July

யூலை 27

யூலை 27

அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.112:1).

நமக்கு அன்பானவர்களைப்பற்றி நாம் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறோம். இரட்சகர் இயேசுவண்டை கெட்டுப்போன நம்முடைய பிள்ளைகளைக் கொண்டுவர வேண்டும், அவர்களும் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வரவேண்டும் என்று தங்கள் பிள்ளைகளைக் குறித்து அக்கறை எடுத்துக்கொண்டு இரவும், பகலும் ஜெபிக்கும் பெற்றோர் பலரை நாம் நம் மத்தியில் காண்கிறோம்.

இப்படிப்பட்ட பாரத்தோடு இருக்கும் உள்ளங்களுக்கு வேதாகமத்தில் மிக அருமையான ஆறுதலான வசனம் ஒன்றுண்டென்றால் அது இதுதான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்.16:31). காகம் கரையும்போது கவனித்துக் கேட்கிறவர், தரையில் விழும் அடைக்கலான் குருவிக்கென கரிசனை கொள்ளுகிறவர் உன்னைக் குறித்தும், உன்னுடைய அருமையானவர்களைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பாரோ?

நேரங்கெட்ட நேரத்தில் வரும் தொலைபேசி மணியின் அழைப்பு, கதவருகே கிடக்கும் திறக்கப்படாத கடிதம், திடீரென வரும் தந்திச் செய்தி போன்றவை நமக்கு அவர்களைப்பற்றிய திகிலை ஏற்படுத்தி, கரிசனையுடன், இப்பொழுது என்ன நடந்தது? என்னமோ, ஏதோ என்று பயப்படத் தோன்றும். கெட்டச் செய்திகளைக் குறித்து கவலைப்படாதே என்று இனிமையான தேவனுடைய எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தைப் பெற்றவர்கள் மட்டுமே கூறமுடியும். ஏனெனில் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இவைகள் யாவும் நமக்கு நேரிடுகிறதினால்த்தான் நாம் தேவனுடைய சுவிசேஷத்தைப் பிறருக்கு அறிவிக்க முடிகிறது.

ஒரு கவிஞர் எழுதியுள்ளார், பரிசுத்தவான்களே அவருக்குப் பயப்படுங்கள். அப்பொழுது நீங்கள் எவருக்கும், எதற்கும் பயப்படத் தேவையில்லை.