May

மே 25

மே 25

கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தர மார்க்கமாய்ப் போ என்றான் (அப்.8.26).

சில வேளைகளில் தேவன் நம்மை வழிநடத்துவது நமக்கும், பிறருக்கும் புரியாத பதிராக இருக்கும். ஆனால் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்போர், எங்கும் செல்ல ஆயத்தமாக இருப்பர். பிலிப்புவிற்கு இவ்விதமாகச் செல்லவேண்டிய ஒரு வாய்ப்புக் கிட்டிற்று. அவன் சமாரியாவில் எழுப்புதல் தீயைத் தூண்டிவிட்டு, தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தான். அவன் தேவனால் காசாவின் சாலைக்குச் செல்லும்படி தெளிவாக ஏவப்பட்டான்.

இப்படி ஆவியானவர் ஏவியது பிலிப்புவிற்கும், அவன் நண்பர்களுக்கும் விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம். ஆயினும் பிலிப்பு அங்கு சென்றான். தேவன் தனக்குக் குறித்த அந்த இடத்தில் யாவும் ஆயத்மாயிருக்கக் கண்டான். ஏசாயா தீர்க்கதரிசியன் புத்தகத்தில் 53ம் அதிகாரத்தைப் படித்துக்கொண்டு, தன் இரதத்தில், எத்தியோப்பிய அதிகாரி ஒருவன் அவ்வழியே சென்று கொண்டிருந்தான். பேசவேணடிய நேரம் அது. வேதம் கூறும் மேசியாவைப்பற்றி பிலிப்பு எளிதாக எடுத்துரைத்தான். எத்தியோப்பியன் விசுவாசித்தான். ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான். தேவன் நியமித்த இடத்தில் அவருடைய ஊழியன் இருந்தபடியினால்தான் இது நிகழ்ந்தது. அவரது கட்டளையின்படி ஏற்றவேளையில் இது நடந்தது.

இவ்விதம் தேவன் வழிநடத்துவது ஓர் ஒப்பற்ற அனுபவம். நாம் தி;ட்டமிடாதபடிக்கு, எதிர்பாராத விதமாக தேவன் தமது மெல்லிய குரலில் பரிசுத்த ஆவியானவர்மூலமும், தேவ வசனத்தைக்கொண்டு தெளிவாகப் பேசுகிறார். அப்பொழுது பயப்படாமல் தேவ ஆலோசனைக்குச் செவிகொடு. கடினமான பாதையாயினும் சோர்ந்துவிடாமல் முன்னேறிச் செல்.