுமக்க இயலாத பாரங்களுக்காகவே, அவர் கொடூரச் சிலுவையைத் தம் தோளின் மேல் சுமந்தார். தாம் சுமந்த அச்சிலுவையிலே தொங்கி மரித்து நமக்கு விடுதலையையும் மீட்பையும் தந்துள்ளார். அவரிடம் வந்து உங்கள் பாரங்களையும் சுமைகளையும் இறக்கி வையுங்கள். பலவித சுமைகளைச் சுமந்து சோர்வுற்றிருக்கிற நம்மைப் பார்த்து, “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங் கள்” என்று கூவி அழைத்து, “நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்”, என்று வாக்களிக்கும் இயேசு கிறிஸ்துவிடம் இப்பொழுதே வாரீர் !!
நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்து இரத்தம் சிந்தின நல் மீட்பராம் இயேசுவிடம் வரும்போது நம்முடைய பாவபாரமெல்லாம் நீங்கி நிம்மதியும் சமாதான மும் கிடைக்கும்.