July

யூலை 26

யூலை 26

…. எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா (1.சாமு.22:8).

இவைகள் ஓர் இராஜாவின் வார்த்தைகள். இதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ராஜரீகம்பண்ணும் அவன் தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொள்கிறான். இது சவுல் ராஜாவின் பரிதாப நிலையைத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆரம்பத்தில் நல்லவனாக இருந்த அவன் சோதனையில் தாக்குப் பிடிக்க முடியாமற் போய்விட்டான். அவன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த சில ஆண்டுகளுக்குப் பின்பே அவனுக்குச் சோதனை வந்தது. அதாவது இஸ்ரவேலரின் விரோதிகளான அமலேக்கியரை மடங்கடிக்க வேண்டும் என்று அவனுக்குக் கட்டளையிடப்பட்டது (1.சாமு.15:1-3). அவனுக்குத் தெளிவாக கட்டளையிடப்பட்டது (வச.3). ஆனால் அவனோ அக்கட்டளையை முழுமையும் நிறைவேற்றாமல் ஒரு பாதியை மட்டும் செய்தான். சவுலும், ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல் தரமானவைகளையும்… நலமான எல்லாவற்றையும் அழித்துப்போட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும், உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான் (வச.9). சோதனை வந்தது. சவுல் விழுந்துபோனான்.

ஜனங்களிலிருந்து அவனைத் தெரிந்தெடுத்து, இராஜ்யத்தையும் அவனுக்கு கொடுத்த ஆண்டவர் அவன் கீழ்ப்படிதலைச் சோதித்தார். சவுல் குறைவுள்ளவனாகவே காணப்பட்டான். நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டேன். ஆனால் ஜனங்களோ கேட்கவில்லை என்று சாக்கப்போக்குக் கூறினான். இவை உண்மையுள்ள இராஜா சொல்லக்கூடிய வார்த்தைகள் அல்ல. உன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக ஒழுங்கீனமானவற்றைக் கூறுவதும், செய்வதும், உனக்கு இழிவாகும். அதனால் நீ கெட்டுப்போவாய். நீ உள்ளதைப் பேசுவது உன்னை உயர்த்தும். உன்னை முழுமையானவனாகவும், பயனுள்ளவனாகவும் காட்டும். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு உன்னை முழுமையாக ஒப்புவித்து வாழவேண்டும். ஏனெனில், அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார் (பிலி.2:7-9). நம்முடைய சுயத்தைச் சார்ந்து வாழுவதைத் தவிர்ப்போம். அவரது சிலுவையை மறுக்காமல் சுமப்போம்!