July

யூலை 12

யூலை 12

என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? (நெகே.6:11).

எதிர்பாராதவிதமாக ஆபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது. நெகேமியாவிற்கு ஆபத்து நேரிட்டது. அவன் அதைச் சமாளித்தான். தேவனுடைய ஊழியம் பலப்படுவதைக் காணச் சகிக்காத விரோதிகள் பலர் அவனுக்கு தொடர்ந்து தொல்லை தந்தனர். நெகேமியா அவர்களுக்குப் பகைவனானான். பெயர் பெற்ற ஊழியனாக இருந்தாலும், மறைந்திருந்து ஊழியம் செய்பவனாக இருந்தாலும், தேவனுக்கு ஊழியம் செய்யும் எவரும் இப்படிப்பட்ட அபாயங்களைச் சந்திக்க வேண்டியது அவசியம்.

நெகேமியாவிற்கு விரோதமாக சிலர் சதியாலோசனை செய்தனர் (நெகே.6:1-4). எருசலேமுக்கு வெளியே அவனது விரோதிகள் யாவுரும் கூடி அவனை அழைக்கத் திட்டமிட்டனர். அவனுடைய நண்பர்கள் நெகேமியாவைச் சந்தேகிக்கும்படி செய்யவேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டத்தின் நோக்கம். நம்முடைய விரோதிகளும் இப்படித்தான் நம்மைப்பற்றி பேசுவார்கள். நம்முடைய மனமாறுதலைப்பற்றி பேசும்படி அழைப்பாhகள். அப்பொழுது நாம் போய் நம்மைப்பற்றி எடுத்துரைத்து, நம்முடைய வாஞ்சைகளையும் தெரியப்படுத்தி, அவர்களையும் நம் வழிக்குக் கொண்டுவர விரும்புவது சகஜம். ஆயினும் அவர்கள் மனம் மாறவே மாட்டார்கள். அவர்களுக்கு விளக்கம் தேவையானால் நம்மிடத்தில் அவர்களே வருவார்கள். ஆனால் நம்மை அவர்கள் அழைப்பார்களாயின், நம்மை மனம் மாறச் செய்து, இழிவுபடுத்தவே திட்டமிட்டுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

சதியாலோசனையினை அறிந்த நெகேமியா மனம் தளராமல் தொடர்ந்து தேவன் தனக்களித்த வேலையினைச் செய்தான். அவன் அலங்கத்தைக் கட்டும் வேலைக்காகத்தான் அழைக்கப்பட்டானேயன்றி அவர்களோடு விவாதிக்க அல்ல. அதனால் அவன், நான் பெரிய வேலையைச் செய்கிறேன். நான் வரக்கூடாது. நான் அந்த வேலையை விட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப் போவானேன்? என்று சொல்லியனுப்பினான்.

வேலையைச் செய்! வீணாகப் பேசாதே!