May

மே 28

மே 28

…… ஆண்டவரே, என்னை இரட்சியும் (மத்.14:30).

கிறிஸ்தவ வாழ்க்கையில் துக்கம், சோர்வு, துன்பம் இக்கட்டு, அபாயம், அசதி போன்றவை குறுக்கிடும் வேளைகளில் அதிகம் வரும். உதவி செய்ய யாருமில்லையே என ஏங்கி, கவலைகளையெல்லாம் கூறி கட்டிப்பிடித்து அழுவதற்கு யாருமில்லை எனக் கதறும் வேளைகள் பல உண்டு.

சுருக்கமான ஜெபங்கட்கு பெருக்கமான பதில் கிடைத்ததை வேதத்தில் பல இடங்களில் காண்கிறோம். உதவியற்ற நிலையில் பேதுரு, ஆண்டவரே, என்னை இரட்சியும் எனக் கதறினான். புயல் அலைக்கழித்தாலும் அவன் படகிலேயே பத்திரமாக இருந்திருக்கலாம். ஆனால் தீவிரவாதியான அவன் இருளில் நடந்து வரும் அந்த உருவத்தைப் பார்த்து, ஆண்டவரே நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான் (வச.28). இயேசு வா எனக் கூறியதும் தயக்கமின்றிக் கீழ்ப்படிந்தான். இயேசுவிடம் செல்வதற்கென தண்ணீரில் இறங்கினான்.

நம்மில் பலர் மற்ற பதினொரு சீடர்களைப்போன்றுதான் இருக்கிறோம். தத்தளிக்கும் தண்ணீரில், படகின் பாதுகாப்பில் இருக்க அவர்கள் விரும்பினர். அதுபோல் நாமும் ஆண்டவரை நேசிக்கிறோம். ஆயினும் பாதுகாப்பில் இருக்கவே விரும்புகிறோம்.

நமக்கு வழியைத் தெளிவாகக் காட்டினாலன்றி நாம் தேவனுக்கென பெரிய செயல்களைச் செய்ய விரும்புவதில்லை. இதனால் நம்மால் வாழ்வின் கொந்தளிப்பில் அவரது பலத்த கரம் நம்மைத் தாங்குவதை உணர இயலவில்லை. பேதுருவின் உணர்ச்சியின் ஆழத்தைக் கண்டது யார்? சந்தேகம் ஏற்பட்டு. தொடர்ந்து ஜெபம் வெளியாகிறது. ஆண்டவரே! என்னை இரட்சியும்! கைவிடப்பட்ட நிலையில்தான் கைவிடாமல் காக்கும் வல்லமையுள்ளவரைக் காணமுடிகிறது.