சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 9
தாவீதின் நான்காவது இழப்பு
எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில் வசித்தனர். தாவீது தேவனுக்குக் கீழ்ப்படிந்ததின் மூலம், எபூசியரைத் துரத்திவிட்டு, சீயோனைக் கைப்பற்றினான். ஆகிலும், அர்வனா (அல்லது ஓர்னான்) என்ற பெயருடைய எபூசியன் ஒருவன் இன்னும் சீயோனில் இருந்தான் (2 சாமு. 24 : 18 -28). அவன் நல்லவனும், தேவனுக்குப் பயப்படுகிறவனுமாயிருந்தான். தாவீது அர்வனாவின் களத்தை விலைக்கு வாங்கும்படியாக வந்தபொழுது, அவன் தாவீதை நோக்கி, எல்லாவற்றையும் இலவசமாய் எடுத்துக்கொள்ளும்படியாகவும் பலிக்குத் தேவையான காளைகளையும், விறகுக்கு நுகத்தடிகளையும் தான் இலவசமாகத் தருவதாகவும் வாக்களித்தான். ஆயினும் தாவீது, “நான் இலவசமாய் வாங்கி என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன்” என்று கூறினான் எனப் பார்க்கிறோம் (II சாமு 24 : 22 -24). அர்வனாவின் போரடிக்கிற களத்தின் சம்பவம் தாவீதின் நான்காவது இழப்பை விளக்குகின்றது. தேவன் தாவீதை இரு சந்தர்ப்பங்களில் போரடிக்கிற களத்திற்குக் கொண்டு வர வேண்டியதாயிற்று (1 நாளாகமம் 13; 2 சாமுவேல் 24). களத்தில் கோதுமை மற்றும் தானியங்கள் போரடிக்கப்படும். முதலில் கதிரடிக்கப்பட்டு, தானியம் ஒன்று சேர்க்கப்படும். பின்னர் அதைச் சுளகினால் வீசிக் காற்றுண்டாக்கிப் பதரை அகற்றி, மணியான தானியத்தை ஒன்று சேர்ப்பார்கள்.
1 நாளாகமம் 13இல் எவ்வாறு தாவீது தன் பிரபுக்களையும், சேனைத் தலைவர்களையும் கல்ந்தாலோசித்து, தேவனுடைய பெட்டியை அதனுடைய ஸ்தானத்திற்குக் கொண்டு போக முயற்சி செய்தான் என்று பார்த்தோம். பெட்டியைக் கொண்டு செல்வதற்குத் தேவன் சில ஒழுங்குகளை ஏற்படுத்தியிருந்தார். தாவீது அம்முறைகளை அறிந்து அதன் பிரகாரம், பெட்டியை லேவியர்கள் தோள்மீது சுமந்து வரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் அதற்கு மாறாக புறஜாதியாராகிய பெலிஸ்தரின்முறைப்படியே ஒரு புது வண்டியில் பெட்டியை எடுத்துச் சென்றான். ஆகையால் தேவகோபம் தாவீதின் மேல் மூண்டது. தேவ ஒழுங்கைப் பூறக்கணித்து, மனித முறைகளைப் பின்பற்றினதின் பெருந்தவறைக் கீதோனின் களத்தில் தாவீது உணர்ந்து கொண்டான். இப்பொழுது இஸ்ரவேலை ஜனத்தொகை எடுக்கும்படியும், இராணுவத்திற்குரியவர்களை இலக்கம் பார்க்கும்படியும், தாவீது தன் சேனாபதியாகிய யோவாபுக்குக் கட்டளையிட்டான் (2 சாமுவேல் 24). இதுகாறும் தனது சுயபலத்தினாலோ, தன் இராணுவத்தின் வலிமையினாலோ ஒரு யுத்தத்திலும் ஜெயிக்கவில்லை என்பதைத் தாவீது நன்கு அறிந்திருந்தான். “கர்த்தர் பட்டயத்தினாலும், ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார்”, என்று அவன் கோலியாத்திடம் கூறியதைக் கவனிக்க (1 சாமுவேல் 17 : 47). ஆயினும் இப்பொழுது தங்களது பலத்தையும் பராக்கிரமத்தையும் பெரிதாக எண்ணி, தனது வீரர்களின் தொகையைக் கணக்கிடச் சொன்னான். அவன் மனமேட்டிமையுள்ளவனாகித் தனது வெற்றிகளுக்குத் தன் வீரர்களைச் சார்ந்திருக்கத் தொடங்கினான். சேனாபதியாகிய யோவாபும் மற்றும் இராணுவத் தலைவர்களும் அதைத் தடுத்து, “ராஜாவாகிய என் ஆண்டவனே, தேவனல்லவா உமக்காக யுத்தம் செய்தார். அப்படியிருக்க ஜனத்தைத் தொகையிடுவானேன்? உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமது ஜனத்தை இன்னும் நூறு மடங்காக வர்த்திக்கச் செய்வாராக! ஆகிலும், அவர்களாலல்ல, தேவனாலே உமக்கு இரட்சிப்பு வரும்” என்று கூறினர். ஆயினும் தாவீது அவர்களுக்குச் செவி கொடாது மக்களைக் கணக்கிடத்தான் வேண்டுமென்று கண்டிப்பாகக் கூறிவிட்டான். எனவே வேறுவழியின்றி, தாவீதின் கட்டளை நிறைவேற்றப்பட்டது. பின்னர் தாவீதின் இதயம் அவனை வாதித்தது. அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: “நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ் செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கி விடும்; நான் புத்தியீனமாய்ச் செய்தேன்” என்றான். (வ 10). தாவீதுடைய பாவத்தின் விளைவாக தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோயுண்டாகி, 70,000 பேர் மரித்துப் போனார்கள். எவ்வளவு பயங்கரமான நஷ்டம்! இறுதியாக, சங்காரதூதன் அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே நின்று எருசலேமை அழிக்கத் தன் கையை நீட்டினபோது, தேவன் அவனைத் தடுத்து நிறுத்தினார்,
இப்பொழுது இரண்டாவது முறையாக தேவன் தாவீதைப் போரடிக்கிற களத்துக்குக் கொண்டு வந்தார். காரணம் அவனது ஜீவியத்திலிருந்த பதரை நீக்குவதற்காகவே. தாவீது தன்னை ஒரு ஞானியாகவும், காரிய சமர்த்தனாகவும் எண்ணிக் கொண்டிருந்தான். இது உண்மையே மனிதனின் மதிப்பில் தாவீது பெரிய வீரனும் ஞானியுமாயிருந்தான். எனினும் தேவனோ அவனது வாழ்க்கையில் இன்னும் பதர்களிருப்பதைக் கண்டு அவற்றைப் போக்கவும், அவனைச் சிறுமைப்படுத்தி, அவனது சுய ஞானத்தையும், சுயநம்பிக்கையையும் முற்றுலுமாக அகற்றி, அவனைச் சுத்திகரிக்கவும் அர்வனாவின் களத்தின் அனுபவத்தினூடாக எடுத்துச் சென்றார்.
இதே இடத்தில்தான் பின்பு தேவாலயம் கட்டப்பட்டது என்று 2 நாளாகமம் 3:1 இல் பார்க்கிறோம். தாவீதுக்கும், தேசத்துக்கும், உண்டான பெருத்த நஷ்டத்திலிருந்து, தேவன் மன்னிப்பும், விடுதலையும், இழப்பீடும் தந்ததுமன்றி, மிகுதியான ஆசீர்வாதத்தையும் தந்தார். தேவாலயத்தைக் கட்டுவதற்கான பரலோகத் திட்டத்தை தேவன் தாவீதுக்குக் கொடுத்தார். தாவீதின் குமாரனாகிய சாலமோன் பின்னர் தன் தகப்பனின் கட்டளைப்படியே, தேவதிட்டத்திற்கிணங்க, ஆலயத்தைக் கட்டி முடித்துச் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தினான். அந்நாள் தேசம் முழுவதுக்கும் மிகுந்த சந்தோஷத்தையுண்டாக்கும் நன்னாளாக இருந்தது. அநேக நூற்றாண்டுகளாக இஸ்ரவேலர் அடைந்த நஷ்டமெல்லாம் நீங்கி, பதிலீடு பெற்றனர். தேவ மகிமை திரும்ப வந்தது. ஜனங்கள் தேவனுடைய மகிமையைக் கண்டனர். தேவன் மறுபடியும் அவர்கள் நடுவே வாசஞ்செய்தார். அவர் கேருபீன்களின் நடுவிலிருந்து தம் ஜனத்தோடே பேசினார். எல்லா ஜாதி ஜனங்களும் சாலமோனிடம் பணிவோடு வந்தனர். இஸ்ரவேல் ஜனம் பாவம் செய்து, தங்களைத் தீட்டுப் படுத்தினதினாலடைந்த நஷ்டம், பெலிஸ்தர், எபூசியர், ஏனையோரிடம் அடைந்த ஓயாத்தோல்விகள் யாவும்மாறி, அவர்கள் வரலாற்றில் ஒரு புதுத்திருப்பம் ஏற்பட்டதெனலாம். அவர்கள் தேவனுடைய ஜனமானார்கள். தேவனும் அவர்களை அங்கீகரித்துத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, தமது பூரண மகிமையோடு அவர்கள் நடுவில் எழுந்தருளினார். இப்பொழுது தான் உண்மையான இழப்பீடு கிடைத்தது எனச் சொல்லாம்,
சீயோன் என்பதன் பொருளை அறிந்துகொள்ள 2 நாளாகமம்: 3 : 1; 1 இராஜாக்கள் 6 :7; 2நாளாகமம் 7; 1 ஆகியவற்றைப் படிக்கவும். சீயோன் என்பதின் முழுப் பொருளையும் விளக்கமாய் ஆராய்வதற்கு அதிக காலமாகும். எனவே ஒரு சில முக்கியமான குறிப்புகளை மட்டும் பார்ப்போம். முதலாவதாக, சீயோனில் ஆலயம் கட்டப்பட வேண்டிய இடத்திற்குத் தாவீதைத் தேவன் கொண்டு வந்தார். எருசலேம் நான்கு மலைகளின்மீது கட்டப்பட்டிருந்தது. அவற்றுள் ஒன்று சீயோன் மலை. சீயோனில் தமது வீடு அல்லது ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவனுக்கு ஒரு இடம் தேவை. எபூசியர் வசமாக அது இருந்த காலம்வரை தேவன் அதை உபயோகப்படுத்த முடியாது. ஆனால் அநேக ஆண்டுகளாக ஆயத்தம் பண்ணின பிறகு, தேவன் தாவீதை சீயோனுக்குக் கொண்டு வந்தார். இதே இடத்தில்தான் ஆபிரகாமுக்கு அவனது வாழ்க்கையின் மிகப் பெரிதான பரீட்சை வந்தது என்பதை நாமறிவோம் (ஆதி. 22.)
தேவன் தாவீதை இவ்விடத்திற்குக் கொண்டு வந்து அவனிலிருந்த பதரைப் போக்கி, அவனைப்புடமிட்டு, அவனை நொறுக்கி, பின்பு ஆலயமிருக்க வேண்டிய இடத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார்.
இரண்டாவதாக இங்கு தேவன் தாவீதுக்கு ஆலயத்தின் நகலை எழுதிக் கொடுத்தார். ஆலயத்தின் முழுத் திட்டத்தையும், அதன் ஒவ்வொரு நுணுக்கமான அம்சத்தையும், துல்லியமாக எழுதிக் கொடுத்தார் என்று 1 நாளாகமம் 28 : 19 இல் வாசிக்கிறோம்.
மூன்றாவதாக, 1 இராஜாக்கள் 6ஆம் அதிகாரத்தில் சாலமோன் கர்த்தருக்குக் கட்டின ஆலயத்தில் வேலை எவ்வாறு நடைபெற்றது என்று பார்க்கிறோம். “ஆலயம் கட்டப்படுகையில், அது பணி தீர்ந்து கொணடுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள், வாச்சிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை” (27). கட்டிட வேலை நடைபெறும்போது எவ்வித ஓசையுமில்லாமல், மிகவும் அமைதியாக வேலை நடந்தது. அங்கு இரும்பாயுதங்களின் ஒலி கேட்கப்படவில்லை. ஏன்? கற்களும், இதர உலோகங்களும் பரலோகத் திட்டத்தின்படியே அதனதன் இடத்தில் பொருந்தும்படியாக நேர்த்தியாகப் பணி தீர்க்கப்பட்டு, ஆலயத்தில் கொண்டு வந்து இணைக்கப்பட்டது, இது தேவனுடைய மக்களின் மத்தியிலிருக்கும் ஒருமைப்பாடு, ஐக்கியம், அன்னியோன்னியம் ஆகியவற்றைக் குறிக்கும். அங்கு சண்டை, சச்சரவு, பிரிவினை, மார்க்கபேதங்களில்லை. பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுவார்கள். தேவனுடைய மகிமையும் பூரணமாய் வெளிப்படும். சீயோனின் மூலமாய், தேவன் சாத்தானை முற்றிலுமாய்த் தோற்கடிக்கின்றார். சீயோனின் மூலம் தேவன் தமது ஞானம், அறிவு, வல்லமை இவைகளை வெளிப்படுத்துகின்றார்; அங்கு மாத்திரமே தேவனுடைய நிறைவையும், பரிபூரணத்தையும், மகிமையையும் நாம் காணலாம். எபிரோன், சீயோன் என்ற சாதனங்களின் மூலம் தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். நீங்களும் எல்லாவற்றையும் திருப்பிக் கொள்ள வேண்டுமா ? மன்றாட்டு விண்ணப்பத்தின் மூலமாகத் தேவனிடமிருந்து இவற்றைப்பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் “தாவீது” க்குப் பதிலாக உங்கள் பெயரை வைத்து, வாசிக்க முடியும். விசுவாசத்தின் மூலமாய் இவ்வார்த்தைகள் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிறைவேறுவதாக, ஆமென்.