May

மே 23

மே 23

…. ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள் (மாற்.4:40).

வாழ்வில் புயல் வீசுவது இயல்பு. ஏன் இந்தப் புயல்? என மனிதர்களாகிய நாம் கேட்பது சகஜம். தேவன் எனக்கென தெளிவாக வெளிப்படுத்தின சித்தத்திற்குக் கீழ்ப்படியவில்லையா? அல்லது அவரது எச்சரிப்புக்குச் செவிகொடுக்கவில்லையா? என் சுய சித்தத்தினால் அல்லது சுயநலத்தால்தான் நான் இந்தக் கஷ்டத்திற்குள் வந்துவிட்டேனோ? யோனா தேவ அழைப்பைத் தெளிவாக உணர்ந்து, மனமறிய அதை மீறினான். ஆகவே அவன் பயங்கரப் புயலைச் சந்திக்க நேர்ந்தது. நானும் அப்படித்தான் இருக்கிறேனா?

எந்தவிதக் கஷ்டத்திலும் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனால் என் நிலையும் அதுபோன்று மாறி புயலில் சிக்கிவிடுகிறேன். சீடர்களின் பயணத்தில் புயல் வீசிற்று. ஏனெனில், அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை. இயேசு, புயல் ஏன் வீசிற்று எனக் கேட்காமல் ஏன் பயப்பட்டீர்கள்? என்று கேட்டார். அவர் நமக்குக் கட்டளையிட்ட வழியில் செல்லும்போது, நாம் பயப்படுகிறோமா? தேவனுடைய சித்தத்தின் மையத்தில் இருப்பதைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பான இடம் ஏதாகிலும் உண்டா? நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என அவர் வாக்களித்துள்ளதை மறந்து விட்டாயா?

இருளைக் கண்டு மருளுகிறோமா? நாம் விசுவாசித்து நடக்கிறோமா? தரிசித்து நடக்கிறோமா? நாம் இலக்கைக் காணமுடியவில்லை என்பதினால் நமது வழிகாட்டியைச் சந்தேகப்பட முடியுமா?