March

மார்ச் 30

மார்ச் 30

தேவன் உண்மையுள்ளவர் (1.கொரி.1:9)

…. நீ…. உண்மையாயிரு (வெளி 2:10)

கிறிஸ்தவர்கள் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். உண்மையாயிருப்பது கிறிஸ்தவ பண்புகளில் ஒன்று. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார், அவர் வாக்கு மாறாதவர். தம் பிள்ளைகளின்மீது மாறாத அன்புகொண்டவர். அவரைச் சார்ந்துள்ளவர்களையும், பலவீனரையும் தாங்கும் தன்மையுள்ளவர். சர்வவல்லவர், மாறாதவர், அவரை நம்பும் நாம் அவரில் அன்புகூரவேண்டும். அவருடைய கட்டளைக்கு உண்மையாகக் கீழ்ப்படியவேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் நமது வாழ்விற்கென வைத்துள்ள திட்டத்தினை அறிந்து அவருக்கென கடமைகளைச் செய்யத் தவறாதிருக்கவேண்டும். நாம் நமது நீதியுள்ள நடத்தையாலும், ஒழுக்கமுள்ள வார்த்தைகளாலும், அவரது சித்தத்தின்படி செய்வதாலும், கிறிஸ்தவ வாழ்வில் முன்னேறிச் செல்லும் ஒவ்வொருபடியிலும் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். நாம் வார்த்தையிலும், நடக்கையிலும், நினைவிலும் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

விசுவாசத்திற்கும், உண்மையாக இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தேவனைச் சார்ந்து, சந்தேகமின்றி நாம் அவரை விசுவாசிக்கும்போது அவர் வாக்குப்பண்ணினபடி உண்மையள்ளவராயிருக்கிறார் என்பதை நாம் நம் அனுபவத்தில் காண்கிறோம். தேவனிடத்தில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கும்போது நாம் அயலாரிடத்திலும் உண்மையள்ளவர்களாயிருக்கும்போது இவர்களுக்குப் பொய்யராக இருக்க இயலாதே.

தேவன் அவரது பங்கைச் செய்துவருகிறார். அவருடைய கிருபையைப் பெற்ற நாமும் நமது பங்கைச் செய்து முடிக்க வேண்டாமா?