June

யூன் 25

யூன் 25

…. பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36).

நம்முடைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், உற்சாகத்துடன் முன்னேறவும், அனுபவப்பட்ட சிலரின் வாழ்க்கைப் பாடங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமே.

தாவீது தெய்வீக ஒழுங்கினை அறிந்துகொண்டவன். ஆடு மேய்க்கும் வாலிபனாக இருந்தபோது, சாமுவேல் அவனை இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகம் செய்தான். வருடங்கள் உருண்டோடின. பெத்லகேமின் கரடுமுரடான மலைப் பகுதிகளிலும், சவுலின் மதிமாற்றத்திற்குப் பயந்து, அதுல்லாம் ஊர் குகைப்பகுதியிலும், பெலிஸ்தியர் மத்தியிலுமாக தன் நாட்களைக் கடத்தினான். இந்தக் கடினமான தாமதத்தினால் தாவீது தன் அரசபதவிக்கு அவசியமானவற்றைக் கற்றுகொண்டான். என்றோ இராஜாவாக வேண்டியவன் இதற்கென ஆயத்தப்பட வேண்டியிருந்தது. தாமதம் நம்மைப் பக்குவப்படுத்தும் கருவியேயன்றி, அது கர்த்தரின் நோக்கத்தை நீக்கிவிடாது என்று உறுதிகொள்ள வேண்டும்.

எலியா பொறுமைக்கென பயிற்றுவிக்கப்பட்டான். ஒழுக்கமும் ஆவிக்குரிய நிலைமையும் வீழ்ச்சியடைந்த காலத்தில் தீர்க்கதரிசன ஊழியத்திற்கென அழைக்கப்பட்ட அவன் தேவனுடைய நியாயத்தீர்ப்பை மக்களுக்கென எடுத்துரைத்தான். மக்களுக்கு அவனது உதவி அதிகமாக தேவைப்பட்ட வேளையில் தவிர்க்க முடியாத தாமதத்தினை அவன் எதிர்நோக்க வேண்டியிருந்தது. தேவன், நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு (1.இராஜா.17:3) எனக் கூறினார். அப்போது அவனது தனிமைக்கும் ஆபத்து வந்தது. அவனுக்கு அன்றாடம் உதவி வந்த நீரோடை வறண்டுபோயிற்று. அதன் பின்பு புறஜாதியாரின் நடுவே சாறிபாத் ஊரில் தங்க நேரிட்டது. அமைதியான சில ஆண்டுகளுக்குப் பின்பு தேவனுடைய வேளை வந்தது. கேரீத்திலும், சாறிபாத்திலும் அடைந்த அந்த அனுபவங்கள்தான் அவனைக் கர்மேல் பர்வதத்தில் பரலோகத்தின் அக்கினியை இறங்கச் செய்யும்படியாகவும், தாகமுள்ள பூமியின்மேல் பலத்த மழையைப் பொழியும்படியாகவும், அவனை ஜெபிக்கும்படி ஊக்கமளித்தது. தாமதம் ஏற்படுவதால் தேவன் நம்முடைய ஊழியர்களை மறந்துவிடுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. அவர்களை அவர் தாமதத்தின்மூலம், உறுதிப்படுத்தி ஊக்கமூட்டுகிறார்.

பவுல் தடைகளால் தேவ சித்தத்தைக் கற்றுக்கொண்டார். தமஸ்குவில் தடைப்பட்டார். அனனியாவால் தொடப்பட்டு, ஆவியால் நிரப்பப்பட்டார். தைரியமாக ஜெபாலயங்களில் இயேசுவைப் பிரசங்கித்தார். அரேபியாவின் பாலைவனத்தில் தாமதம் நேரிட்டது. அங்கு உலக சுவிசேஷ ஊழியத்திற்கென தேவசித்தத்தை அறிந்தார். தாமதத்தினால் நாம் போதிக்கப்படுகிறோம். ஆயத்தமாக்கப்படுகிறோம். நேரத்தை வீணாக்காமல் சேமிக்கிறோம். தைரியத்துடனும், வல்லமையுடனும், அடியெடுத்து வைக்கப் பொறுமை தேவை.