June

யூன் 20

யூன் 20

பர்சிலா…. மெத்தைகளையும் கலங்களையும்…. கோதுமையையும், வாற்கோதுமையையும்,… தேனையையும், வெண்ணையும்….. தாவீதுக்குக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும்…. கொண்டுவந்தார்கள் (2.சாமு.17:27-29).

நண்பர்கள் தேவையா? பர்சிலாவைப் போன்றவர்களைத் தேடுங்கள். வேதப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் பர்சிலாதான். அவனைப்பற்றி வேதாகமத்தில் அதிகமாகக் கூறப்படாவிடினும், அவனைப் பற்றிய செய்தி ஊக்கமளிக்கக் கூடியதாகவும், மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. யோர்தானுக்கு கிழக்கேயுள்ள மேய்ச்சல் நிலமான கீலேயாத்தில் அவன் பெரிய பணக்காரனாகவும், மேய்ப்பனாகவும் இருந்தான் என்பது தெளிவு. இராஜா வுக்கும் அதிகம் தேவையான வேளையில் அவன் வருகிறான். எருசலேமுக்கு வரும்படி அவனை இராஜா அழைத்தபோது, இராஜா, இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்ய வேண்டியது என்ன? (19:36) எனக் கூறி விடைபெற்றுச் சென்றுவிடுகிறான்.

சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகித்தவன் பர்சிலா. அப்சலோம் அரியணையேறுவதற்கென முயன்று பெருங்குழப்பம் விளைவித்த வேளையில் தாவீது பதவிக்கு வரமுடியாமற்போயிருந்தால் அவனுக்கு உதவி செய்த அத்தனைபேருடைய உயிருக்கும் ஆபத்து வருமல்லவா? பர்சிலாவும்கூட மந்திரி அகித்தோப்பேல் போன்று தாவீதை விட்டு ஏன் விலகிச் செல்லாமல் இருந்தான்? பர்சிலா அப்படிப்பட்டவனல்ல! விசுவாசமும், வீரமும் உள்ளவன். ஆபத்துக்களைக் கண்டு பயப்படான். தாவீது அவனது நண்பன். தாவீது மிகுந்த இக்கட்டில் சிக்கித் தவித்தான். அப்சலோம் தன் கலகத்தில் வெற்றி பெற்றால் பர்சிலாவும் தாவீதுடன் சாகவேண்டிய நிலைமையும் ஏற்படலாம்.

கிறிஸ்துவின் சிலுவைக்கென பாடுபட்டு, துன்பப்படும் மக்களுக்கு நாமும் பர்சிலாவைப்போன்று உதவ வேண்டும். பர்சிலா வெட்கப்படாமல், வெளியரங்கமாக, உற்சாகமாக, ஊக்கத்துடன் தான் தாவீதின் நண்பன் எனத் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டினான்.

நாமும் பிறருடைய தேவைகளை உணர்ந்து ஆபத்தில் கைகொடுப்போம்! பிறருக்கு இனிமையைக் கொடுப்போம்!