சகோ. பக்த் சிங்
இழப்பும் மீட்பும்
[ தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் ]
அத்தியாயம் – 1
மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை
(1 சாமுவேல் 30-ஆம் அதிகாரம்)
தாவீதும் அவனது வீரர்களும் பெலிஸ்தரோடு போர் முனைக்குச் சென்றிருந்த சமயம், சவுல் அரசனால் துரத்தப்பட்டு, வேட்டையாடப்பட்ட பறவை போலிருந்தான் தாவீது. எதிரிகளின் நாடாகிய பெலிஸ்தியாவிலே தஞ்சம் புகுந்திருந்தான், இப்பொழுது பெலிஸ்தரும் தாவீதின்மீது ஐயங்கொண்டு, போர்க்களத்திலிருந்து தாவீதையும் அவ னோடிருந்தவர்களையும் வெறுப்புடன் திருப்பியனுப்பி விட்டனர்! தாங்கள் தங்கியிருந்த ஊராகிய சிக்லாகுக்குத் திரும்பும்பொழுது, தாவீது கண்ட காட்சி என்ன? சிக்லாகு சுடுகாடாகக் கிடந்தது! எவரும் அங்கேயில்லை! ஏற்கனவே மனம் நொந்து, உடல் களைத்து வீடு திரும்பும் வீரருக்கா இந்த வரவேற்பு! நடந்தது என்ன? தாவீதும் அவனோடிருந்தவர்களும் மா பெரும் நஷ்டத்தையும், தீங்கையும் அடைந்திருந்தனர். அமலேக்கியர் அவர் பெண்டீர் – பிள்ளைகளைக் களவாடி, பண்டம்-பாடிகளைக் கொள்ளையிட்டு, வீடுகளையும் – கூடாரங்களையும் நெருப்பினால் சுட்டெரித்து விட்டு, எங்கோ சென்று விட்டனர். ஒன்றும் எஞ்சவில்லை !
உள்ளமுருக்கும் காட்சி! வலிமை வாய்ந்த வீரர் வாய் விட்டழுதனர். எதையும் தாங்கும் இதயங்கள் துக்கத்தால் துவண்டன. அவர்களது இழப்பு அவ்வளவு பெரியது! இடம், பொருள், ஏவல் நோக்காது எங்கும், எவ்வேளையும், எளிதில் உணர்ச்சி வசப்படும் பெண்கள் அலறி அழுவதை நாம் கண்டிருக்கிறோம். வீட்டிலோ, வெளியிலோ, வண்டியிலோ, ரயிலிலோ, ஆலையிலோ, சாலையிலோ, பகலிலோ, இரவிலோ, சிறிய காரியத்திற்கும் அழுது விடுவர். அது அவர்களது இயல்பு. அதைக்கண்டு ஏனையோர் வியப்படைவதில்லை. ஆனால் ஆண்கள் அவ்விதம் அழுதால் அனைவருக்கும் ஆச்சரியமாயிருக்கும். தாங்க முடியாத, தவிர்க்க முடியாத துயரமிருந்தாலன்றி, ஆண்கள் பொது இடங்களில் சத்தமிட்டு அழுவது இல்லை. ஆனால் போர்கள் பல பார்த்த பராக்கிரமசாலிகள் “அழுகிறதற்கும் தங்களில் பலமில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்” (வ.4) என்பது இங்கு நாம் கவனிக்கத்தக்கது. நாவறண்டு, தொண்டையடைத்து, தலைவலியெடுத்து, மேற்கொண்டு வடிப்பதற்கும் கண்ணீரின்றி, சத்தமிடுவதற்குச் சக்தியின்றி, சலிப்படைந்து விட்டனர். வாழ்க்கையே கசந்து விட்டது. அவர்களது இழப்பு அத்தனை பெரியது! இழந்ததை மீண்டும் பெறுவோம் என்னும் நம்பிக்கையே இல்லை !
உலகப் பிரகாரமாக, நம்பித்கைக்குச் சிறிதேனும் இடமில்லாவிட்டாலும், நாம் காண்பதென்ன? தேவனுடைய கிருபையினாலும், ஒத்தாசையினாலும் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டார்கள் என்றும், அதற்கு அதிகமாகவும் பெற்றுக்கொண்டார்கள் என்றும், அதே அதிகாரத்தில் வாசிக்கிறோம். தங்களது பழைய கடன்களை யெல்லாம் தீர்த்துக் கொள்ளுமளவிற்குத் தாங்கள் இழந்ததையெல்லாம் மீட்டுக்கொண்டதுடன், மிகுதியான கொள்ளைப்பொருளையும் அடைந்தார்கள். சில ஆண்டுகளாகவே, அவர்கள் சென்றவிடமெல்லாம் தங்களது உணவிற்கும், உறைவிடத்திற்கும் கூடத் தாராளமாய்க் கொடுக்க இயலவில்லை. பிறரை நம்பி வாழவேண்டிய நிலைதானிருந்தது. ஆகிலும், ஓரிடத்தில் எவ்வளவு காலம் தங்கியிருந்தாலும் சரி, அவர்களுக்குத் தேவையான யாவும் கிடைத்து வந்தன. பிறர் தனக்குச் செய்த உபகாரங்களையெல்லாம் தாவீது குறித்து வைத்திருந்தான் என்று வேதத்திலிருந்து நாம் அறிகின்றோம்.
பல நல்ல மனிதர்கள் தாவீதுக்கும், அவனோடிருந்தவர்களுக்கும் வேண்டிய காய்கறி, பருப்பு, மசாலை, இறைச்சி முதலான உணவுப் பதார்த்தங்களை அளித்து வந்தனர். யார் யார் தனக்குச் சிறப்பான பண்டங்களை உவப்புடன் தந்தனர் என்றும், யார் கெட்டுப்போன பண்டங்களை வேண்டா வெறுப்புடன் தந்தனர் என்றும் தாவீது அறிந்திருந்தான். எங்கெல்லாம் தங்கியிருந்தான் என்பதை 27 முதல் 31-ம் வாக்கியங்களில் காண்கிறோம். யார் யாருக்கெல்லாம் வெகுமதிகளை அனுப்பினான் என்று 31-ஆம் வாக்கியத்தில் காண்கிறோம். ஒரு சில நாட்களோ, அதற்கு அதிகமாகவோ, தனக்கு அடைக்கலம் அளித்த அன்பர்களுக்கெல்லாம், தான் பெற்ற நன்மைகளுக்குக் கைமாறாக, இப்பொழுது வெகுமதிகளை அனுப்பினான். இவ்விதமாக தான் பட்டிருந்த கடன்களைக் கொடுத்துத் தீர்த்தான்.
நாம் எதையாவது இழக்கும்போது மிகவும் வருந்துகிறோம். நாமெல்லாருமே எதையாவது, எப்பொழுதாவது இழந்துதானிருக்கிறோம். எனவே இழப்பினால் ஏற்படும் துன்பத்தை அறிவோம். தாங்களடைந்த இழப்பைக் குறித்து சிலர் அழுதிருக்கலாம். சிலர் தங்களது பணத்தையோ, சாவியையோ, பேனாவையோ தொலைத்திருக்கலாம். அல்லது செருப்பையோ, குடையையோ எங்காவது மறந்து விட்டு வீடு திரும்பியிருக்கலாம். சிலர் இரயிலில் தங்களது படுக்கையையோ, கைக் கடிகாரங்களையோ இழக்கக் கொடுத்திருப்பர்! அற்பமான பொருளோ, மதிப்புள்ள பொருளோ எதுவானாலும் சரி, எதையும் நாம் இழக்கும்போது மிகவும் வருந்துகின்றோம். நஷ்டம் நமக்கு வேதனையளிக்கின்றது. ஆனால், அதை நாம் திரும்பப் பெறும்பொழுதோ மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அதிலும், திரும்பப் பெறுவோமென்ற நம்பிக்கையற்றுப் போனபிறகு, இழந்துபோன பொருளை மீண்டும் பெறுவோமென்றால், நாம் அடையும் சந்தோஷத்திற்கோர் எல்லையிராது.
சிறிது காலத்திற்கு முன்பு, ஹைதராபாத்திலிருக்கும் “எபிரோன்” ஆராதனை வீட்டில், தொலைபேசி கட்டணம் கட்டுவதற்கென ஒரு சகோதரனிடம் 130 ரூபாய் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட தினத்தன்று அவருக்கு அதிக அலுவலிருந்ததால், மறுநாள் கட்டி விடலாம் என்று பில்லையும்.பணத்தையும் ஒரு மேஜையினுள் வைத்துவிட்டார். அதற்கடுத்த நாளும் அதிக அலுவலாயிருந்ததால், கட்டமுடியவில்லை. மூன்றாம் நாள், கட்டிவிடலாம் என்ற எண்ணத்துடன், அவர் மேசையைத் திறந்து பார்க்கும் பொழுது, பணமும், சீட்டும் அங்கேயில்லை. அலுவலகம் எங்கும் தேடினார்; காணவில்லை. ஒவ்வொரு மேசையையும், மற்றுமுள்ள பணிமுட்டுகளையும் துருவித்துருவித் தேடினார்; கிடைக்கவில்லை. எல்லோருமாகச் சேர்ந்து மூலை முடுக்கெல்லாம் தேடியும் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. எங்களெல்லாருக்குமே ஏமாற்றம். துக்கம். யாரைத்தான் சந்தேகிப்பது என்று தெரியவில்லை. பலரையும் சந்தேகித்தோம். ஆனால் பலனில்லை. அன்றையத்தினமே புதுப் பூட்டுகள் வாங்கி, எல்லாவற்றையும் எச்சரிப்புடன் பூட்டி வைக்கத்தொடங்கினோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கட்டிடம் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டியதிருந்தது.பின்புறமுள்ள அறையிலே, சாமான்களை ஒதுக்கி வைக்கும் போது, அங்கிருந்த அலமாரியையும் சற்று நகர்த்து வைக்கவேண்டியதாயிருந்தது. அது இருந்த இடத்திற்குப் பின்னால் சுவரிலே ஒரு துவாரமிருந்தது. அங்கே காணாமற்போன பணமும் சீட்டும் பத்திரமாக இருக்கக் கண்டனர். அதை அங்கே கொண்டு போய் ஒளித்து வைத்த “எலி” மிகவும் தந்திரமும், திறமையுமுள்ளதாகத்தானிருக்க வேண்டும் ! காணாமற்போன பணம் மறுபடியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதேனும் எங்களுக்கில்லை. ஆகிலும், “ஆண்டவரே, பணத்தை நாங்கள் மீண்டும் பெறவும், அதைத் திருடினவரைப் பிடிக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்” என்று ஜெபித்திருந்தோம். இப்பொழுது இழந்துபோன பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டோம். பிறகு திருடிய நபரையும் கண்டுபிடித்தோம்! இழந்ததைத் திரும்பப் பெற்றுக்கொண்டோமென்று எல்லோருக்கும் மட்டிலா மகிழ்ச்சி.
இவ்வாறுதான் நமது ஆவிக்குரிய ஜீவியத்திலுமிருக்கிறது! நம்முடைய தவறுகளாலும், மீறுதல்களாலும் ஆவிக்குரிய அதிக நஷ்டங்களடைகிறோம். மெய்யாகவே பலர் தங்களது சந்தோஷத்தையும், சமாதானத்தையும் இழந்துள்ளனர். துன்பம், சோதனையினிமித்தம் சிலர் தங்கள் விசுவாசத்தை விட்டுவிட்டனர். மற்றவர்கள் ஒரு வேளை தேவனுடைய பிரசன்னத்தை இழந்திருக்கலாம். வேறு பலர் தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்படும் இரகசியத்தை இன்னமும் கற்றுக்கொள்ளாதிருக்கலாம். பலர் தாங்கள் இரட்சிக்கப்பட்ட துவக்கத்திலே பெற்றிருந்த வல்லமையையும், சக்தியையும் இழந்திருக்கின்றனர்.
ஆதியிலே கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டனர். சிலர் இவ்வாறு ஆவிக்குரிய நஷ்டமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஏதாவது ஒரு வகையான ஆவிக்குரிய இழப்பை உணரும் உள்ளங்கள் பல உள. அநேகருக்குத் தங்கள் வேதாகமத்தின் மீது முன்பிருந்த பற்றும், அதனாலடையும் மகிழ்ச்சியுமில்லை. ஒரு காலத்தில் அவர்கள் கொண்டிருந்த ஜெப வாஞ்சை குன்றிவிட்டது. இதைக்குறித்து வெளிப்படையாக வெட்கப்பட்டு அழுவாருமுண்டு; மறைவாக இதயங்களில் துக்கித்துக் கொண்டிருப்பாருமுண்டு. ஆகிலும் தாங்கள் இழந்ததை மீண்டும் பெறுவோம் என்ற நம்பிக்கை, விசுவாசம் அவர்களுக்கில்லை. திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர், ஆனால் மறுபடியும் பெறுவதெவ்வாறு என அறியாதிருக்கின்றனர், அதிலும் அதிக துக்கமான காரியம்,திரும்பப் பெறுவோம் எனும் நம்பிக்கையையே அவர்கள் இழந்திருப்பதுதான். “முன்பு எனக்கிருந்த சந்தோஷம், சமாதானம் இனி ஒரு போதும் எனக்குக் கிட்டாமற்போய் விடுமோ” என்று சந்தேகிக்கின்றனர். “இனி ஒருக்காலும், நான் முன்பு போல் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாது,” எனக் கூறுகின்றனர். உங்களது ஆவிக்குரிய நஷ்டம் எதுவாயினும் சரி, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தி எங்களிடமுண்டு. உங்களது தோல்விக்கும், நஷ்டத்திற்கும் காரணம் எதுவாயிருந்தாலும் சரி, நீங்கள் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. நீங்கள் இழந்ததைத் திரும்பப் பெறலாம். இல்லை, அதற்கு அதிகமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
மனித வரலாற்றின் தோற்றத்திலேயே மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்ட நிகழ்ச்சியுடன் (ஆதியாகமம் 3 ; 23-24) வேதாகமம் ஆரம்பிக்கின்றது. ஆகிலும் அதே ஆதியாகமத்தில் தானே இழந்து போனதைத் தேடும் மீட்பின் வேலை தொடங்குவதையும் பார்க்கின்றோம். ஆதாம் தன் மீறுதலினால் ஆதிமுதலே எல்லாவற்றையும் இழந்து விட்டான். என்றாலும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் மனிதன் இழந்த யாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் என்றும், ஆதியாகமம் I:28 இல் முழு உலகத்தின் மேலும் ஆளுகையைத் தந்தார் என்றும் பார்க்கிறோம். நீர்வாழும் பிராணிகள், நிலத்தின் மீது வாழும் விலங்குகள், ஆகாயத்துப்பறவைகள் ஆகிய எல்லாவற்றின் மீதும் ஆதாமுக்கும், அவன் சந்ததியாருக்கும் அதிகாரமும், வல்லமையும் கொடுத்தார். மெய்யாகவே ஆதாம், சர்வலோகத்தின் சக்கரவர்த்தியாக நியமிக்கப்பட்டான். ஆனாலும் 3ஆம் அதிகாரத்தில் அவன் ஒரு திருடனைப் போல வெளியே துரத்தப்பட்டான். ஆளோடு ஆள் முகமுகமாய்ப் பேசுவதுபோல, ஆரம்பத்தில் ஆதாம் ஆண்டவரோடு உறவாடும் சிலாத்தியம் பெற்றிருந்தான். ஆனால் மீறுதலின் விளைவாக அந்நட்பு முறிந்தது; அவன் தேவனுடைய சமுகத்திலிருந்து சத்துரு எனத் துரத்தப்பட்டான். ஏதேன் தோட்டமெனும் பரதீசாகிய தனது இல்லத்தை இழந்தான். அத்துடன் அவனது அந்தஸ்தும், அதிகாரமும், உரிமைகளும் பறிபோயின. எல்லாவற்றையும் இழந்தான். எவ்வளவு பெரிய நஷ்டம் பாருங்தள்!
முதல் மனிதன் ஆதாம்-நமது ஆதித்தந்தை ஆதாம் இழந்தது எவ்வளவு என்று எந்த மனிதனாலும் கணிக்கவே முடியாது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 21,22ஆம் அதிகாரங்களில் எவ்வாறு ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தின் குறைவெல்லாம் நிறைவாக்கப்படுகிறதென்று காண்கிறோம் .
பழையனவெல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாக்கப்படுகின்றன. முந்தின உலகத்தை விட மனிதன் ஆளப்போகும் புதிய உலகமும், புதிய சிருஷ்டியும் எவ்வளவு மாட்சிமையும் மகிமையுமுள்ளதாக இருக்குமென்று பார்க்கிறோம். ஆதாம் இழந்து போனதைவிட மிக அதிகமாக தேவன் மனிதனுக்குத் திருப்பித் தருகிறார். இந்த இழப்பீட்டு வேலையை கிறிஸ்துவின் சிலுவையின் வல்லமையினாலே துவக்கி விட்டார். ஆகவே தான், வெளிப்படுத்தின புத்தகத்தில் “ஆட்டுக்குட்டியானவர்” என்ற பதம் 28 தடவைகள் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.இந்தச்செய்தியின் கருத்து என்னவென்றால். ஒவ்வொரு பாவியின் ஒவ்வொரு நட்டமும், ஒவ்வொரு விசுவாசியின் ஒவ்வொரு இழப்பும் கர்த்தருடைய காருண்யத்தினாலும், ஒத்தாசையினாலும் ஈடு செய்யப்படுகிறது என்பதே. இதற்குச் சான்று கிறிஸ்துவின் சிலுவையே. கல்வாரியின் தியாகம் இதையே நமக்கு வெளிப்படுத்துகிறது.
உலகின்கண் வாழ் மக்களையெல்லாம், இரட்சிக்கப்படாதவர், இரட்சிக்கப்பட்டவர் என இரு குழுவினராகப்பிரித்து விடலாம். இதுவரையும் மறுபிறப்படையாதவர் முதற் பிரிவைச் சேர்ந்தவராவர். இதுகாறும் அவர்கள் மெய்ச்சமாதானம், சந்தோஷத்தை அடையவேயில்லை. தேவன் தங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து விட்டார் என்று உறுதியாகக் கூற முடியாதவர்கள். இவ்வுலகில் நம்பிக்கையற்றவர்களும், தேவனற்றவர்களுமாயிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கை என்பது ஓயாத்தோல்வியும், நிந்தனையும், இருளும், வேதனையும் நிறைந்ததாக இருக்கின்றது. தங்களுக்குச் சொந்தம் என்று உரிமைபாராட்டிக் கொள்ளக்கூடிய காரியம் உலகில் எதுவுமில்லை. அவர்கள் வறுமையின் நடுவே வாடும் பிச்சைக்காரர் அனையர். எனவே, அவர்களது நேரம், பணம், பலம் எல்லாம் தினமும் விரயமாக்கப்படுகின்றன. இவ்விதமாக இருளிலே பிறந்து, இருளிலே வாழ்ந்து, இருளிலே மடியும் அவலநிலை! தங்களை முழுவதும் கெடுத்துக் கொள்ளுகின்றனர். அவர்கள் சாகுந்தருணத்தில் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ, “ஐயோ, சிறிது நேரத்தில் செத்துப்போவேனே! ஆனால் எனது வாழ்க்கையை முழுவதும் பாழாக்கி விட்டேனே. அதில் பயனெதுவுமில்லையே என்செய்வேன்!” என ஒலமிடுகின்றனர். எவ்வளவு வேதனையோடு இதை விளம்புவர். எவ்வளவு தான் பணமும், புகழும் இருப்பினும், தங்களது காலத்தில் எவ்வளவு தீரச்செயல்கள், அறப்பணிகள் புரிந்திருப்பினும், கடைசி நேரத்தில் தங்களது தவறுகளை எல்லாம் ஒத்துக்கொள்வர். தங்களது ஜீவியமெல்லாம் வீண் என்ற ஆறாத்துயரத்துடன் ஏகுவர்.
அன்பரே, உங்கள் இதயத்தை உத்தமமாய்ச் சோதித்துப் பார்த்து, உண்மையுடன் பதிலளியுங்கள். தேவனது முன்னிலையில் உங்களது நிலைமை எவ்வாறிருக்கின்றது? உங்களது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் செலவழிக்கும் நேரம், பணம், சக்தியினாலே மெய்யாகவே நீங்கள் சாதித்திருப்பதென்ன? இவைகள் உங்களுக்கு மெய்ச்சந்தோஷம், சமாதானத்தைத் தருகின்றனவா? உங்களால் தேவனுக்கு ஏதும் இலாபமுண்டா? பிறருக்குப் பயனுண்டா? உங்களை எங்காவது எதற்காவது தேவன் உபயோகப்படுத்தியிருக்கிறாரா? உண்மையை உணர்வீர்களா? வாய்மையுடன் கூறுவீர்களா?
இரட்சிக்கப்படாத பாவியாக இருந்தால், நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கை வீணாகிக்கொண்டிருக்கிறது. சந்தேகமே வேண்டாம். நமது நீதியெல்லாம் அழுக்கான கந்தை போலிருக்கிறதென்று வேதம் விளம்புகின்றது. நாம் பணம் படைத்தவரென்றும், அறிஞரென்றும், பெரியவரென்றும் பெருமிதம் கொள்ளலாம். ஆகிலும் பாவத்தில் நிலைத்திருப்பவர்களென்றால், நமது சிறப்பான முயற்சிகளும் வெறுப்பான கந்தைகளுக்குச்சமமே. பிச்சையெடுப்போரும், பெருநோயுள்ளோரும் தொடுவதற்கும் கூசும் அழுக்கு நிறைந்த கந்தைகளை உடுக்கக் கண்டிருக்கிறேன். அது போன்றுதான் மனிதனது இதயமும், இயல்பும் இருக்கின்றது; கேவலமானதும், அழுக்கடைந்ததும், நம்பிக்கைக்கு இடமில்லாததுமாயிருக்கின்றது. நம்முடைய நீதிகளெல்லாம்-அதாவது நற்பண்புகளெல்லாம் தேவனுடைய பார்வையில் “அழுக்கான கந்தைகள் போல இருக்கின்றன.” (ஏசாயா 64:6). நம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு, நமது இதயங்களெல்லாம் சுத்திகரிக்கப்பட்டாலன்றி, நாமே அழுக்கானகந்தைகளைப் போலிருப்போம். நாம் எத்துறையில் செலவிட்டாலும், நமது நேரம், பணம், சக்தி-எல்லாமே வீணாகத்தானிருக்கும். ஆனால் தேவனுக்குத் துதியுண்டாவதாக ! நமது இதயங்கள் சுத்திகரிக்கப்பட்டால், நாம் தேவனுடைய வீட்டிலே விலையேறப்பெற்ற கற்களாக மாற்றப்படுவோம், மறுரூபமாக்கப்படுவோம் .. உங்கள் .பாவங்கள் மன்னிக்கப்பட விருப்பமுண்டா? பாவமன்னிப்புப் பெற வாஞ்சையுடனும், ஆவலுடனும் இருக்கின்றீர்களா? நமக்கு நேர்ந்த இழப்பையெல்லாம் திருப்பித்தருவதற்காகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்து, மரித்து, உயிரோடெழுந்தார். இவ்வளவு காலமும் நம்முடைய வாழ்க்கையை நாம் நஷ்டப்படுத்தி விட்டாலும், இப்பொழுது நாம் மறுபடியும் தேவனுக்கு உடன் வேலையாட்களாகவும், கூட்டாளிகளாகவும் பங்காளிகளாகவும் ஆகலாம் (1 கொரிந்தியர் 3:9).
ஒரு நல்ல வயலிலோ, தோட்டத்திலோ வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு நல்ல தோட்டக்காரரை நீங்கள் கண்டிருக்கின்றீர்களா? அந்நிலத்தில் பயிரிடுவதற்கு முன்பு நிலத்தை எப்படி ஆயத்தம் பண்ணுகின்றான்? ஒரு காலத்தில் அந்த நிலம் பயனற்றதும், உற்பத்தியில்லாததும், களைகளும், முட்களும், கற்களும், நிறைந்த நிலமாக இருந்திருக்கலாம். ஆனால் பண்படுத்தப்பட்டு, சில மாதங்கள் கழித்து, அதேவயல் அல்லது தோட்டத்தில், ஏராளமான கனிகளையோ, தானிய விளைச்சலையோ, அல்லது நறுமணம் கமழும் பல வண்ணப் பூக்களையோ உற்பத்தி செய்யலாம். அதில் ஒவ்வொரு அங்குல நிலமும் பலனுள்ளதாகிறது. ஆனால் இவ்விளைச்சலை உண்டாக்க, இரவும் பகலும் அந்நிலத்தில் பாடுபடவேண்டும். அந்த நிலத்திற்கு மிகுந்த ஆயத்தம் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு கல்லும் பொறுக்கி யெடுக்கப்பட்டு, களைகளும் முட்களும் வெட்டி யெடுக்கப்பட்டு, நிலத்தைக் கொத்திப்பண்படுத்தி, சீர்திருத்தி, உரமிட்டு, விதைத்து, நீர்ப்பாய்ச்சி சில வாரங்களோ, மாதங்களோ கண்ணும் கருத்துமாகக் கவனிக்கவேண்டும். பின்னர், அதே நிலந்தானா, இவ்வளவு ஆச்சரியமான வயலாகவோ, தோட்டமாகவோ மாறிவிட்டது, இந்த நல்ல பலனைத்தருகின்றது என நம்புவதற்கே கடினமாயிருக்கும்.
இவ்விதமாகவே, நம்மையெல்லாம் அழுக்கான கந்தைகளுக்கு ஒப்பிட்ட தேவன், பிறகு, “என் அருமைப்பண்ணையே; அழகான என் தோட்டமே!” என்று நம்மை அன்புடன் அழைக்கக் கூடும். உங்களுடைய ஜீவியம் அவ்வளவு தூரம் மறுரூபமடைய முடியுமே! உங்களது பாவங்களால் விளைந்த ஒவ்வொரு நஷ்டமும் திருப்பியளிக்கப்படும். உங்கள் பாவங்களால் அவமானமும், வசைச்சொல்லும் வந்ததே. உங்கள் பெயர் கெட்டதுடன், உங்கள் குடும்பத்திற்கு இழுக்குண்டாகி, தேவனின் நாமமும் தூஷிக்கப்படவில்லையோ? உங்கள் வாழ்க்கை நாசமடைந்தது. உடல் நலம் குன்றினது; மனோநிலை மாறினது: மனச்சாட்சி மழுங்கினது. உங்கள் பாவங்களினிமித்தம் நீங்கள் தேவனை விட்டு வெகுதூரமாய் விலகிச் சென்றுவிட்டீர்கள். தேவனுடைய காரியங்களைச் சிறிதேனும் அறிந்து கொள்ளமுடியாத புத்தி மந்தமேற்பட்டுவிட்டது. இப்படியிருந்தால், நண்பரே, தேவனுடைய பார்வையில் நீர் மதிகெட்டவர்; நீர் செய்வதெல்லாம் வீணென்று உணர்ந்து கொள்ளவில்லை. நம்பிக்கையற்றவராய் மரிப்பீர்.
இந்நிலை மாறவேண்டுமா? நீங்கள் மாற்றப்படவும், மறுரூபமாக்கப்படவும் வேண்டுமா? உங்களுக்கு நற்செய்தி உண்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பாதத்தண்டை வருவீர். உமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, துக்கத்துடன் வாரும். நொறுங்குண்ட இதயத்துடனும், மனந்திரும்புதலுடனும் வாரும். இந்நாளிலேயே, இவ்வேளையிலேயே ஆண்டவர் உம்மை மன்னிப்பார்; மாற்றுவார்; மறுரூபப்படுத்துவார். இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அருளுவதற்கென்றே உம்மைத்தேடி, இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எனது வாழ்க்கையும் வீணாக்கப்பட்டு வந்தது. எல்லாவற்றையும் பாழாக்கி வந்தேன். அந்நாட்களில் வெட்கம், துக்கம், தோல்வி, நஷ்டம், வறட்சி நிறைந்த வாழ்க்கைதான் எனது பங்காக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, நான் சொல்லுவதும், செய்வதும், நிரந்தரமான, நித்தியமான மதிப்புடையவை என்று அறுதியிட்டு உறுதி கூறுவேன். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக, நான் ஏதாவது தவறு செய்யும் போது என்னைச் சிட்சித்து, சீர்திருத்தி, நல்வழிப்படுத்தித் திரும்பவும் தம்மிடமாய்ச் சேர்த்துக்கொள்கின்றார்.
தாவீது தன் வாழ்க்கையிலே நான்கு பெரிய நஷ்டங்களையடைந்தான். விசுவாசிகளாகிய நாமும் நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலே பல பெரிய நஷ்டங்களையடைகின்றோம். ஆனால் தேவனுடைய பெரிதான கிருபையினாலே தாவீது இந்த எல்லா இழப்புகளையும் மீண்டும் பெற்றான். ஒவ்வொரு சமயமும் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கே இடமில்லாதிருந்தது. எனினும் தேவனுடைய உதவியினாலே இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் இழந்ததையெல்லாம் திரும்பப்பெற்றான். இழந்ததைவிட மிதமிஞ்சிப் பெற்றான். நாமும்
கிறிஸ்துவினிடம் விசுவாசம் வைத்திருந்தும், சந்தேகம், அவிசுவாசம், தவறு, தோல்வி, குருட்டாட்டம் ஆகிய காரணங்களினாலே பல நஷ்டங்களையடைகிறோம். ஆனாலும், எல்லாவற்றையும் திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் எனத் திருமறை திட்டமாய்க் கூறுகின்றது.
1947ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களிலே நம் நாடு பிரிக்கப்பட்டு, இந்தியா, பாக்கிஸ்தான் என்று இரு நாடுகள் உருவாக்கப்பட்ட வேளையிலே, பல சீக்கியர்களும், இந்துக்களும் தங்கள் வீடு வாசல்களை இழந்து, சொத்துக்களைப் பறிகொடுத்து அகதிகளாக அவதியுற்று இந்தியா வந்து சேர்ந்தனர். அவர்களுக்குச் சிறிது இழப்பீடளித்து, உதவிசெய்யும் நோக்கத்துடன் அவர்கள் விட்டு வந்தது எவ்வளவு மதிப்பிருக்குமென அறிவிக்குமாறு அரசு ஆணையிட்டது. ஆனால் அநேகர் பொய்க் கணக்கு காட்டினர். மிகையாக மதிப்பிட்டனர். ரூ 6000 இழந்தவர் ரூ 26000 எனவும், பதினாயிரம் இழந்தவர் இலட்சமெனவும் கூறி அரசை ஏமாற்ற முற்பட்டனர். அதுதான் உலக ஞானம்! ஆனால் நீங்கள் தேவனை வஞ்சிக்காதிருப்பீர்களாக! தேவனிடம் நாணயமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கே உண்மையுள்ளவர்களாய், தேவன் உங்கள் நஷ்டத்தையெல்லாம் ஈடு செய்வதற்கு இடங்கொடுங்கள். “ஆண்டவரே! நான் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ள எனக்குச் சகாயம் செய்யும்” என்று தேவனிடம் மன்றாடுங்கள். சமாதானத்தை இழந்து விட்டீர்களா? உங்கள் சந்தோஷம் மறைந்து விட்டதா? அல்லது உங்கள் விசுவாசம் குன்றிவிட்டதா? மனதில் சந்தேகங்களிருக்கின்றனவா? உங்கள் உள்ளத்தில் குழப்பமா? தேவனது வார்த்தையின் மீதுள்ள பசி தாகம் அற்றுப் போய் விட்டதா?
பெருந்தீனி தின்னும் சிலரைக் கண்டிருக்கிறேன். ஏராளமாகச் சாதம் சாப்பிடுவர். பெருங்குவியல்களாக சாம்பாருக்குச் சாதம், ரசம், மோருக்குச் சாதம் என மூன்று நான்கு முறைகளாக அதிகம் கேட்டு வாங்கிச் சாப்பிடும் ஆட்களைப் பார்த்திருக்கிறேன். சப்பாத்தி அல்லது பூரி என்றால் பத்துப் பன்னிரண்டு என்றும் அதற்கு மேலும், பாயாசம் தயிர், என்றும் , ஏராளமாகச் சாப்பிடக்கூடியவர்கள், நோயுற்றவேளையில் சிறிது கூட அருந்தாமலிருப்பதைக் கண்டுமிருக்கிறேன். அவர்களை, நண்பர்கள் யாரும் பார்த்தவுடனே “ஓ இவர் சுகவீனமாயிருக்கிறார் போலும்” எனப் புரிந்து கொள்ளுகின்றனர். “முன்பு எவ்வளவோ சாப்பிடுவாரே. இப்பொழுது ஏன் உணவையே வெறுத்து ஒதுக்குகிறார் ? சிறிதளவு எனினும் வற்புறுத்தி வாயில் ஊட்ட வேண்டியதிருக்கிறதே” என அதிசயிப்பர்.
ஆவிக்குரிய பிரகாரம், தேவனுடைய வார்த்தையின் மீதிருந்த உங்கள் பசித்தீவனம் எங்கே? உங்களது கிறிஸ்தவ வாழ்க்கையின் துவக்கத்தில், வேதாகமத்தில் அநேக அதிகாரங்களை ஒரே வேளையில் வாசிப்பதுண்டே! ஒவ்வொரு ஆவிக்குரிய கூட்டத்திற்கும் தவறாமல் மனமகிழ்ச்சியுடன் சென்று வருவீர்களே ! இப்பொழுது என்ன நேர்ந்தது? வேதத்தில் சில வாக்கியங்களோ ஒரு அதிகாரத்தில் பாதியோ வாசிப்பதற்குக் கூட விருப்பமில்லையே. வேதாகமத்தையே தொடாத நாட்கள் பல உண்டல்லவா? ஜெபிப்பதற்கோ எவ்விதமான ஏவுதலுமில்லை, பாரமுமில்லை. தேவனுடைய வசனத்தைப் பகுத்தறிந்து ஆத்மீக ஆகாரமாக்கிக் கொள்ளும் வாஞ்சையை இழந்து விட்டீர். தேவனுடைய சமுகப் பழக்கத்தையே இழந்து விட்டீர். சுருங்கக் கூறினால், ஆவிக்குரிய ஜீவியத்தில் ஆனந்தமேயில்லை, கர்த்தருடைய வீட்டிலுள்ள சிலாக்கியங்களிலெல்லாம் உமக்கு ஒன்றும் பங்கில்லையல்லவா? எனவே தயவுசெய்து உங்கள் நஷ்டங்களையெல்லாம் தேவனுக்குத் தெரியப்படுத்தி, அவரிடம் இவ்விதம் வேண்டிக் கொள்ளுங்கள். “அன்புள்ள ஆண்டவரே ! நான் இழந்ததையெல்லாம், திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும்.” இவ்வாறு ஜெபிப்பீர்களானால் எல்லாவற்றையும் மீண்டும் பெற்றுக் கொள்ளுவீர்கள். அதற்குக் கூடுதலாகவும் பெற்றுக்கொள்வீர்கள் என்று தேவனுடைய வசனத்திலிருந்து உங்களுக்கு வாக்குறுதி கூறுகின்றோம்.
இங்கிலாந்து நாட்டிலுள்ள சில சலவை நிலையங்கள் தங்களது வாடிக்கைக்காரரின் துணிகளை இழக்கும் போது அதற்குப் போதுமான நஷ்ட ஈடு கொடுப்பது வழக்கம். “உங்களது உடை – அது வேஷ்டியோ, சட்டையோ, கோட்டோ எதுவாகிலும் இழந்திருக்கலாம்; அல்லது சலவை செய்யும்போது கிழிந்து போயிருக்லாம். ஆகையால், அதைப்பற்றி விவரமாகத் தெரிவிப்பீர்களென்றால், அத் துணிக்குரிய புதுக் கிரயத்தைக் கொடுத்து விடுகிறோம்” என்று உடனே தகவல் அனுப்புவர். புகார் என்னவென்று கேட்டறிந்தவுடன் “உங்களது அளவுகள் என்ன? தயவு செய்து தெரிவிப்பீர்களென்றால், உங்களுக்கேற்றாற் போல புதிய ஆடை தயாரித்து இழப்பீடு செய்கிறோம் “எனக் கூறுவர். நீங்கள் இழந்தது பழைய ஆடையாக இருக்கலாம் ; ஆனால் நீங்கள் புத்தம்புதிய ஆடை ஒன்றைப் பெற்றுக் கொள்வீர்கள், இங்கிலாந்தில் நானிருந்த சமயம் இவ்வாறு எனக்குக் கிடைத்தது. இந்தியாவிலன்று ! ஒரு சமயம் எனது கோட் ஒன்றைச் சலவை நிலையத்தினர் கெடுத்து விட்டனர். அதற்குப் பதிலாக, புதிய கோட் வாங்குவதற்கான கிரயத்தைக் கொடுத்து விட்டனர். அதைக்கொண்டு முன்பிருந்ததை விடச், சிறந்த கோட் ஒன்றை எனக்கு வாங்கிக் கொண்டேன். ஆனால் இங்கிலாந்து தந்ததை விட உச்சிதமான முறையில் என் தேவன் எனக்குத் தருகிறார். உங்களுக்கும் வேண்டுமா? அப்படியானால் நீங்கள் நாணயமாக நடந்து கொள்ளவேண்டும். உங்கள் நஷ்டத்தையெல்லாம் ஒன்றையும் ஒழிக்காமல், தேவனிடம் உண்மையுடன் கூறவேண்டும். பின் வரும் அத்தியாயங்களில் தாவீது அடைந்த நான்கு பெரிய நஷ்டங்கள் எவை என்பதையும் அவற்றையெல்லாம் தாவீது எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொண்டான் என்பதையும் வேதாகமத்தின் ஆதாரத்திலேயே நாம் விவரமாகச் சிந்திக்கலாம்.