March

மார்ச் 11

மார்ச் 11

…… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் என நீதிமொழிகள் 29:25ல் காண்கிறோம். அதே வசனம் கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்றும் கூறுகிறது. மனிதருடைய சூழ்ச்சிகளில் சிக்கிவிடுவோமோ என்று பயப்படுவோருக்கு இந்த வசனம் சிறந்த ஆறுதலாக உள்ளது. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான் (நீதி.1:35). சடுதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம். கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார் (நீதி.3:25-26).

இச்சங்கீதம் பெலிஸ்தர் தாவீதைக் காத்தூரில் பிடித்தபோது பாடியதாக முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. இது நமக்குப் புது ஊக்கமளிக்கிறது. தனது மிகக் கொடிய எதிரிகளின் நடுவில் இருந்த தாவீது அவர்களுக்குப் பயப்படவே இல்லை. அவனது கண்கள் கர்த்தரையேயன்றி கோலியாத்தின் இனத்தவரை நோக்கியிருக்கவில்லை. ஆகவேதான் அவன், தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். தேவைன நம்பியிருக்கிறேன். நான் பயப்படேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? எனக் கூறுகிறான்.

அவனது நிச்சயத்தை அறிந்துகொண்ட நாமும் நம்மைக் காக்கும் தேவனுக்கு நன்றி கூறுவோம். நன்றியுள்ள இருதயத்தோடும், மகிழ்ச்சியோடும் நாம் அவரை ஸ்தோத்திப்போம். ஏனெனில், அவர் மனிதனுடைய இழிவான வார்த்தைகளை நம்பி தவறான வழியில் சென்ற நம்மை திருப்பி நமக்குப் பாதுகாப்பு கொடுத்து வருகிறாரே!