March

மார்ச் 3

மார்ச் 3

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்.5:4)

நாம் வியாதியாகவோ, கவலையாகவோ இருக்கும்போது நம்முடைய நண்பர்களின் ஜெபங்களினால் ஆறுதலும் உற்சாகமும் அடைவதுண்டு. நான் ஜெபிக்க முடியாதபடி பலவீனனாக இருந்தேன். தியானிக்க இயலாதபடி நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்பொழுது எனக்காக அங்குள்ள மருத்துவ தாதிமார் ஜெபித்தனர். அதனால் நான் புதுப்பெலன் அடைந்தேன். நம்முடைய பெலவீனங்களை உணர்ந்து, நமக்காகப் பாரப்பட்டு ஜெபிக்கும் ஆண்டவர் பரலோகத்தில் இருக்கிறார். அவர் நம்மைப் பார்த்து பரிதாபப்படுகிறார் என்பதைக் கேள்விப்படும்போது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! நாம் படும் கஷ்டங்களையெல்லாம் அவர் அனுபவித்தவர். ஆகையால் அவர் நமக்காக மனதுருகுகிறவராயிருக்கிறார்.

இப்படிப்பட்ட பல உபத்திரவங்களின் மத்தியில் ஆறுதல் பெற்ற பவுல் அப்போஸ்தலன், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்தினாலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு, நாங்கள் ஆறுதல் செய்யத்திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் (2.கொரி.1:3-4) எனக் கூறியுள்ளார்.

வேதனையில் நாம் தனித்து விடப்படுவதேயில்லை. நம்முடைய எல்லா வேதனைகளிலும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருக்கிற அவர் நம்மோடு இருக்கிறார். துன்பத்தைப் பகிர்ந்துகொண்டு அறுதல் அளிக்கிறார். ஆறுதலைப் பெற்ற நாமும், நம்மைப்போன்று துன்பத்தில் இருக்கும் பிறருக்கு உதவும் சிறந்த கருவியாகப் பயன்பட முடியும் என்பது உறுதி.