June

யூன் 13

யூன் 13

….. தேவன் உங்களோடே இருப்பார். அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் (ஆதி.48:21).

ஜீவனுள்ள தேவனிடத்து விசுவாமாயிருப்பதுதான் தலை சிறந்த பாக்கியம். முற்பிதாக்களில் ஒருவனாகிய யாக்கோபு தன் முன்னோர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு என்பவர்கள்மூலம் தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பதைக் கற்றுக்கொண்டான். ஆகவே அவன் தன் மரணப்படுக்கையில் இருக்கும்போது இப்படிப்பட்ட சிலாக்கியத்தைப் பற்றித் தன் பன்னிரண்டு மகன்களுக்கும் தெரிவிக்கிறான். மரணவாயிலிலிருக்கும் அவன் நெடுங்காலம் வாழ்ந்து, பூரண ஆயுளில் மரிக்கப்போகிறான். இவ்வுலகில் அவன் வாழ்ந்த காலமெல்லாம் உன்னதமான தேவன் கைவிடாத சகாயர் என்பதைக் கண்டுகொண்டவன். தேவன் அவனைத் துன்பங்களாலும், மிகுந்த இக்கட்டுகளாலும் சோதித்தார். இவை யாவற்றிலும் யாக்கோபு தேவனுடைய வழிநடத்துதலையும், அவரது பிரசன்னத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்தான். தேவனோடிருந்த அவன் வாழ்வில் மிகப் பெரிய சிக்கலான வேளை வந்தது. பெனியேலில் அவன் சர்வ வல்லவரை முகமுகமாயச் சந்தித்தான். அதற்குப் பின்பு அவன் வாழ்வு முற்றிலும் மாறிப் போயிற்று.

எகிப்தில் சில ஆண்டுகளைக் கழித்த யாக்கோபு மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் யோசேப்பையும், தன் மகன்களையும் அழைத்து தேவன் கைவிடமாட்டார், விட்டுவிலகமாட்டார் என்று வலியுறுத்தி தைரியமளிக்க விரும்பினான். தன் மூதாதையான ஆபிரகாமுக்கு தேவன் வாக்களித்த தேசத்தில் அவர்கள் இல்லாமல் , எகிப்து நாட்டில் பரதேசிகளாய் இருக்கின்றனர். ஆயினும் தேவன் அவர்களைத் தம் பிதாக்களின் தேசத்திற்குக் கொண்டு செல்வார் என்று அவன் நம்பிக்கையூட்டினான்.

2.கொரிந்தியர் 4:18; காணப்படுகிறவவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் எனக் காண்கிறோம். இம்மைக்குரிய சொத்துக்களை நம்பி பிள்ளைகளுக்கு வைத்துப்போவதைவிட மரணபரியந்தம் நம்மை நடத்தும் தேவனைப் பற்றிக்கொள்ளும் பாக்கியத்தை எடுத்துரைப்பது எவ்வளவு நல்லது! சொத்தோ, சுகமோ நிலைப்பதில்லை. பெரும் புகழும் தொடராது. அகவே யாக்கோபைக் கைவிடாத கர்த்தர், ஆபிரகாமின் தேவன் உண்டென எடுத்துரைத்து அவரிடம் நெருங்கிய தொடர்புகொள்ள அவர்களுக்குப் போதிக்கவேண்டும்.

நாம் மரித்தாலும் தேவன் நம் பிள்ளைகளுடன் இருப்பார்.