சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 10
மீட்டுக் கொள்வதின் இரகசியம்
மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும் முன்பு நாம் யாராயிருந்தாலும், நாம் செய்வது எதுவாயிருந்தாலும், அவையெல்லாம் வீண்! ஆதலால் அது நமக்கு நஷ்டந் தான். உலகையெல்லாம் ஜெயித்து, தான் விரும்பினவற்றையெல்லாம், ஒன்றும் குறைவில்லாமல் இறுதியில், வெல்லுவதற்கு, வேறு நாடுகள் இல்லையே என்று அங்கலாய்த்த, புகழ் பெற்ற அரசனாகிய மகா அலெக்ஸாண்டரின் வாழ்க்கையிலும் இஃது உண்மையே. அவன், தன் வாலிபப் பருவத்திலேயே, அதாவது அவனது முப்பதாவது வயதில், மரணம் அவனைச் சந்தித்த வேளையில், அவன் தன் ஜனங்களிடம், தன்னுடைய சவ ஊர்வலத்தில், தன் கைகள் இரண்டும் சவப்பெட்டிக்கு வெளியே வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். பின்னும் அவனது சவ ஊர்வலம் நகரத்தைச் சுற்றி வரும்பொழுது, அப்பெட்டிக்கு முன்பாக ஒரு சேவகன் சென்று, “புகழ் பெற்ற மாமன்னன் அலெக்ஸாண்டர் இவ்வுலகிற்கு வரும்பொழுது, வெறுங்கையனாக வந்தான். உலகையெல்லாம் கட்டி ஆண்டான் ! இப்பொழுது, வெறுங்கையனாகவே, இவ்வுலகை விட்டுச் செல்கிறான்” என்று கூவிக்கொண்டு செல்ல வேண்டுமென்ற தன் விருப்பத்தை வெளியிட்டான். அவன் இறந்தபொழுது, மக்கள் அவனது விருப்பப்படியே, அவனது கட்டளையை நிறைவேற்றி, எந்தப் பெரிய அரசனானாலும் சரி, இவ்வுலகை விட்டுக் கடந்து போகும்பொழுது, தான் விரும்பினவற்றைத் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது என்ற பேருண்மையை வெளிப்படுத்திக் காட்டினார்கள். இஃது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உண்மையன்றோ! நீர் யாராயிருந்தாலும் சரி, நீர் மனந்திரும்பாத நிலைமையிலிருக்கும்போது, உமது சாதனை, எவ்வளவு அரியதாக இருந்தாலும், அவையெல்லாம் வீணே! உம்முடைய பாவத்திற்குரிய ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து நீர் தப்பித்துக் கொள்ள முடியாது. நியாயத் தீர்ப்பின் நாளிலே, அந்தத் தண்டனையிலிருந்து உமது உற்றாரோ, சுற்றத்தாரோ அல்லது உம்மீது நல்லெண்ணங் கொண்ட வேறு எவரோ உம்மை விடுவிக்க முடியாது. இதனிமித்தமே மக்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்.
சென்ற நூற்றாண்டில், பெரிய அறிவாளியும் புகழ் பெற்ற எழுத்தாளருமான ‘வால்டேயர்’ என்பவர் பிரான்சு நாட்டிலே வசித்து வந்தார். வேதாகமத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லாதவர். தம்மை ஒரு நாத்திகன் என்றே அழைத்து வந்தார். அவருக்குக் கடவுள் மீது நம்பிக்கையில்லாததுடன், தேவபக்தி உள்ளவரையும் எள்ளி நகையாடி வந்தார். இறுதியில், வைத்தியர்களாலும், சிறந்த நிபுணர்களாலும் கண்டுபிடிக்க முடியாத கொடிய பிணி அவரைப் பிடித்தது. இரவு வேளைகளில், மிகவும் அச்சமுற்றவராய்க் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய முகம் கொடூரமாக மாறினது. ! கொடிய உள்ளத்தின் வேதனையை அது பிரதிபலித்துக் காட்டிற்று. பார்ப்பவர்கள் கண்டு பயந்து, அவரை விட்டு விலகிச் சென்றனர். அவருடைய உடல்நலத்தைக் கவனிக்கும் மருத்துவப் பெண்ணும் (Nurse) ஒரு இரவுக்கு மேல், அவருக்குப் பணிவிடை செய்ய மறுத்தாள். இவ்விதமாக அவருடைய அந்தியகாலம் அந்தகாரத்திலும், பரிதாபத்திலும் முடிந்தது.
நீர் மரணத்தை எவ்வாறு சந்திக்கப் போகிறீர்? நீர் செய்த எல்லாவற்றையும் குறித்து, ஒருநாளில், தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமே! நீர் உமது பாவத்திலே மரிப்பீராகில், தேவனது நியாயமான தீர்ப்பிற்கும், நித்தியமான ஆக்கினைக்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும். அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலே உமது பங்காகும்! தேவன் அன்பாகவே இருக்கிறார்! இரக்கம், தயவு, கிருபை எல்லாம் அவருடைய குணாதிசயங்களேயென்றாலும் அதே அன்பின் தேவன், நீதியின் தேவனாகவும், பாவத்தை வெறுக்கும் பரிசுத்த தேவனாகவும் இருக்கிறார். அவருடைய நீதியும், நியாயமும், எப்பொழுதும் நிறைவேற்றப்பட வேண்டும்.
மூன்று தெய்வீக விதிகளை, நாம் எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும். அவையாவன; (1) பரிசுத்தம் 2) நீதி (3) அன்பு. இம்மூன்றும் மாறாத தெய்வீகப்பிரமாணங்களாகும். நீர் பாவத்தில் ஜீவிப்பதால் முதல் விதியாகிய பரிசுத்தத்தை மீறுகிறவராயிருக்கிறீர். இவ்விதமாக, பாவத்திலேயே ஜீவித்து, பாவியாகவே மரிப்பீராகில் நீர் தண்டிக்கப்பட வேண்டுமென, நீதியின் பிரமாணம் கோருகின்றது. ஆனால் அன்பின் தேவனோ, தமது மூன்றாவது விதியின் ஆதாரத்தில், உமக்கு இரட்சிப்பின் வழியையும், நித்திய ஜீவனையும் ஈவாக அளிக்கிறார். இந்த விதியின் அடிப்படையில், நீர் செயல்படுவீராகில், நீர் ஆக்கினைத் தீர்ப்பினின்று நீங்கி, மிகுதியான கனிகளைத் தரும் பரிபூரண ஜீவனை அனுபவிப்பீர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாகிச் சிலுவையில் மரித்ததின் மூலம், இந்த மூன்று விதிகளையும் நிறைவேற்றி முடித்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக தங்கள் இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கையிலே, அவர்கள் மறுபிறப்பு அடையும்பொழுது இம்மூன்று பிரமாணங்களும் நிறைவேறுகின்றன.
இரண்டாவது வகையான நஷ்டம், மறுபிறப்பு அடைந்தவர்களின் வாழ்க்கையில் காணப்படுவதாகும். இது அவர்களது அறிவு குறைவினாலோ மதியீனத்தினாலோ அல்லது பாவத்தினாலோ விளைவதாகும்,
நமது அறியாமையினாலேயே, அதிக நஷ்டத்தை நாம் அடைகின்றோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் இங்கிலாந்திற்கு மேற்படிப்புக்காகச் சென்றிருந்த சமயம் ஒரு சம்பவம் நடைபெற்றது. மூடுபனிகாலத்தில் ஒருநாள் நான் லண்டன் நகருக்குச் சென்றிருந்தேன். அன்றிரவு, மிகப்பயங்கரமான குளிராயிருந்தது. மறுநாள் காலையில் நான் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரியானவள் என்னை நோக்கி, “மிஸ்டர் பகத்சிங் ! இரவில் நன்றாகத் தூங்கினீர்களா?” என்று வினவினாள். அதற்கு நான், “இல்லை! அம்மா ! கடுங்குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தேன். நான் என்னுடைய கம்பளிக் கோட்டையும், என் கால் உறைகளையும் மாட்டிக் கொண்டிருந்த போதிலும், குளிர் என்னை வாட்டிவிட்டது. இரவு முழுவதும், அவ்வாறு கடுங்குளிர் காரணமாக நடுங்கிக் கொண்டிருந்தபடியால் நன்றாகத் தூங்கவில்லை” என்று கூறினேன். உடனே, அவ்வீட்டு அம்மையார் வியப்படைந்தவளாய், “என்ன உங்கள் படுக்கையில் ஒரு கம்பளிப் போர்வைகூட இல்லையா?” என வினவினாள். நான் ஒரு கம்பளிப் போர்வையையும் பார்க்கவில்லை என்று பதில் கூறினேன். பிறகு, அந்த அம்மையார் என்னை, நான் படுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்று, படுக்கையின் மேல் விரிப்பை நீக்கினாள். அங்கே, ஒன்றல்ல, மூன்று முதல்தரமான புதிய கம்பளிகள் விரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அவைகள், நான் என் வாழ்நாளிலே பார்த்திராத மிகச் சிறந்த கம்பளிகளாயிருந்தன. ஆனால் படுக்கையின் மேல்விரிப்பு, அக்கம்பளிகளை மறைத்துக் கொண்டிருந்தபடியால், அவைகள் என் கண்களில் படவில்லை. அவை, அங்கிருந்தும் என் அறியாமையினாலே, அவற்றைப் பயன்படுத்தாதவனாக இரவில் குளிரால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். அது என்னுடைய முட்டாள்தனமேயாகும். அருமையான மூன்று புதிய கம்பளிகள், என் படுக்கையின் கீழ் இருந்தும், நான் தூக்கமின்றி, நடுங்கிக்கொண்டு, விழித்திருந்த நஷ்டம்! என் அறிவுக் குறைவினால் ஏற்பட்டதேயன்றி வேறல்ல!
இதைப் போன்றே, இரட்சிக்கப்பட்ட அநேக விசுவாசிகள், அருமையான வேதாகமங்களை வைத்திருந்த போதிலும், அது அவர்களுக்கு, மூடி, முத்தரிக்கப்பட்ட புத்தகமாகவே உள்ளது. அவர்கள் அவைகளை மிகப் பத்திரமாகப் பாதுகாக்கின்றனர். ஆனால், அதனுள்ளே என்ன இருக்கிறது அல்லது அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறியாதிருக்கின்றனர் ! அவர்கள், சுமார் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து, அழகான தங்க முலாம் (gold gilt) பூசப் பெற்ற வேதாகமத்தை வாங்கியிருக்கலாம். ஆனாலும், தேவ வசனத்திலுள்ள, வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி, அனுபவிக்கும் சிலாக்கியத்தை இழந்து போகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் மா நிலத்திற்கு ஒரு ‘மிஷினரி’ வந்தார். அங்குள்ள கிராமங்களில், ஒரு வகையான ரொட்டி செய்வதுண்டு. அந்த ரொட்டி, ஒரு அடி விட்டமும், ஒரு அங்குல கனமும் உள்ளதாக, மிகுந்த பக்குவத்துடன், நேர்த்தியாகச் செய்யப்படும். அதன் மீது வெண்ணெய் தடவி அதற்குத் தொடுகறியாக, சமைத்த இறைச்சியோ, காய்கறிகளோ, கீரையோ வைப்பார்கள். அந்த மிஷினரிக்கும், ஒரு இரவில், இவ்விதமான ரொட்டியைக் காய்கறி கூட்டுடன், பரிமாறினார்கள். அவர் ரொட்டியின் மேலிருந்த, காய்கறி பதார்த்தங்களை மட்டும் சாப்பிட்டு விட்டு. “இதோ தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ரொட்டியைத் திருப்பிக் கொடுத்து விட்டார். அது ரொட்டி என்று அறியாமல், ‘தட்டு’ என்று தவறாக எண்ணியதால் அவர் அந்த ரொட்டியின் ருசியை அறிய முடியவில்லை. அவருக்கு விளக்கிக் கூறின பொழுது, அந்த ரொட்டியின் அருமையை உணர்ந்தார். இவ்விதமாகவே, அநேக விசுவாசிகள், தங்களது அறிவுக் குறைவினால், தேவனுடைய திட்டத்தையும், நோக்கைத்தையும், வேதாகமத்தின் மூலம், தெரிந்து கொள்ளாததின் நிமித்தமாக மேலான ஆசீர்வாதங்களை இழந்து, பெரும் நஷ்டத்திற்குள்ளாகின்றனர். சில வேளைகளில், தங்களுடைய, தவறுகளினாலும், பாவங்களினாலும், தங்களது சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாது,பிறருக்கும், முழுச் சபைக்குமே பெரும் நஷ்டத்தை விளைவிக்கின்றனர். தேவன் ஆபிரகாமுக்கும், அவனது சந்ததிக்கும், நித்திய ஆசீர்வாதங்களைக் கட்டளையிட்டிருந்தும் (ஆதி. 12:2,3), இஸ்ரவேலர், 400 ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறி, 40 ஆண்டுகளாக வனாந்தரத்திலே சுற்றித் திரிந்த பிறகுதான், பற்பல பரீட்சைகளுக்கும், சோதனைகளுக்கும் ஆளாகி, இந்த ஆசீர்வாதங்களை அறிந்து கொள்ளலாயினர். இஸ்ரவேலர், எகிப்தை விட்டு வெளி வந்த உடனே பாலும், தேனும் ஓடுகிற கானான் தேச முழுவதையும் சுதந்தரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் தேவனுக்கு, முழுவதுமாகக் கீழ்ப்படியாததினால், தோல்வியடைந்தவர்களாயும், மனமடிந்தவர்களாயும், 40 ஆண்டுகளாக, வனாந்தரத்திலேயே சுற்றி அலைந்தனர். சின்னஞ் சிறு காரியங்களில், அவர்கள், முதலிலிருந்தே தோல்வியடைந்தார்கள். சிறு நஷ்டம் பெரு நஷ்டத்திற்கு வழி நடத்திற்று.
அன்பின் தேவன், இதனிமித்தம் தமது அநாதி நோக்கத்தையும், தீர்மானத்தையும் மாற்றிவிடவில்லை. அவர்கள் தங்கள் இழப்பையெல்லாம், மறுபடியும் பெற்றுக்கொள்ளும் வரை தேவன், அவர்களோடு, கிரியை நடப்பித்து வந்தார், இஸ்ரவேலின் வரலாற்றிலிருந்து, இழந்தவற்றைப் பெறுமட்டுமாக, தேவன் தமது ஜனங்களிடம் கிரியைகளை நடப்பித்து, இவ்வாறு தமது மாறாத அன்பையும், தயவையும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறார் என்பதை நாம் கற்றறியலாம். அவரது குறிக்கோள் நிறைவேறும் மட்டும் அவருடைய விதிகளை ஒருவரும் மாற்ற முடியாது-அவர்கள் ஏழையோ, பணக்காரரோ, அரசனோ, ஆண்டியோ, விசுவாசியோ, ஊழியக்காரனோ யாராயிருந்தாலும் தெய்வீக விதிகளை ஒருவரும் மாற்ற முடியாது. நமது அறியாமையின் காரணமாக, நாம் அவற்றை மாற்றத் துணிந்தால் ஒருநாளில், மிகப் பெரிய நஷ்டத்தை அடைய வேண்டியதாகும்.
தேவன் நம்மைத் தம்முடைய உடன் ஊழியக்காரராயிருக்கும்படி தெரிந்தெடுத்துள்ளார். அவரது அநாதித்தீர்மானங்களை நம்மிலும், நம் மூலமாகவும் நிறைவேற்ற விரும்புகிறார், இதற்கு ஓர் எடுத்துக்காட்டை ஏலியின் ஜீவியத்திலே காணலாம். ஏலி ஒரு பிரதான ஆசாரியனாயிருந்த போதிலும். தேவனுக்கு ஏற்றவனாக இராததினால், தேவபயமற்ற தன் பிள்ளைகளையும், மதிகேடான காரியங்களைச் செய்து வந்த இஸ்ரவேலரையும், கண்டித்துச் சீர்
திருத்தத் தவறினான். ஏலியின் தவறைக் கண்டித்துணர்த்தி, அவனைத்தண்டிக்க தேவன் விரும்பினார். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு ஒரு தகுதியான ஊழியக்காரன் அப்போதில்லை. அதற்காக அநேக வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகுதான், சாமுவேலை ஆயத்தப்படுத்தி அவனைத் தமது வாயாக உபயோகப்படுத்தினார். சாமுவேல், சிறுவனாயிருக்கும் போதே தேவன் அவனோடு பேசத் தொடங்கினார். ‘சாமுவேலே’! ‘சாமுவேலே’! என்று கூப்பிட்டார். முதலாவதாக, சாமுவேல், அதை மனித சத்தமாகவே எண்ணி, ஏலியினிடத்திற்கு ஓடினான், ஆனால், மூன்றாம் முறைதான், அது தேவனுடைய சத்தம் என்று அறிந்தான். தேவன், நேரடியாகவே ஏலியினிடம் பேசியிருக்கலாம். ஏலியைக் கூப்பிட்டு, அவனது பிழையை விளக்கி, அவன் மீதும், அவன் பிள்ளைகள் மீதும், வரப்போகிற நியாயத்தீர்ப்பையும் தண்டனையையும், தெரிவித்திருக்கலாம். ஆனால் தேவன் அவ்வாறு செய்யவில்லை, அதற்குப் பதிலாக, அநேக ஆண்டுகள் காத்திருந்து, சாமுவேலைக் கொண்டு, ஏலியை எச்சரித்தார். இதுவே தேவனுடைய திட்டம். தேவன், அநேக உடன் ஊழியர்களையும், பங்காளிகளையும் தேடுகிறார். இஃது ஒரு பெரும் பாக்கியம் என்றாலும், அதில் மிகுந்த பொறுப்பு இருப்பதால் அதற்கு நீண்டகாலப் பக்குவம் தேவை. வேதாகமத்தில் பதிவாயிருக்கும், பலருடைய வரலாறுகளினின்றும், நாம் அறிந்து கொள்ளும் பேருண்மை யாதெனில், கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள், அவரை மறுபடியும், மறுபடியும் துக்கப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் தேவன் அவர்களைப் புறக்கணியாது “நீங்கள் என்னுடைய சொந்த ஜனம் ! சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருக்கிறீர்கள் ! நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும், பரிசுத்த ஜாதியுமாயிருப்பீர்கள்’ என்று உறுதிமொழி கொடுத்து அவர்களை எச்சரித்தும், உற்சாகப்படுத்தியும் வந்தார் (யாத்திராகமம் 19:5-6). ஆகிலும், அவர்கள், இதயக் கடினமுள்ளவர்களாகவும், மந்தபுத்தியுள்ளவர்களாகவும், குருட்டாட்ட முள்ளவர்களாகவுமிருந்து, ஆண்டவரை வேதனைப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள், ஆயினும் தேவன் அவர்களை முற்றிலுமாய்க் கைவிட்டுவிடவில்லை. அவர்களுடன், இடைவிடாது கிரியை நடப்பித்துக்கொண்டேயிருந்தார். தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி, அவர்களுக்குப் போதித்து, பக்குவப்படுத்தி, அதன் மூலம், அவர்களைத் தமது உடன் ஊழியர்களாகத் தேர்ந்தெடுத்தார். ஆண்டுகள், பல சென்றன என்றாலும், அவர் தம்முடைய தெய்வீகச் சட்ட திட்டங்களை மாற்றவில்லை.
திருமறை ஆதாரத்தில், நம்முடைய நஷ்டங்களின் தன்மையையும், காரணங்களையும் ஆராய்ந்து வருகிறோம். இப்பொழுது, தோல்விகளை மேற்கொள்ளவும், நஷ்டங்களைச் சரிக்கட்டவும், இழந்தவைகளைத் திரும்பப் பெறவும், தேவையான, சாதனங்களைப் பற்றிச் சிந்திப்போமாக. நாம் முன்பே பார்த்தபடி-எபிரோன், சீயோன் என்ற இரண்டு பெரிய ஏதுக்களின் மூலமாக நாம் இழந்தவற்றையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வழிகளைத் தேவன் பயன்படுத்தினார். தம் ஜனத்திற்கு நேரிட்ட எல்லாத் தீங்குகளின்றும் அவர்களை விடுவிப்பதற்கும், காப்பதற்கும், இந்த இரு வழிகளையே தேவன் கையாண்டு வருகிறார்.
மனித பண்பாட்டினாலும், அனுதாபத்தினாலும், தன் நெருங்கின இனத்தானாகிய, லோத்துக்கு உதவி செய்ததின் விளைவாக, ஆபிரகாமுக்கு நஷ்டம் ஏற்பட்டது. லோத்து, ஆபிரகாமிடமிருந்து பிரிந்து சென்ற பின்னரே, தேவன் ஆபிரகாமுக்குப் பதிலளித்தார். லோத்து, ஆபிரகாமுடன் இணைந்து வாழ்ந்த காலமெல்லாம், தேவன் ஆபிரகாமுக்கு. வெளிப்படவோ, அவனுடன் பேசி உறவாடவோ முடியாமற்போயிற்று, அது போலவே, அநேக விசுவாசிகளும் லோத்துக்கொப்பான உலக மக்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் தேவனோடு சம்பாஷணை செய்யும் சிலாக்கியத்தை இழந்து விடுகின்றனர்.
‘எபிரோன்’ என்றால் ‘ஐக்கியம்’ அல்லது ‘அந்நியோன்’ னியம் என்று பொருளாகும். முதலாவது தேவனோடுள்ள ஐக்கியம் – அதாவது பிதாவோடும், குமாரனோடும் நமக்குள்ள ஐக்கியம். இரண்டாவதாக பரிசுத்தவான்களுடன் கொண்டிருக்கும் அந்நியோன்னியம் (1யோவான் 1,3, 4.7). ஒரு பாவி தேவனோடு பேசவோ, அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ளவோ முடியாது. இதனால் அவன் தேவனுடைய திட்டங்களையும் நோக்கத்தையும், இரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியாது. தேவனுடைய ஜீவன், அவனுக்குள் ஊற்றப்பட முடியாத காரணத்தால் அவன் அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டாலும், சில வேளைகளில் தேவன் அவனுடைய, விண்ணப்பங்களுக்கு விடை அளித்தாலும், அவன் தேவனை விட்டு, வெகு தூரமாகவே இருக்கின்றான்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திலிருந்த நாட்களில், அவர் செய்த அநேக அற்புதங்களைக் கண்ட பிறகு, அநேகர், அவரைக் குறித்து “இவர்தான் கிறிஸ்து! இவர் கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும். இவரே நம்முடைய மீட்பராகிய மேசியா!” எனக்கூறினார்கள். “மனுஷர் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை.” இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.” (யோவான் 2:23-25). ‘ஆண்டவரே! நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம்” என்று அவர்கள் உறுதி கூறினும் ஆண்டவரோ அவர்களை நம்பவில்லை. அவர்களுடைய இருதயங்கள், அக்கிரமங்களாலும், பாவங்களாலும், நிறைந்திருந்தது என்பதையும், பாவ வழிகளை விட்டு விடுவதற்கு, அவர்களுக்கு மனமில்லை என்பதையும் இயேசு நன்கு அறிந்திருந்தார். அவர்கள், கிளர்ச்சியூட்டும் காரியங்களையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும், தேடினார்களேயன்றி, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவோ, மறுரூபமடையவோ சிறிதும் விரும்பவில்லை. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து அவைகளை விட்டுவிட மனதுள்ளவர்களாக, இதயத்தின் ஆழத்திலிருந்து, ;கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும், கர்த்தரின் ஜீவன் நமக்குள் பாய்ந்தோட முடியும்.
உதாரணமாக, நீங்கள் தெரு வழியே சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பிச்சைக்காரன் ஒருவன் உங்களைப் பார்த்து, “அப்பா!” ஐயா” என்று அழைக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதை அங்கீகரித்து, அதற்குப் பதிலாக “ஆம்! என் மகனே!” என்று கூறுவீர்களோ? இல்லை. ஏனெனில், அப்பிச்சைக்காரன் வேண்டுவதெல்லாம் உங்கள் பணம்தான் என்பது உங்களுக்குத் தெரியும். “காரியம் ஆகுமட்டும் கழுதையானாலும் காலைப் பிடி” என்ற பழமொழிப்படி அப்பிச்சைக்காரனும் நடந்து கொள்ளுகிறான். இவ்வாறே தான் பலர் தங்கள் காரியத்தைச் சாதிப்பதற்காக அல்லது இக்கட்டுக் காலத்தில் சகாயத்திற்காக தேவனை நோக்கி, “பிதாவே” “தகப்பனே!” என்று உரிமை பாராட்டுவார்கள். ஆனால் உண்மையிலோ, அவர்கள் இருளின் பிள்ளைகளே. அவர்கள் தேவனோடுள்ள உண்மையான ஐக்கியம் இன்னதென்று அறியாதவர்களாயிருக்கிறார்கள்.
நம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு நம் இதயங்கள் சுத்திகரிக்கப்படும்போது, நாம் தேவனோடு ஐக்கியம் கொண்டு, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் இருப்பதை வாஞ்சிப்போம். தேவனோடுள்ள இந்த ஐக்கியமானது, நாம் அவருடைய பிள்ளைகளோடும் நெருங்கின தொடர்பு கொள்வதற்கு ஒத்தாசை புரிகிறது. இக்காலத்தில் “தேனீர் கூட்ட” மென்றழைக்கப்படும் சில குழுக்களுண்டு. உண்மையான ஆவிக்குரிய ஐக்கியம் இப்படிப்பட்டதல்ல. காப்பி,
தேனீருக்காகவோ அல்லது சிற்றுண்டி விருந்திற்காகவோ, ஆவிக்குரிய கூட்டங்களுக்குச் செல்லும் நிலைமை இருக்கக்கூடாது. இவ்விதமாக, ஏதாவது கிடைத்தால் தான் சிலர் கூட்டங்களுக்குச் செல்ல விரும்புகின்றனர். நீங்கள் இவ்விதமாக இருப்பீர்களென்றால், நீங்களும் உண்மையான ஐக்கியம் இன்னதென்று அறிந்து கொள்ளாதவர்களே. நாம் எவ்வளவு அதிகமாகக் கர்த்தரோடுகூட நடந்து, அவரோடு ஐக்கியப்பட்டு ஜீவிக்கின்றோமோ, அந்த அளவிற்கு, நாம் பரிசுத்தவான்களோடும் ஐக்கியமாயிருக்க ஆசிப்போம். இவ்விரண்டையும் பிரிக்க முடியாது. தேவனோடுள்ள ஐக்கியம் எப்பொழுதும், அவருடைய பிள்ளைகளோடு கூட ஐக்கியப்படுவதற்கே நம்மை நடத்தும்.
அநேக விசுவாசிகள், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை நாடுவது கிடையாது. செல்வச் செருக்கினாலோ, அல்லது கல்வி, குலப் பெருமையினாலோ, உலகப்பிரகாரமாக தங்களை விடத் தாழ்ந்தவர்களோடு, ஐக்கியமாயிருப்பதற்கு விரும்புவதில்லை. அதை இழிவாக நினைக்கின்றனர். ஒரு நகரத்தில் ‘சார்லஸ்’ என்ற ஒருவர் இருந்தார். இவருக்கு மாதம் ரூபாய் 55ம் இவரது மனைவிக்கு 120ம் ஆக மொத்தம் ரூ. 175 மாதவருமானம் கிடைத்தது. ஒரு நாள் ஒரு சகோதரன், அவரை வீதியில் சந்தித்து, சுவிசேஷக் கூட்டமொன்றிற்கு வருந்தி அழைத்தார். “மத சம்பந்தமான கூட்டமா? அப்பேர்ப்பட்ட கூட்டங்களுக்குச் செல்லுவதற்கு எங்களுக்கு நேரமில்லை” என்று சார்லஸ் பதில் கூறினார். ஆனால் அவருடைய உள்ளான மனதில், “நான் மாதம் 55 ரூபாயும், என் மனைவி ரூ. 120மாக சம்பாதிக்கின்றோமே. நாங்கள் எவ்வாறு இந்த ஏழை கிறிஸ்தவர்களின் கூட்டங்களுக்குச் செல்ல முடியும்? ஏழை, எளியவர்கள் போனால் போகட்டும். நாங்கள் போகவேண்டுமென்றால், ஆலயத்திற்குத்தான் போவோம் என்று எண்ணிக்கொண்டார். சில நாட்களுக்குப் பின், சார்லஸிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அதில், “தயவு செய்து, உடனே வந்து என் மனைவிக்காக ஜெபியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். நான் போய்ப் பார்க்கிற வேளையிலே, அவருடைய மனைவி மிகவும் நோயுற்ற நிலையில், படுத்த படுக்கையாய்க் கிடந்தாள், அவளுடைய பற்கள், நாக்கிலே புகுந்து, நாக்கு தீவிரமாக வீங்கிக்கொண்டிருந்தது. மருத்துவர்கள், எல்லா சிகிச்சை முறைகளையும் கையாண்டும், ஒன்றும் பயனளிக்கவில்லை. “சகோதரரே! நீங்கள் என்னில் அன்புகூர்ந்து, என் மனைவிக்காக விண்ணப்பம் பண்ணுங்கள்” என்றார். தன்னுடைய பிள்ளைகளையெல்லாம் சுட்டிக் காண்பித்து “இவர்களெல்லாம் என் பிள்ளைகள், இவர்களுக்கு என்ன நேரிடும்? எவ்வாறு சமாளிப்பேன்?” என்று சத்தமாக வாய்விட்டு அழ ஆரம்பித்தார். அப்பொழுது நான் என் மனதிற்குள்ளாக இனிமேலாவது முன்போல் நான் ரூ, 55யும், என் மனைவி 120யும் ஆக, மொத்தம் 175ரூ சம்பாதிக்கிறோம் என்று மேட்டிமையுடன் இருக்க மாட்டீர்கள் அல்லவா? எங்கள் சம்பாத்தியம் எங்களைக் காப்பாற்றவோ, இரட்சிக்கவோ மாட்டாதே என்று கூறுவீர்கள் அல்லவா?” என்பதாக எண்ணிக்கொண்டேன், ஆம், கஷ்டங்களும், நஷ்டங்களும் நேரிடும்போது மட்டுமே நமக்கு தேவன் வேண்டும், எல்லாம், சீரும் சிறப்புமாக, செம்மையும், செழிப்புமாக இருக்கும்பொழுது தேவனை அதிகமாகத் தேடுவதில்லை. தேவனுடைய பிள்ளைகளோடு ஐக்கியப்பட நாடுகிறதுமில்லை. தேவனுக்கடுத்த காரியங்கள் நமக்கு அந்நியகாரியங்களாகத் தோன்றலாம். “எங்களைப்போன்ற செல்வந்தரும், கல்விமான்களும் எவ்வாறு ஏழை எளியவர்களுடன் கலக்க முடியும்?” என்ற சிந்தையுடன் இருக்கும் அநேக விசு வாசிகள், ஆவிக்குரிய தரித்திரர்களாகவும், தேவனுக்கு முன்பாகப் பிச்சைக்காரர்கள் போலவும் காணப்படுவர், அவர்களுக்குப் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தின் அருமையும் பெருமையும், சக்தியும், வன்மையும் தெரிவதில்லை, இந்த குறைபாட்டினால், அநேக கிறிஸ்தவர்கள், கர்த்தருடைய ஜனத்தைவிட, உலக மக்களிலேயே, அதிக நட்பும், பாசமும் கொள்கின்றனர். இதனால் தங்களுடைய ஆவிக்குரிய நஷ்டம், எவ்வளவு அதிகம் என்பதை உணராது போகின்றனர். மெய்யான ஐக்கியத்தையும், அந்நியோன்னியத்தையும், அனுபவிப்பதற்கு, ஒவ்வொரு ‘லோத்திடமிருந்தும்’ விடுவிக்கப்படவேண்டும். உலக நேசத்தையும், பாவிகளின் சிநேகத்தையும் முற்றிலும் விட்டு விலக வேண்டும்.
‘எபிரோன்’ என்பது, விசுவாசம் என்றும் பொருள்படும். யோசுவாவின் புத்தகத்தில், காலேப் தனக்கு ‘எபிரோனை’ச் சொந்தமாகத் தரும்படி, யோசுவாவிடம் விண்ணப்பம் செய்வதைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அந்நாட்களில், எபிரோனில், இராட்சதர்கள் வாழ்ந்து வந்தனர், அந்த இராட்சதர்களைப் பற்றி சிறிதேனும் அச்சமின்றி, அப்பகுதியைத் தான் கைப்பற்றி விடலாம் என்ற பூரண விசுவாசத்துடன் காலேப் கேட்டான். அங்குள்ள ஒவ்வொரு இராட்சதனையும், ஜெயித்து அழித்து விடுவதற்கு, தேவன் சக்தியளிப்பார் என்ற திட விசுவாசம் அவனுக்கிருந்தது. எனவே எபிரோனில் வாழவேண்டுமாயின், வழில் குறுக்கிடும், எந்த இராட்சதனையும் அழிக்கும், அஞ்சா நெஞ்சமும், உறுதியான விசுவாசமும் நமக்கிருக்க வேண்டும், மாற்கு சுவிசேஷம் 11:22ன்படி, விசுவாசத்தின் மூலம், மலைகளையும் அப்புறப்படுத்தி விடலாம்.
‘எபிரோன்’ என்பதற்கு, அடைக்கலம் புகுமிடம் என்ற பொருளுமுண்டு. தேவன் தம்முடைய ஜனத்திற்கென்று ஆறு அடைக்கலப் பட்டணங்களைப் பிரத்தியேகப்படுத்தி வைக்கும்படி கூறினார் (யோசுவா 21). ஒருவன் யாரையாகிலும் அறியாமல் கைப்பிசகாகக் கொலை செய்து விட்டால், கொலையுண்டவரின் நெருங்கின இனத்தாரோ, நண்பர்களோ பழிதீர்க்கும் நோக்கத்துடன் குற்றவாளிக்குத் தீங்கு இழைக்கா வண்ணம், ஓடி தப்பித்துக் கொள்வதற்கு அனுகூலமாக இந்த அடைக்கலப் பட்டணங்களையும் தேவன் ஒதுக்கி வைத்தார், அவற்றுள் ஒன்று ‘எபிரோன்’ (யோசுவா 21:13).
இவ்வுலகில், அநேகர் தங்கள் அறியாமையினாலும், மதிகேட்டினாலும், தாங்கள் செய்வது பாவம் என்று அறியாமலே பாவத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும், அவர்களது சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளுமே அவர்களைப் பாவத்திற்கு வழிநடத்துகின்றன. கெட்ட சிநேகிதர்களினாலோ, பாவம் நிறைந்த அயலகத்தாராலோ ஓரிடத்தில் தனிமையாக இருப்பதினாலோ, வறுமையினாலோ நம்மை வஞ்சிப்பது சாத்தானுக்குப் பெரிய காரியமல்ல. பலவீனமான ஒரு விசுவாசி பாவத்தில் விழுந்து விட்டால் அவனை மிகவும் குற்றப்படுத்திக் கண்டிக்க வேண்டாம். அவனைக் கைவிட்டு புறக்கணித்து மறந்து விடுதலுக்குப் பதிலாக, அன்பும் அனுதாபமும் பாராட்டிக் கைதூக்கி விட்டு, ஆதரவு அளித்தல் வேண்டும் (கலா 6:1-3). அதுதான் ‘எபிரோன் என்ற சொல்லின் மூன்றாவது அர்த்தம், ஆவியில் பலவீன முள்ளவர்களை, அன்பினால் அரவணைத்து அவர்களது பாரத்தைச் சுமந்து, அவர்கள் விழும் போதோ அல்லது சோதனைக்குட்படும் அபாயத்திலிருக்கும் போதோ அவர்களுக்காகப் போராடி ஜெபிக்க வேண்டும்.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவர் என்னிடம் வந்து “என் மனைவியும், மகளும் வீட்டை விட்டு எங்கோ போய்விட்டார்கள். இதனிமித்தம் எங்கள் குடும்பம் பாழாகிவிட்டது. தயவு செய்து எங்களுக்காக விண்ணப்பம் பண்ணுங்கள்.” என்று கேட்டார். உடனே நான் அவருக்காகவும் அவர் கேட்டுக் கொண்ட காரியங்களுக்காகவும் ஜெபித்தேன். அவர் போனபின்பு, நான் அவருக்காக மெய்யான பாரத்தோடு ஜெபிக்காமல் கடமைக்காக ஜெபித்தேன் என்று உணர்த்தப்பட்டேன், அதன்பின் ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்ற விசுவாசத்தோடு ஊக்கமாய் ஜெபித்து வந்தேன். மறுநாள் காலையில், கூட்டம் முடிந்தவுடன் இரண்டு பெண்கள் என்னைப் பார்க்கும்படி வந்தனர். முந்தின இரவில் யாருக்காகப்போராடி ஜெபித்தேனோ, அவர்களே அவ்விரு சகோதரிகளெனக் கண்டறிந்தேன். அவர்கள் என்னிடம் வந்து, “சகோதரனே, நாங்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு எங்கள் வீட்டை விட்டு வெகுதூரமாய்ச் சென்று விட்டோம். போகும் வழியில் உங்களிடம் வந்து ஜெபித்துப்போக ஆவல் எங்களுக்குண்டானதினால் நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்கள் புத்தியீனத்தையும், தவறையும் கர்த்தர் மன்னிக்குமாறு எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்” என்று கேட்டார்கள். அந்தக் குடும்பம் ஒன்றாக இணைந்தது. அதற்குப்பின் அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.
நியாயந்தீர்ப்பதாலோ, குற்றஞ்சாட்டுவதாலோ கெட்டுப்போனவர்களை நாம் மீட்டுக் கொள்ள முடியாது. சில வேளைகளில் விசுவாசிகளாகிய நாம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளுகிறோம். நமது இதயம் கடினப்பட்டு விடுகிறது. விசுவாசத்தில் பலவீனமானவர்களை நாம் சந்திக்கும் போது அவர்களை இழிவாக எண்ணி குற்றப்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக அவர்களை அன்புடனும், புன்சிரிப்புடனும் வரவேற்று அவர்களோடு கனிவுடன் பேசி, உதவி செய்யாததினிமித்தம் அவர்கள் தேவனை விட்டு விலகிச் சோரம்போக நாம் காரணராகிறோம். நமது கர்த்தரோ காணாமற் போன ஆடுகளின் பின்னே தேடிச் செல்லும் கரிசனையுள்ள நல்ல மேய்ப்பன். நசல்கொண்ட ஆடுகளைத் தமது தோள்களின் மீது சுமந்து செல்பவர். நாம் இழந்து போனவைகளை மீண்டும் பெற வேண்டுமாயின் ஆண்டவரைப் போல நாமும் அன்பும் அனுதாபமுடையவர்களாகவும் சிறுமைப்பட்டோருக்குப் புகலிடமாகவும் இருத்தல் அவசியம்.
நான்காவதாக, ‘எபிரோன்’ என்பது கர்த்தரையே முற்றிலுமாய்ச் சார்ந்திருப்பதைக் குறிக்கும். தாவீது தன்னுடைய வாழ்க்கையில், முதலாவது அடைந்த பெரிய நஷ்டத்திற்குக் காரணம் தேவனை முற்றிலும் சார்ந்திருக்க மறந்து, பெலிஸ்தரோடு சேர்ந்து போருக்குச் சென்றதே. சிக்லாகு’ சுட்டெரிக்கப்பட்டு, அவர்களது பெண்டீரும், பிள்ளைகளும், பொருட்களும், கொள்ளையிடப்பட்டுப் போனதற்குக் காரணமாகும். தாவீது தன் தவறை உணர்ந்து, மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பினபோது, தன் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவனாய், “அமலேக்கியரைப் பின் தொடரலாமா, கூடாதா’ என்று கர்த்தரிடம் விசாரித்தான். அதற்கு”நீ அவர்களைப் பின் தொடர்” என்று கர்த்தர் கூறினார். அவ்வாறே அவன் கீழ்ப்படிந்து சென்று; எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். அந்த நாளிலிருந்து, எல்லாக் காரியங்களுக்கும் தேவனிடம் விசாரிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டான். அத்தீர்மானத்தின்படியே “ஆண்டவரே! நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிற்குச் செல்லலாமா?” என்று விண்ணப்பித்தான். “நீ போகலாம்’ என்று தேவன் பதில் உரைத்தார். மேலும் “நான் எங்கே போகவேண்டும்?” என்று கேட்டபோது “நீ எபிரோனுக்குப் போ” என்று தேவன் கட்டளையிட்டார், அப்படியே தாவீது எபிரோனுக்குப் போனான். அது முதல் தாவீது ஒவ்வொரு சிறு காரியத்திலும் தேவனுடைய வழிநடத்தலுக்காகக் காத்திருந்தான். இவ்விதமாக 7 ஆண்டுகளும், 6மோதங்களுமாக அவன் எபிரோனில் சஞ்சரித்து, வெற்றி வாழ்க்கையின் இரகசியத்தைக் கடைப்பிடித்து வந்தான். அவன் மாபெரும் அரசன் என்றும், அவனது மனிதர் பராக்கிரமசாலிகள் என்றும், ஏற்கனவே பார்த்தோம். அவனுடைய சத்துருக்களாகிய பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாக வந்தபோது, அவன் தனது இராணுவ பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் தன் தேவனையே சார்ந்திருந்தான். இவ்விதமாக, ஒவ்வொரு காரியத்திலும், தேவனைக் கலந்து ஆலோசிப்பதின் மூலமாக, ஒவ்வொரு இழப்பையும் மீட்டுக் கொள்வதற்கு இது நான்காவது வழி என்று அறிகிறோம்.
விசுவாசிகளிலும், ஊழியக்காரர்களிலும் பலர் தங்களுடைய திட்டங்களிலும், தீர்மானங்களிலும் கர்த்தரைக் கலந்து ஆலோசிக்க, அல்லது கர்த்தரை மாத்திரம், சார்ந்திருக்கத் தவறுவதால் பெருத்த நஷ்டங்களடைகின்றனர். சில சமயங்களில் மாத்திரம், அவர்கள் தேவனிடம் விண்ணப்பித்து மற்றச் சமயங்களில் தங்கள் மனைவி பிள்ளைகளின் யோசனைக்கு இணங்கி விடுகின்றனர். இதன் பயனாக அநேக விசுவாசிகளின் ஆவிக்குரிய ஜீவியம் பயனற்றுப் போகிறது. இவையெல்லாவற்றிற்கும் காரணம், அவர்கள் தேவனிடத்தில் ஆலோசனை கேளாமல் மனுஷீக ஞானத்திலும் பலத்திலும் செயல்படத் தொடங்குவதேயாகும்.
பின்னும் சிலர், “நான் ஒரு பட்டதாரி, எனக்கு, கிரேக்க எபிரேய மொழிகள் தெரியும்; நான் திருமறையில் கற்றுத் தேர்ந்து, பட்டம் பெற்றிருக்கிறேன். ஆதலால் நான் ஏன் ஜெபத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க வேண்டும்? என் சொந்த புத்தியையும் அறிவையும் பயன்படுத்துவேன்!” எனத் தங்கள் சுயபுத்தியின் மேல் சார்ந்து தவறு இழைக் கின்றனர்.
தாவீது, எபிரோனுக்கு வந்தபொழுது, அவன் தன்னைத் தாழ்த்தி, வெறுமையாக்கி, நொறுங்குண்ட இதயத்துடன், கர்த்தரிடமாகச் சேர்ந்தான் (11 சாமு 2: 1). ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்குத் தாவீது தீவிரமாயிருந்தான். இவ்வாறு நாமும், நாம் இழந்தவைகளையெல்லாம் திரும்பப் பெறுவதற்கு, இந்த நான்காவது வழியைப் பின்பற்றுவது அவசியமாகும். நமது சுய பலத்திலோ, சுய ஞானத்திலோ அல்லது மனுஷீக முறையிலோ ஒருபோதும் சார்ந்திருக்க வேண்டாம். உங்களை முற்றிலும் வெறுமையாக்கி, சுய நம்பிக்கையை ஒழித்து, ஒவ்வொரு காரியத்திலும், தேவ சித்தத்தை அறிந்துகொள்ளப் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணத்தைச் செலவிடும் விஷயத்திலும் தேவனுடைய ஆலோசனையை நீங்கள் நாடுவது அவசியம்.
அநேக கணவன்மார், தங்களது மாத சம்பளம் வாங்கினவுடனே, மிகுந்த பெருமிதத்துடன், அதைத் தம் மனைவிமாரிடம் கொடுத்துவிடுவர். சில நாட்கள் கழித்து, தங்கள் செலவுக்கென்று, ஒரு சிறு தொகை கேட்டாலும் மனைவி சண்டைக்கு வந்துவிடுவாள். “நான் சில நாட்களுக்கு முன் கைச் செலவுக்காகக் கொடுத்த பணம் எங்கே?” என்று அவள் கேட்க, அவரும் பதில் சொல்ல இயலாதவராக, தன் மனைவிக்குக் கீழ்ப்படிய வேண்டியவராகிறார். இவ்வாறு மனைவியின் விருப்பத்திற்கிணங்கி அவள் சொற்படி நடக்க வேண்டியதாகிறது. அன்னாரிடம், நீர் ஏன் சம்பளம் முழுமையும் உமது மனைவியிடம் கொடுத்தீர் என்று கேட்டால், அவர் நான் முழுத்தொகையையும் அவளிடம் கொடாவிட்டால், அவள் என்னைச் சமாதானமாக இருக்கவொட்டாள். எனது சட்டைப் பையையும், மேஜையையும் துருவித் துருவித் தேடி எல்லாவற்றையும் எடுத்துவிடுவாள். எப்படியும் எல்லாம் அவள் கையிற் போய் சேர்ந்துவிடும். எனவே முதலிலேயே எல்லாவற்றையும் அவளிடம் கொடுத்துவிடுகிறேன்” என்று பதில் அளிக்கின்றனர். இத்தகைய மனிதர் எவ்வாறு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள முடியும் ? ஒவ்வொரு சிறு காரியத்தைப்பற்றியும் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்குப் போதுமான நேரம் ஜெபத்தில் செலவிட வேண்டும்.
இவ்வாறே சபைக்கடுத்த காரியங்களிற்கும் அதிகமாகக் கர்த்தரைத் தேடி அவருடைய நடத்துதலுக்காகக் காத்திருக்க வேண்டும். பலர் சபைகளில், மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற அவாவினால், தவறான பல முறைகளையும் கையாடி, இறுதியில் சண்டை சச்சரவுகளுடன் வெற்றி பெறுகின்றனர். ஒரு நகரத்தில், ஒரு வாலிபன் சபை மூப்பனாகத் தன்னைத் தேர்ந்தெடுக்கும்படி பிரயத்தனப்படுவதைக் கண்டு, ஒருவர் “நீர் ஏன் சபை மூப்பனாயிருக்க ஆசிக்கிறீர்?” என விசாரித்தேன். அதற்கு அவர், பிரதியுத்திரமாக, “எங்கள் மூப்பர்கள் எல்லாம் வயோதிபர்களாகி விட்டதால், அவர்களால் சரியாக உழைக்க முடியவில்லை. ஆதலால் இளைஞனாகிய நான் அவர்களை நீக்கிவிட ஆவன செய்வேன்” என்றார். நான் அவனிடம், மூப்பர்களாயிருக்கத் தகுதியுள்ளவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும்? என்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறதென உமக்குத் தெரியுமா? அதைக் குறித்த வசனங்களை எனக்குக் கூற முடியுமா?” என்று கேட்டேன். அவர் பதில் கூறாமல் அமைதியாயிருந்தார். அப்பொழுது நான், நீங்கள் உங்கள் வேதாகமத்தைக் கொண்டு வாருங்கள். கர்த்தருடைய வசனம் இதைக் குறித்து கூறுவது யாது என்பதைச் சிந்திப்போம்”, என்றேன். வேதாகமத்தைக் கொண்டுவர வீடுசென்றவர் திரும்பி வரவில்லை ! நான் சிறிது நேரம் வெளியிலே உட்கார்ந்திருந்தேன். இறுதியில், அவரது சகோதரி என்னிடம் வந்து “அவரிடம் வேதாகமம் கிடையாது” என மெல்லிய குரலில் கூறி விட்டுச் சென்று விட்டாள். இவர்தான் சபை மூப்பனாகும்படி ஆசிக்கிறவர்! தனக்கெனச் சொந்தமாக ஒரு வேதாகமம் இல்லாதவர், வேதவசனத்தின் வாசனையைக்கூட அறியாதவர் ! இவர் சபையின் மூப்பனாகும்படி வாஞ்சிப்பது என்னே பரிதாபமான ஒர் காட்சி? இத்தகைய மூப்பர்களின் சங்கம் கூடும்போது கர்த்தரை அவர்கள் எங்ஙனம் தேடுவார்கள்? ஏதோ, கடமைக்கென்று ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுத்துப் பின்னர் பிரயோஜனமற்ற காரியங்களைப் பேசிவிட்டு, பக்தி விருத்திக்கேதுவாக ஒன்றும் செய்யாது, சண்டை சச்சரவுடன் முடிக்கின்றனர். என்னே பரிதாபம்! இவ்விதமாக இருப்பதினால்தான், அநேக குழுக்களில் அல்லது சபைகளில் ஜீவனில்லை! கனி ஏதும் காணப்படுகிறதில்லை ! சபை மூப்பர்கள் எனப்படுபவர்களில் பலருக்கு ஜெபிக்கவும் தெரியாது. ஆயினும் இவர்கள்தான், சபையைக் கண்காணித்துப் பிறரை நல்வழிப்படுத்தும் தலைவராக இருக்கவிரும்புகிறார்கள்! இவர்கள் தேடுவதெல்லாம் பேரும், புகழும், பணமும் மதிப்புமேயன்றி வேறொன்றுமில்லை!
ஆனால் இவர்கள் எபிரோனுக்கு வருவார்களாகில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கோ அல்லது பொதுவான சபை காரியங்களுக்கோ, தேவனிடத்தில் மாத்திரம் விசாரித்து அவைகளின்படி செய்யக்கற்றுக் கொள்வார்கள். விவாகசம்பந்தங்களிலும், அநேகர் தேவ சித்தத்தை அறியாமலே நடந்து கொள்கின்றனர் என்று முன்பு கூறியுள்ளோம். மணமகனையும், மணமகளையும் தேர்ந்தெடுத்து, திருமணத்திற்கு முடிவு செய்த பிறகுதான், போதகரே இவ்விதம் ஒழுங்காகி இருக்கிறது. தயவு செய்து, வந்து ஜெபியுங்கள்” எனக் கேட்கின்றனர். ஆனால் மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் முன்பாக, நீண்டதோர் பட்டியல் தயாரித்து அதன்படி ஆபரணங்கள் மற்றும் சொத்துச் சுதந்திரங்கள் பெண்ணின் அந்தஸ்து அழகு இவைகளை மாத்திரம் விசாரித்துத் தெரிந்து கொள்ளப்பல நாட்கள் செலவிடுகின்றனர். ஆனால் பெண், மாப்பிள்ளை இவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் பக்தி விருத்திக் கேதுவான காரியங்களைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அநேக கிறிஸ்தவக் குடும்பங்களில் சந்தோஷமும், சமாதானமுமின்றி தவிக்கும் காரணமிதுவே.