June

யூன் 12

யூன் 12

கர்த்தர்தாமே….. உன்னோடே இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் (உபா.31:8).

ஓர் இளம் விசுவாசி வளர்ச்சியடைவதற்கென தேவன் கிருபையாக அனுபவமுள்ள ஒருவரை உதவி செய்யவும், ஆலோசனை கூறவும் ஏற்படுத்தி வைக்கிறார் என்பதை வேதாகமத்தில் பல இடங்களில் காண்கிறோம். ரூத்துக்கென ஒரு நகோமி, எலிசாவிற்கென ஒரு எலியா, யோசுவாவிற்கென ஒரு மோசே, தீமோத்தேயுவுக்கென ஒரு பவுல் என்று தேவன் ஏற்படுத்தியிருந்தார். கைவிடாமல் காக்கும் தேவனில் பூரண விசுவாசம் வைக்கும்படியாக அனுபவத்தின் குரல் ஆலோசனை கூறி, அனுபவமற்றவர்களை ஊக்குவித்து வழிநடத்தும்.

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் (யாத்.33:14) என்று வாக்களித்த தேவன் எவ்வளவு அதிசயமாய் தன்னை, இஸ்ரவேல் ஜனங்கள் அடிக்கடி முறுமுறுத்த வேளையிலும் வனாந்தரத்தில் வழி நடத்தினாரென்றும், அவிசுவாசம், முரட்டாட்டம், குறைகூறுதல் இவைகளில் ஊறிப்போன ஜனங்களுக்கும் தேவன் அற்புதங்களை நடத்தி எப்படி காத்தார் என்பதையும் மோசே நன்கு கற்றுக்கொண்டார். இப்படிப்பட்ட அனுபவத்தினைப் பெற்ற தாவீது சங்கீதம் 90ல் தேவன் தலைமுறை தலைமுறையாக அடைக்கலமானவர் என்று எடுத்துரைக்கிறார்.

மோசே, இப்பொழுது ஜனங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை யோசுவாவிடம் ஒப்புவிக்கிறார். அப்பொழுது யோசுவாவிடம் எப்பொழுதும் வழிநடத்தக்கூடிய தேவன் ஒருவர் உண்டென்பதை நினைத்துக்கொள்ளும்படி ஆலோசனை கூறுகிறார். நாமும்கூட இந்த வாக்குத்தத்த்தைச் சற்று ஆராய்வோம். கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர். ஆகவே, அவரது நீங்காத பிரசன்னம் நம்மோடிருக்கும். அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. ஆகவே அவரது உதவி நமக்குண்டு. அவர் உன்னைக் கைவிடுவதுமில்லை. அவரது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் நமக்குண்டு என்பது எவ்வளவு உறுதி!

ஆகவே, யோசுவாவபை;போன்று நாமும் பயப்படாமலும், கலங்காமலும் இருப்போமாக.

ஆண்டவர் நம்மைக் கைவிடமாட்டார்!