சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 12
தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம்
முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின் ஆவிக்குரிய பொருளைக் குறித்தும் திருமறையின் ஆதாரத்தைக் கொண்டு சிந்தித்து வந்தோம். எபிரோன் என்பது முதலாவது தேவனோடு நமக்குள்ள ஐக்கியத்தையும், பின்னர் உடன் விசுவாசிகள் ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் அன்னியோன்னியத்தையும் குறிக்கும். சீயோன் என்பது பரலோக அல்லது ஆவிக்குரிய தேவனுடைய வீட்டை எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பரலோக மாளிகையைப்பற்றி நாம் மென்மேலும் புரிந்து கொள்ளும்போது, அந்த அளவிற்கு நாம் இழந்தவைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தேவன் தாவீதை எவ்வாறு படிப்படியாகச் சீயோனுக்கு வழி நடத்தினார் என்றும், அவனைச் சீயோனுக்குக் கொண்டு வந்து ‘சேர்த்த பின்னரே, பொதுவான, தேசீய நஷ்டத்தையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டான் என்றும் பார்த்தோம். ‘தேவன் கட்டளையிட்டபடியே சாலோமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தபின், தேவன் தம்முடைய பூரண மகிமையோடு சீயோனுக்கு வந்தார். தேவன் தம்முடைய ஜனத்தோடு தெளிவாகப் பேசினார். அப்பொழுது மக்கள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததோடு, தேவனுடைய வீட்டிற்குள் வரும்போது பெரிய காரியங்களையும் எதிர் பார்த்தனர். சங்கீதம் 87 : 2 ல் சீயோனைப் பற்றிக் கூடுதலான ஒரு உண்மையை அறியலாம். “கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப் பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்”.
யாக்கோபின் வாசஸ்தலங்கள்
யாக்கோபு, தேவன் தெரிந்து கொள்ளும் ஒரு மனிதனுக்கு அடையாளமாக இருக்கிறான். அவனுடைய எல்லா மதியீனம், பெலவீனம், குறைபாடுகளோடும், தேவன் யாக்கோபைத் தெரிந்தழைத்தார். ஆனால் தன்னைப்பற்றி தேவன் கொண்டிருந்த தீர்மானங்களை விளங்கிக் கொள்ளும் முன்பாக, யாக்கோபு பற்பல அநுபவங்கள் வழியாகக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று. இருபது ஆண்டுகளுக்கு அதிகமாக தேவன் யாக்கோபுக்கென்று நியமித்துள்ள ஆசீர்வாதங்களைத் தனது சொந்த முயற்சியால் பெற்று அநுபவிக்க முற்பட்டான். இளம் பருவத்திலிருந்து, சிரேஷ்டபுத்திர பாகம் (மூத்த மகனின் உரிமைகள்) என்ன வென்பதைத் தன் தந்தை ஈசாக்கிடமிருந்து தீர்க்கமாகக் கற்று அறிந்தான். எனவே தன் தாய் ரெபெக்காளின் ஒத்தாசையுடன் ஈசாக்கை ஏமாற்றி, சேஷ்டபுத்திர பாகத்தை அல்லது ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டான்.
பிறகு தன் மாமன் லாபான் வீட்டிலும் இவ்வகையான செயல்களில் ஈடுபட்டான். அவன் லாபானின் வீட்டை விட்டு ஓடும்போது, மிகவும் பரிதபிக்கப்படத்தக்க நிலமையிலிருந்தான். ஏராளமான ஆடுமாடுகளும், சொத்தும், சம்பாதித்திருந்த போதிலும் அவனுள்ளமோ பயத்தால் நிறைந்திருந்தது (ஆதியாகமம் 37). எனவே சங்கீதம் 87 : 2இல் ‘யாக்கோபின் வாசஸ்தலங்கள்’ என்பது, யாக்கோபு தானாக மேற்கொண்ட நடவடிக்கைகள், முயற்சிகள், போராட்டங்கள் அதாவது தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு அவன் அநுசரித்த மனுஷீக வழிபாடுகளுக்கு அடையாளமாயிருக்கின்றன. சேஷ்ட புத்திர பாகம் எனப்படும் தலைமகனின் சுதந்தர வீதத்தைத் தனது லளகீக முறையில் பெற்றுக் கொள்ள ஆசித்தான். இவ்வாறே விசுவாசிகளில் பலர் தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தங்களது சொந்த முயற்சியால் சுதந்தரித்துக் கொள்ளப்பிரயாசப்படுகிறார்கள். மனுஷ ஞானத்தினாலும், பெலத்தினாலும் தேவனுக்குத் தொண்டு செய்ய முயற்சித்து, முடிவில் பெருந் நஷ்டமும், ஏமாற்றமும், தோல்வியுமடைகின்றனர். வேதாகமத்தைப் பல ஆண்டுகளாக இடைவிடாமல் படித்தும், ஆராய்ச்சி செய்தும், அவர்கள் தங்களது சுயஞானத்தால் அதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதால் அவர்களது வாழ்க்கையானது தோல்வியாகவே இருக்கின்றது. தேவனுடைய சேவையில் அவர்கள் மிகுதியான பணத்தைச் செலவிடுகிறார்கள். ஆயினும் கனி ஒன்றும் காணப்படுகிறதில்லை. அவர்கள் தேவனுக்காக மிகவும் தியாகம் பண்ணுகிறார்கள். உபத்திரவத்தை அனுபவிக்கவும் ஆயத்தமாயுள்ளார்கள். ஆயினும் அவர்களது ஜீவியத்தில் சந்தோஷமில்லை. பல மணி நேரம் ஜெபிக்கிறார்கள். ஜெபத்திற்கோ பதில் கிடைப்பதில்லை. காரணம்? அவர்கள் யாக்கோபைப் போல் இவற்றையெல்லாம் தங்கள் சொந்த முயற்சிகளால் நிறைவேற்ற எத்தனிப்பதேயாகும்.மாம்ச பெலத்தாலும், மனுஷீக ஒழுங்குகளாலும், சுயஞானத்தாலும் அவர்கள் பரலோகசந்தோஷத்தைப் பெற்று அனுபவிக்க முயற்சிக்கிறார்கள். இவர்களே ‘யாக்கோபின் வாசஸ்தலங்களில் குடியிருக்கிறவர்களாவர்.
சீயோனின் வாசல்கள் : தேவனின் பிரியம் சீயோனின் மீது இருக்கிறது. ‘வாசல்’ என்பது வெளியேயுள்ளவர்கள் உள்ளே வரவேண்டியதவசியம் என்பதைக் காட்டுகிறது. சீயோனின் வாசல்களில் தேவன் பிரியமாயிருக்கிறார்’ என்பதானது, சீயோனின் வாசல்கள் வழியாய் உட்பிரவேசிப்பதை தேவன் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார் என்பதைக் குறிக்கும். நாமும் தேவனுடைய முழுப் பிரியத்தை அநுபவிக்க வேண்டுமாகில் நாம் சீயோனில் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
‘சீயோனின் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதத்தில் இருக்கிறது (சங் 87; 1). இந்தப் பரிசுத்த பர்வதத்தில் போடப்பட்ட அஸ்திபாரம் நிலையானதும், பலமானதும் அசைவில்லாததுமான அஸ்திபாரமாயிருக்கிறது. தேவன் பரிசுத்தராயிருக்கிறது போல நாமும் தூய பரிசுத்தமடைய வாஞ்சிக்கும் பொழுது, கர்த்தர் நம்மைத் திட அஸ்திபாரத்தின் மீது ஊன்றக்கட்டுவார்.
‘தேவனுடைய நகரம்‘ (வ3), என்பது சீயோனின் மறு பெயராகும். ‘சீயோன்’, ‘தேவனுடைய நகரம்’ என்ற இரு பதங்களையும் மாறி மாறிப் பயன்படுத்தலாம். ‘உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்’ (வ 5). யாக்கோபின் வாசஸ்தலங்களில் குடியிருப்பவர்கள், தாங்கள் நிலைவரப்படுவதற்கு மனுஷீக பெலத்தைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், சீயோனுக்குள் வருகிறவர்களையோ தேவனே ஸ்திரப்படுத்துகிறார். கர்த்தர் அவர்களைத் தொகையிடுவார் (வ.6). சீயோனில் வாசம் பண்ணுகிறவர்களைப்பற்றின எல்லா விவரங்களையும் தேவன் பதிவு செய்கிறார். நாமாகப் பிரயாச மெடுத்துச் செய்வதெல்லாம் வீண்; ஆனால் நாம் கர்த்தருடைய வீட்டில், அவருடைய பலத்தால் செய்வதெல்லாம் ஒரு நாளும் மறக்கப்படாதபடி தேவன் எழுதிவைக்கிறார். ‘பாடுவோரும், ஆடுவோரும்’ (வ7). யாக்கோபின் கூடாரங்களில் அழுகையும், கண்ணீரும், துக்கமும், துயரமும், வஞ்சனையும் ஏமாற்றமும் உண்டு. ஆனால் சீயோனிலோ பாடுகின்றவர்களும், ஆடுகின்றவர்களும் வாத்தியக் கருவிகளை மீட்டி, பரலோகக் கீதங்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள். இஃது அவர்களுக்குள்ள மிகுந்த மகிழ்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாயுள்ளது. அவர்கள் ஒருமித்து ஏகமாய் ஆடல் பாடல்களில் ஈடுபடுவது சீயோனிலுள்ள சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததுமான ஆனந்தத்தைத் தெரிவிக்கிறது. “எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது” (வ 7). ஊற்று, என்பது மறைந்திருக்கும் மிகுதியான தண்ணீர் சுரந்து வருவதைக் குறிக்கும். அங்கு எவ்வளவு தண்ணீர் இருக்குமென்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால் நல்ல தண்ணீர் எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கும். அது, ஒருபோதும் வற்றிப் போகாது. அப்படியே சீயோனிலிருப்பவர்களுக்கும் வற்றாத ஊற்றுகள் பல உண்டு. இவை சீயோனின் வாசிகளுக்கு ஓயா இன்பத்தைத் தந்து கொண்டேயிருக்கின்றன. ஆகையால், சீயோனில் மட்டும்தான் நாம் இழந்ததையெல்லாம் திரும்பப் பெறலாம். எனவே தான் கர்த்தர் நமது கவனத்தை யெல்லாம் இடைவிடாது சீயோனுக்கு நேரே இழுக்கின்றார்.
ஆபிரகாமும், மெல்கிசேதேக்கும்
ஆதியாகமம் 14 : 18-19
திருமறையில் முதல் தடவையாக இங்குதான் சீயோன் குறிப்பிடப்படுகிறது. ‘சாலேம்’ என்ற பெயருக்குச் சமாதானம் என்பது பொருள். சாலேம் அல்லது எருசலேம் என்றால் சமாதானத்தின் நகரம் என்று அர்த்தம்.
(1) ஒரு பாதரட்சையின் வாரையாகிலும் எடுத்துக்கொள்ளேன் :- ஆபிரகாமுக்கு ஒரு பெரிய சோதனை நேரிட்டது. ஆபிரகாம் சோதோமின் ராஜாவுடைய -சத்துருக்களோடு யுத்தம் செய்து, அவர்களைத் தோற்கடித்து, சிறைப்பட்டிருந்தவர்களையும், ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் திருப்பிக் கொண்டு வந்தான். சோதோமின் அரசன், உவப்புடனும், உள்ளங்கனிந்த நன்றியுடனும், சிறை திருப்பின மக்களைத் தவிர மீதமான பொருட்கள் எல்லாவற்றையும் ஆபிரகாமே அன்பளிப்பாக எடுத்து கொள்ளும்படியாகக் கூறினான். இஃது ஆபிரகாமுக்கு ஒரு பெரிய சோதனையாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தச் சோதனை நிகழ்வதற்குச் சற்று முன்புதான், சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாகிய மெல்கிசேதேக்கைத் தேவன் அனுப்பி வைத்தார். சோதோம் அரசனின் கண்ணியில் சிக்கிக் கொள்ளாதபடியும், இம் மாபெரும் பரீட்சையில் தோற்றுவிடாதபடியும், ஆபிரகாமை விலக்கிக் காக்க வேண்டுமென்றே கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனை முதலாவது அனுப்பினார் (வ. 19). ஆதலால் ஆபிரகாம் சோதோமின் ராஜாவைப் பார்த்து, “நீர் உமது செல்வமெல்லாம் ஈந்தாலும், ஒரு சரட்டையாகிலும், ஒரு செருப்பின் வாரையாகிலும் நான் எடுத்துக் கொள்ளேன்” என்று கூறிவிட்டான். ஆபிரகாமும் அவன் மனிதர்களும் போரிலீடுபட்டிருந்ததினால் காலணிகள் கெட்டிருக்கலாம், அல்லது ஆடைகள் கிழிந்திருக்கலாம். அவற்றைச் சீர்ப்படுத்துவதற்காகிலும், ஒரு வாரையாவது நூலையாவது எடுத்துக் கொள்ள மறுத்து விட்டான். ஒரு பொருளையாவது ஆபிரகாம் இச்சித்து எடுத்துக் கொள்ளவில்லை.
மாற்ற முடியாத இம் மன உறுதிக்குப் பலத்த விசுவாசம் தேவை. எங்ஙனம் ஆபிரகாம் இவ் விசுவாசத்தைப் பெற்றான்? உன்னதமான தேவனாகிய கர்த்தரின் ஆசாரியனாகிய மெல்கிசேதேக் சீயோனிலிருந்து வந்து, வானத்தையும், பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக என்று கூறினார். ஏற்கெனவே ஆபிரகாம் பெற்ற இவ்வாசீர்வாதமானது, சோதோமின் தலைவன் கொடுக்கக்கூடிய யாவற்றிலும் மிகப் பெரிதானதும், சிறப்பானதுமாக இருந்தது. மெல்கிசேதேக்கின் மூலம் ஆபிரகாம் சீயோனைத் தரிசித்தான். அது அவனுடைய விசுவாசத்தை வர்த்திக்கச் செய்து, அந்தப் பெரிதான சோதனையை மேற்கொள்ளவும் ஏதுவளித்தது.
(2) அப்பமும் திராட்ச ரசமும் :- மெல்கிசேதேக் ஆபிரகாமை ஆசீர்வதித்தது மட்டுமின்றி, சீயோனிலிருந்து ஆகாரம் அதாவது அப்பமும், திராட்சரசமும் கொண்டு வந்தார் (ஆதியாகமம் 14 :18). இயல்பாக ஆபிரகாம் போரிட்டுக் களைப்படைந்திருக்கலாம். ஆயினும், சோதோமின் ராஜா சிறந்த உணவோ, அல்லது தன்னையும் தன் மக்களையும் எதிரிகளிடமிருந்து விடுவித்ததற்காக விருந்தோ அளித்திருக்கலாம். ஆனால் ஏற்கெனவே தேவன் தமது தாசனைக் கொண்டு சீயோனிலிருந்து அப்பமும் திராட்சரசமும் அனுப்பிப் போஷித்துவிட்டதால், சோதோமின் உச்சிதமான உணவுப் பண்டங்களை ஆபிரகாம் நிராகரித்து விட்டான். சீயோனின் அப்பமும், ரசமும் ஆபிரகாமின் சோர்வு, களைப்பு யாவையும் நீக்கினது போலவே, சீயோனுக்கு நீங்கள் வரும்போது உங்கள் பெலவீனங்களெல்லாம் பறந்து போம்.
உற்சாகம் சிறிது குன்றிப் போனவுடன் மக்கள் கர்த்தருடைய வீட்டிற்குப் போகாமலிருப்பதற்குப் பல சாக்குப் போக்குகளைக் கூறுகின்றனர். “நாங்கள் எபிரோனுக்கோ யெகோவா-ஷம்மாவுக்கோ, பெத்தேலுக்கோ, பெனியேலுக்கோ, ஒரேபுக்கோ ஆராதனைக்குச் செல்ல முடியாது. அங்கு ஆராதனை வெகு நீண்ட நேரமாயிருக்கும். கூட்டம் முடிவதற்கு அதிக நேரமாகிறது! எங்களுக்கு நல்ல சுகமில்லை; போன இரவெல்லாம் தூக்கமில்லை”, என்று பல சாக்குகளைக் கூறி, பின்தங்கி விடுகின்றனர். வீட்டில் ஓய்வு எடுப்பதால் நலமடையலாம் என எண்ணி, ஏமாந்து’ போகின்றனர். அதற்குப் பதிலாக மேலும் சுகவீனமடைகின்றனர்! வேறு சிலர் துன்பம் துயரத்தினால் மனக்கிலேசம் அடைந்திருக்கும்போது கர்த்தருடைய வீட்டைவிட்டுத் தூரமாயிருந்து விடுகின்றனர். அல்லது யாராவது மனம் நோகப் பேசியிருக்கலாம். அல்லது இடறலுண்டாக நடந்திருக்கலாம். எனவே கோபித்துக் கொண்டு பின்னடைகின்றனர். அதன் விளைவாக அவர்கள் மேலும் இரங்கத்தக்க நிலையையடைகின்றனர். கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருடைய வீட்டிற்குள் வரும்போது தான் நல்ல ஆவிக்குரிய, பரலோக மன்னாவால் போஷிக்கப்பட்டு, தெய்வீக சக்தியும் வல்லமையும் பெற்று, சந்தோஷமடைகின்றனர். சோர்வு நீங்கி, ஊக்கமடைந்து, புதுப்பிக்கப்பட்டவர்களாய்ப் புது பெலனடைந்து, ஆபிரகாமைப்போல சோதனைகள் ஒவ்வொன்றையும் மேற்கொள்வர்.
(3) தசமபாகம் :- எல்லா ஆசீர்வாதங்களும் தேவனிடத்திலிருந்து மாத்திரமே வருகின்றன என்று ஆபிரகாம் விசிவாசித்தபடியால், அவன் தேவனுக்குத் தசமபாகம் செலுத்தினான் (ஆதியாகமம் 14 : 20). மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதிக்கிற வேளையில், தேவனே தம்மை எல்லா சத்துருக்களிடமிருந்தும் விடுவித்து; வெற்றியளித்து பல ஆசீர்வாதங்களையும் கொடுத்திருக்கிறார் என்று ஆபிரகாம் நம்பினான். அதனிமித்தம் தனக்குண்டான எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றைத் தேவனுக்குக் கொடுத்தான். இந்த தசம பாகமானது ஆபிரகாமின் விசுவாசத்தையும், நன்றி தெரிவித்தலையும் வெளிப்படுத்துவதுமன்றி “என்னுடைய சுய பலத்தினாலோ, திறமையினாலோ, முயற்சியினாலோ பெறக் கூடியவற்றைவிட மிகுதியாக தேவன் என்னை ஆசீர்வதிக்கிறார்” என்று ஆபிரகாம் அறிவிப்பதாக அமைந்துள்ளது. இது மிகவும் உண்மை. தேவன் நம்மை ஆசீர்வதிக்காவிட்டால், நாம் ஒன்றையும் அநுபவிக்க முடியாது, நாம் மிகக் கடினமாக உழைத்தும் அதிகமாகப் பணம் திரட்டியும், அதை அநுபவிப்பதற்கு தேவன் சுகத்தைக் கொடுக்கவில்லையென்றால், பணமிருந்து பயன் என்ன? குடும்பத்தில் சமாதானமில்லாவிட்டால், ஆஸ்தியிருந்து சுகமென்ன? நமக்குண்டானதை அநுபவிப்பதற்கு தேவ தயவு நமக்குத் தேவை. அவர் அருளின்றி நாம் ஒன்றையும் அநுபவிக்க முடியாது.
ஆபிரகாமும், மோரியா மலையும்
2′ நாளாகமம் 3 : 1 இன்படி, தேவன் மோரியா மலையைக் காண்பிக்கிறார். ஆபிரகாமுக்கு நேரிட்ட இறுதியானதும், மிகப் பெரிதுமான சோதனை இந்த மோரியா மலையில்தான் வந்தது (ஆதியாகமம் 22). தேவன் ஆபிரகாமுக்குப் பத்துமுறை தரிசனமானார்; பத்தாவது முறை மோரியா மலை மீது காட்சியளித்தார். ‘தேவனுடைய சிநேகிதன். என்று ஆபிரகாம் அழைக்கப்படும் முன்பாக இந்தப் பத்துப் பரீட்சைகளிலும் அவன் தேர்ச்சி பெற வேண்டியதாயிற்று. முடிவான சோதனை சீயோனில் (மோரியவில்) நடைபெற்றது.
இதற்குப் பிறகு தேவன் ஆபிரகாமின் பிணையாளியானார் அல்லது கடனாளியானார் எனக் காண்கின்றோம். ஆபிரகாம் எல்லாவற்றிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனிட்ட கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றிக் கடைசி யாக தனது ஒரே புதல்வனாகிய ஈசாக்கைக் கூட்டிக் கொண்டு அவன் தலை மீதே பலிக்கான விறகுகளை வைத்து, அவனை பலியிடுவதற்கென மோரியா மலைக்குச் சென்றான் (22:9). எவ்வித சந்தேகமும், கேள்வியும், வாக்குவாதமுமில்லாமல், பலிபீடத்தின் மேல் விறகைப் பரப்பி, ஈசாக்கைக் கட்டி அதன்மேல் கிடத்தி, கத்தியை எடுத்துக் கையை ஓங்கி, அவனை வெட்டப் போனான். அப்பொழுது தேவன், ஆபிரகாமே, ஆபிரகாமே ! பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் தீங்கு செய்யாதே”, என்று கூப்பிட்டுச் சொன்னார் (22: 11-12). ஆபிரகாம் திரும்பிப் பார்க்கும்போது, புதரிலே ஒரு ஆட்டுக்கடா சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அது தப்பி ஓடுவதற்கு முடியாத நிலையிலிருந்தது. தேவனே அதை அங்கு கொண்டு வந்து சேர்த்த பிறகு, எவ்வாறு அது தப்ப முடியும்? மனிதர் யாரும் அதை அங்கே அனுப்பவில்லை. தேவன் அந்தக் கடாவை அங்கு சிக்க வைத்ததில் ஒரு பெரிய நோக்கமும் படிப்பினையும் உண்டு. ஆபிரகாம் கர்த்தரிட்ட கட்டளைகளில் ஒரு சிறிதும் பிசகாமல், கீழ்ப்படிந்து, சோதனைகளிலெல்லாம் வெற்றி பெற்று, முதிர்ந்த விசுவாசியாக தேர்ச்சி பெற்று விட்டபடியால், கர்த்தர் அவனை நோக்கி, “ஆபிரகாமே அந்த ஆடு அந்தப் புதரில் எவ்வாறு சிக்கிக் கொண்டிருக்கிறதோ, அவ்வாறே நானும் உன்னோடு கட்டப்பட்டிருக்கிறேன். முதலில் நீ எனது கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றி; எனக்குக் கீழ்ப்படிந்து, என்னை முற்றிலுமாய்ச் சார்ந்திருக்கிறபடியால், இதுமுதல் நானும் உன்னோடு பிணைக்கப்பட்டிருப்பேன். நீ எனக்குக் கட்டளையிடு; நான் அதை நிறைவேற்றுவேன்”, என்று உறுதிப்படுத்துவதற்கு ஒப்பனையாயிருந்தது. ஆபிரகாம் இப்பொழுது கர்த்தருக்குக் கட்டளை கொடுக்க முடியும்! இஃது எத்துணை பெரிய சிலாக்கியம்!
தேவன் இவ்விதமாக ஆபிரகாமோடு நித்திய உடன்படிக்கையைச்செய்து, தம்மை ஆபிரகாமோடு ஒருங்கே இணைத்துக் கொண்டார். அதே உடன்படிக்கையை இன்றும் தேவன் ஆபிரகாமின் சந்ததியாராகிய யூதர்களிடம் நிறைவேற்றி வருகிறார். அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், எதிர்த்து நிற்கிறவர்களாகவும், கலகக்காரராகவுமிருந்தாலும், தேவனை அடிக்கடி மனஸ்தாபப்படுத்தி, வேதனைப்படுத்தினாலும், தேவன் ஆபிரகாமினிமித்தமாகவும், தாம் வாக்கு மாறாதவரானபடியினாலும் தமது உண்மையையும், உடன்படிக்கையையும் காத்து வருகிறார். அவர்கள் கடின இருதயமுள்ளவர்களாயிருந்தாலும், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனாயிருக்கிறேன்” என்று மோசேயிடம் கூறினார்.
இதுபோலவே, நீங்களும் சந்தேகமும், பயமுமின்றி சீயோனுக்கு வரும்போது, தேவன் உங்களோடும் கட்டப்பட்டிருப்பார். உங்களோடு தம்மைச் சம்மந்தப்படுத்திக்கொள்வார். நீங்கள் கட்டளையிட, அதை அவர் உங்களுக்காகச் செய்து முடிப்பார் (ஏசாயா 42: 26), நீங்கள் எதைக் கேட்டாலும், யாது கட்டளை கொடுத்தாலும், உங்கள் நிமித்தம் அதை நிறை வேற்றுவார். எந்த மனிதனும் நமக்கு இவ்வளவு பெரிதான காரியத்தைக் கொடுக்க முடியுமோ? ஆகையால் நாம் எந்தச் சிக்கலையாவது தீர்ப்பதற்கோ, எதையாவது சாதிப்பதற்கோ, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கோ எதற்காயினும் மனுஷீக ஞானத்தையோ, மாம்ச புயபலத்தையோ சார்ந்திருப்போமாகில் அது மதியீனமான காரியமே. நாம் சீயோனுக்கு வருவதின் மூலம் தேவன் நம்மோடுபிணைக்கப்படுகிறார். நமது காரியங்களில் ஜெயமடைந்து நமது விசுவாசத்தின் மூலம் நஷ்டங்களை எல்லாம் திருப்பிக்கொள்ள வாய்ப்பிருக்கும்போது, பயனற்ற மனுஷீக முறைகள் விருதாவல்லவா? ஆபிரகாம் சில காரியங்களில் தவறுகள் செய்திருந்தான். உதாரணமாக, ஆபிரகாம் சாராளின் யோசனைக்குச் செவிசாய்த்து, ஆகாரை மணம் புரிந்தது ஒரு மாபெரும் பிழை என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், ஆகார் வழியாக வந்த இஸ்மவேலர் இன்றுவரை இஸ்ரவேலருக்கு இடுக்கணும், இடையூறும் விளைவித்துக்கொண்டேயிருக்கின்றனர்! ஆகிலும் எல்லாவற்றையும் ஆபிரகாம் சீயோனிலே திரும்பப் பெற்றுக் கொண்டதுபோல, நாமும் பல நஷ்டங்களையடைந்திருந்தாலும், கர்த்தருடைய வீடாகிய சீயோனுக்கு வரும்போது, விசுவாசத்தின் மூலமாக, அவைகளையெல்லாம் திருப்பிக்கொள்ளலாம்.
சீயோனுக்கு வந்ததினால், ஆபிரகாமுக்கு உண்மையான, ஜீவனுள்ள விசுவாசம் கிடைத்தது, ஆரம்பத்தில் ஆபிரகாமுக்குச் சிறிதளவு விசுவாசம் மாத்திரமேயிருந்தது என்பதில் சந்தேகமில்லை. அவனுக்கு ஓரளவு விசுவாசம் இருந்த காரணத்தால் தான் அவன் கல்தேயருடைய ஊர் என்னும் இடத்தை விட்டு, தன் இனஜனத்தை மறந்து, தேவனுடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து புறப்பட்டான். தன்தாய் நாட்டையும், சுற்றத்தாரையும், வீடுவாசலையும் மறந்து, தூரதேசத்திற்கும், அறியாத பாஷைக்காரர் நடுவிலும் பிரயாணம் செய்தது பெரிய தியாகந்தான்; ஒரு புரட்சிகரமான செயல்தான். ஆயினும் அது குறைவுள்ள, அதாவது பூரணமடையாத விசுவாசத்தின் கிரியையே. ஆதியாகமம் 22-ஆம் அதிகாரத்திற்கு வருகின்ற வேளையில்தான், ஆபிரகாமின் விசுவாசம் பூரணப் பட்டது என்பதாக நாம் காணலாம். தன் மகனைப் பலியிட்டாலும், மரித்தோரிலிருந்தும் தேவன் ஈசாக்கை உயிரோடெழுப்பித் தருவார் என்ற சந்தேகமற்ற, உண்மையான விசுவாசம் உருவாயிற்று. தன், ஏக சுதனைத் தானே கொலை செய்யப்போகின்ற வேளையிலும், தேவன் தமது வாக்கைக் காப்பாற்றுவார், கொலையுண்ட தன்மகனைக் குறைவின்றி உயிரோடெழுப்பித்தருவார் என்ற திடநம்பிக்கை எளிதில் கிடைக்கும் ஒரு விசுவாசமல்ல, அது அரிது! அரிது! அது ஆபிரகாமுக்கே உரிய அலாதி விசுவாச மெனச்சொல்லலாம்.
கர்த்தருடைய வீட்டை விட்டு விலகி வாழ வேண்டாம், கர்த்தருடைய வீட்டை அற்பமாய் எண்ண வேண்டாம். சபை கூடிவருதலையும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் இகழ வேண்டாம். தேவனுடைய வீட்டைக் கனப்படுத்தி, உங்கள் முழுப்பங்கையும் எடுத்துக்கொண்டு, நஷ்ட ஈடு பெறுங்கள். ஆபிரகாமின் வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டு முக்கியமான பாடங்களையும் கற்றுக்கொள்வோமாக. உங்கள் பொருளால் தேவனைக் கனப்படுத்தி, அவர் ஒருவரே உங்களை ஆசீர்வதிக்கமுடியும் என்ற உண்மையை ஒத்துக்கொள்வது, முதல் படிப்பினையாகும். இரண்டாவது போதனை என்னவென்றால், எளிய ஆனால் வலிய விசுவாசத்தோடு, அதாவது குழந்தையைப் போன்ற களங்கமற்ற ஆனால் உறுதியான விசுவாசத்துடன், நீங்கள் தேவனுடைய வீட்டிற்கு வரும்போது, தேவனுடைய தீர்மானத்தோடு பிணைக்கப்பட்டு, அவர் சித்தத்தின் மையத்திலிருப்பீர்கள். ஆமென், கர்த்தர் தாமே இப்பாக்கியங்களெல்லாவற்றையும் நாம் பெற்றானந்திக்கும்படி கிருபை செய்வாராக.