March

மார்ச் 15

மார்ச் 15

“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டது நிறைவேறும்” (லூக்.1:45).

கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ? (ஆதி.18:14) என்ற பழைய கேள்விக்கு எலிசபேத், மரியாளை வாழ்த்திக்கூறும் பகுதியிலிருந்து பதில் கிடைக்கிறது. மரியாளுடைய வாழ்விலும், எலிசபேத்தின் வாழ்விலும் ஏற்பட்டவை சந்தேகத்திற்குரிய கேள்வியாக அமையாமல், தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக்.1:37) என்று நம்புவதற்குரிய உண்மையாக அமைந்துள்ளது. தேவதூதன் தோன்றியது ஒரு கனவு என்று மரியாள் நினைத்திருக்கலாம்.

அவள் சரியாகக் கேட்டாளா? திருமணமே ஆகாதவளுக்கு குழந்தை பிறக்குமா? அதுவும் அக்குழந்தை உன்னதமானவருடையது எனப்படுமாமே? அவர் தாவீதின் சிம்மாசனத்தைப் பெறுவாராமே? எதிர்பார்த்திருந்த மேசியாவுக்குத்தானே இந்த விளக்கம் யாவும் பொருந்தும். அவள் தான் அவருக்குத் தாயாரா? இவையாவும் எப்படி நடக்கும்?

மரியாள் பாவமற்றவள் என்று வேதத்தில் எங்குமே கூறப்படவில்லை. அப்படியிருந்தால் அவள், என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய என் தேவனில் களிகூருகிறது (லூக்.1:46-47) எனக்கூறவேண்டிய அவசியமில்லை. அவளுக்கு ஓர் இரட்சகர் தேவைப்பட்டார். காலங்கள் தோறும் பரிசுத்தவான்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனையைத்தான் மரியாள் எதிர்நோக்கவேண்டியிருந்தது. மனுஷரால் கூடாதவைகள் தேவனாலே கூடும் என்று விசுவாசிக்கவேண்டும் என்று அதே பதில்தான் அவளுக்கும் கிடைத்தது.

நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும் பதில் இதுதான். முடியாதவையா? தேவனால் எல்லாம் கூடும்!