June

யூன் 1

யூன் 1

….. பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே…. (யோசு.1:9).

சொல்வது எளிது. செய்வது கடினம். எல்லாமே அப்படியல்ல. சில காரியங்களைச் சொல்லுவதுபோன்று செய்து முடிக்க முடியும். ஏனெனில் அது சொல்லப்படும் காரியத்தின் நிச்சயத்தைப் பொறுத்தது. உண்மையுள்ள தேவன் நம்முடைய பிள்ளைகள் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை அறிந்திருந்த மோசே, பயப்படாதிருக்கும்படி யோசுவாவிற்கு ஆலோசனை கூறியிருந்தான் (உபா.31:8). உண்மையான போர்க்களத்தில் குதிக்கும் இச்சமயத்தில்தான் யோசுவாவிற்கு வெற்றியின் நிச்சயமும், ஊக்கமும் தேவைப்பட்டது. இவற்றை அவன் சர்வ வல்லவரிடமிருந்து பெற்றுக்கொண்டான்.

நீங்கள் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து…. போங்கள்… உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்… ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன்…. பலங்கொண்டு திடமனதாயிரு (யோசு.1:2-6).

இப்படிப்பட்ட சவாலை ஏற்பதற்கு பயமற்ற ஆவியும், உண்மையுள்ள தன்மையும் தேவை. புதிய வெற்றிகளைப் பெறுவதற்கு புதுப்பிக்கப்பட்ட தைரியம் தேவை. அறியப்படாத ஆபத்தின் நடுவே ஊழியம் செய்வதற்கென கைவிடாத, கலக்கமற்ற தைரியம் அவசியம். நிச்சயமற்ற வேளையில் வெற்றியைக் குறித்த நிச்சயமும், எதிர்ப்பின் நடுவே தைரியமும். இன்னல்கள் நடுவே இனிய வளமும் தேவை. அதை அவர் வாக்களித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற நீ (1) பலங்கொண்டு திடமனதாயிருக்கவேண்டும் (2) தேவனுடைய வார்த்தைகளை இரவும் பகலும் தியானிக்கவேண்டும் (3) திகையாமல் பலங்காமல் நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்பதை மறவாதே. கலங்காதே! பயப்படாதே! அவரது வாக்குத்தத்தங்களைப் பிடித்துக்கொண்டு முன்னேறிச் செல். அப்பொழுது அவைகள் உன் வாழ்வில் உண்மையாயிருப்பதைக் காணமுடியும்.