“அனைவருக்கும் பேரானந்தம் தரும் நல்ல செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
ஏறத்தாழ 2000 ஆண்டுகட்குமுன் பாலஸ்தீன நாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை இப்படித்தான் இறைவனது தூதுவன் ஒருவன் அறிவித்தான். உங்களுக்காகவும் எமக்காகவுமே கிறிஸ்து இவ்வுலகில் உதித்தார் என்பது மிகப் பெரிய செய்திதானே? பாவிகளாகிய நம்மை மீட்கவே அவர் வந்தார்!
நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். பாவத்தின் விளைவு தான் மரணம். அதாவது இறைவனை விட்டு என்றென்றும் பிரிக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவதாம். ஆனால் இறைவன் அன்புள்ளவர். எவரும் இவ்விதம் அழிந்து போவது அவரது விருப்பமில்லை. நம்மீதுள்ள அளவுகடந்த அன்பினால் தமது ஒரே மகனாகிய இயேசுவை பாவம் நிறைந்த இவ்வுலகிற்குள் அனுப்பினார். இயேசுவை நம்பினால் நமக்கு அழிவில்லை, நித்திய வாழ்வுண்டு.
கிறிஸ்து இவ்வுலகில் 33 1/2 ஆண்டுகள் மனிதனாகவே வாழ்ந்தார். நம்மைப் போல வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் அவருக்கு சோதனைகள் வந்தன. ஆனால் ஒரு சோதனைக்கும் அவர் அடிபணியவில்லை. பாவமே செய்யாதவர் அவர் ஒருவரே. காரணம் மனித உருவில் இருந்த அவர் இறைவனல்லவா? எங்கும் சென்று மனிதருக்கு நற்பணியாற்றினார். பாவிகளை மன்னித்தார். நோயாளிகளை ஆரோக்கியமாக்கினார். இறந்து போன சிலரை எழுப்பியும் விட்டார். இயற்கை மீது அவருக்கு முழு அதிகாரம் இருந்தது. பேய்ப் பிடித்திருந்தவர்களை விடுவித்தார். அவரால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. இறைவனுக்கு முடியாதது எது?
கிறிஸ்துவின் எதிரிகளோ பொறாமை கொண்டு அவரைச் சிலுவையில் ஆணியறைந்தனர். ஆனாலும் அதுதான் இறைவனது திட்டமாய் இருந்தது. அவரது மரணமே அனைத்துலகப் பாவத்திற்கும் இணையற்ற பலியாகும். பாவமற்ற, குற்றமற்ற, புனிதமான அவரது இரத்தமே நமக்குப்பாவ மன்னிப்பும் மீட்பும் அருளுகிறது. அவர் நமது நோய்களையும் தமது உடலில் சுமந்து தீர்த்து விட்டார். பறவைகள் மிருகங்களின் இரத்தமோ, மார்க்கச் சடங்குகளோ நமது பாவங்களைப் போக்க முடியாது. நம்மைக் கழுவுவது கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றே!
இயேசு அப்படியே மண்ணில் மறைந்து போகவில்லை. மரணம் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை. அவர் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாயிருக்கிறார். சாத்தானைத் தோற்கடித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்: உயிரோடு எழுந்தபின் தமது சீடருக்கு நாற்பது நாட்கள் உயிரோடிருக்கிறவராகக் காட்சி கொடுத்தார். பின்னர் விண்ணகத்திற்கு திரும்பச் சென்றார். உயிரோடெழுந்த கிறிஸ்து மாறாதவர். நம்மை ஆசீர்வதிக்க அவரது வல்லமை அப்படியே குறையாது இருக்கிறது!
இயேசு கிறிஸ்து ஒரு கற்பனைப் பாத்திரம் அல்ல. அவர் சரித்திரத்தின் நடு நாயகர். அவரில்லாது சரித்திரத்தை விளங்கிக் கொள்ளமுடியாது. கி.மு., கி.பி., எனச் சரித்தி ரத்தை அவர் பிரித்துள்ளார். இயேசுவின் மூலம் இரட்சிப்பு எனும் இந்நற்செய்தியை அறிவிக்க கி. பி. 40ல் அவரது சீடரில் ஒருவராகிய தோமா என்பவர் இந்தியாவுக்கு வந்தார். சென்னைக்கருகில் அவர் கொலை செய்யப்பட்டார்.
நாம் எந்த மதத்தையும் இனத்தையும் சேர்ந்தவராயினும் கிறிஸ்துவின் அழைப்பு நம்மெல்லோருக்கும் “வருந்தி மடிவோரே, அனைவரும் என்னிடம் உங்களுக்கு நிம்மதியும் அமைதியும் தருவேன்” என்று இயேசு அழைக்கிறார்! பாவமன்னிப்பு பெற வேறு வழியில்லை. “நானே வழி” என்றார் இயேசு. பல வழிகளில் அவரும் ஒரு வழி என்றல்ல, அவர் ஒருவரே வழி! மனிதனை மீட்க இறைவன் ஏற்படுத்திய ஒரே மார்க்கம் கிறிஸ்துவே!
பைபிள் என்பது இறைவனது வார்த்தை. மனிதனுக்குச் சரியாகத் தெரியும் வழிகளுண்டு. அவைகளின் முடிவோ அழிவுதான் என்று இந்நூல் கூறுகிறது. விபச்சாரம், விக்கிரக வணக்கம், பில்லிசூனியம், பகைமை, சண்டை, பொறாமை, குடிவெறி போன்றவையெல்லாம் இறைவனுக்கு எதிரான பாவங்களாம். இவை நம்மை நரகத்திற்குத்தான் நடத்தச் செல்லும். அவைகளை விட்டு விட்டு இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்களை மன்னிப்பார். நோயுற்ற உங்கள் உடலையும் ஆரோக்கியமாக்குவார். அவர் சர்வ வல்லவர்.
இவ்வுலகிற்கு திரும்ப வருவதாக இயேசு சொல்லியுள்ளார். யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்வுகள், இது போன்றயாவும் அவர் முன்னறிவித்தபடியே நடக்கின்றன. பைபிளிலுள்ள முன்னறிவிப்புக்கள் யாவும் பிழையின்றித் துல்லியமாய் நிறைவேறி வருகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு முதல்முறை வரும்போது அவர் இரட்சிக்கிறவராய் வற்தார். அடுத்தமுறை வரும்போது நியாயம் தீர்க்கிறவராய் வருவார். இன்று அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ள மறுப்போர் நாளை நியாயத்தீர்ப்பைச் சந்தித்தாக வேண்டும். தீர்மானம் உங்களுடையது !
வாழ்வு குறுகியது. எப்பொழுது இறப்போம் என்று யாருக்குத் தெரியும்? நாளை நமதல்ல. இன்றே இரட்சிப்பின் நாள். உங்களது நித்திய முடிவை இன்றே தீர்மானியுங்கள். இன்று பாவ மன்னிப்பைப் பெற்று மகிழ்வதற்கும், நாளை விண்ணுலகில் என்றென்றும் வாழ்வதற்கும் நிகர் ஏதுமுண்டோ?
நண்பரே! இது ஒரு மதப் பிரச்சாரம் அல்ல. சொல்லப் போனால் எம்மதமும் உங்களை இரட்சிக்க முடியாது. கிறிஸ்து எனும் நபரே உங்களை இரட்சிக்க முடியும்! அவர் ஒருவரே உங்களை மன்னிக்க முடியும்! அவர் ஒருவரே உங்கள் ஆன்மாவை மீட்க முடியும்! இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு வேண்டுமா? வேண்டுமானால் கீழ்க்கண்டவாறு நம்பிக்கையோடு பிராத்தியுங்கள்.
“இறைவனே நான் ஒரு பாவி. என்மேல் இரக்கமாயிரும்! எனக்காக இறக்கும்படி இயேசு கிறிஸ்துவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. எனது சொந்த இரட்சகரென அவரை விசுவாசிக்கிறேன். எனது ஆண்டவரென அவரை ஏற்றுக் கொள்ளுகிறேன். எனது பாவங்களை மன்னித்து என்னை உமது பிள்ளையாக மாற்றிவிட்டதற்காக நன்றி. இயேசுவின் பெயரால் அப்படியே ஆகட்டும்!”
தமது மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்!