July

யூலை 4

யூலை 4

ஆலயத்தில் பண்டகசாலைகளை… அவர்கள்… ஆயத்தப்படுத்தின பின்பு, அவைகளிலே காணிக்கைகளை…. உண்மையாய் எடுத்து வைத்தார்கள் (2.நாளா.31:11-12).

இந்த வார்த்தை உண்மையுள்ளது என்று ஆரம்பித்த பவுல், ஆவியானவரால் ஏவப்பட்டு, தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் (தீத்து 3:8) என்று எழுதியுள்ளார். தேவனுக்கென தன் பொருளைக் கொடுக்கும் உக்கிராணத்துவ தன்மை கிறிஸ்தவ நற்கிரியைகள் யாவற்றிலும் மேலானது எனலாம். கிறிஸ்தவன் தன் பணத்தையும், பொருள்களையும் செலவிடுவதைக்கொண்டு அவன் தேவனுக்குக் கொடுப்பதைப்பற்றிக் கூறியிருப்பதைக் காணலாம். இதனால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு தேவைகள் அதிகம் என்று பொருள் கொள்ளமுடியாது. தேவனுடைய ஊழியத்திற்கும், பூமியில் நம் உதவியினை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கும் கொடுப்பது எவ்வளவு நல்லது!

குறைந்தபட்சம் நமது தசம பாகங்களையாவது நாம் கொடுக்கவேண்டும். தசம பாகங்களையெல்லாம் நாம் கொண்டு வரவேண்டும் (மல்.3:10). நாம் தேவனுக்கென கொடுக்க விரும்புவதைக் காலந்தவறாமல், வரவுக்குத்தக்கதாக தேவன் நமக்கு அளித்த நன்மைகளின்படி (1.கொரி.16:1-2) கொடுக்கவேண்டும். தசமபாகங்கள் மாத்திரமல்ல (வரவில் பத்தில் ஒரு பங்கு மட்டுமல்ல) நம் காணிக்கைகளையும் மனமகிழ்ச்சியோடு செலுத்த வேண்டும். ஏனெனில் உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

தேவனுக்கு ஒழுங்காக் கொடுக்கிறதினால் ஏழ்மை நிலைக்கு வந்தவர்கள் யாராகிலும் உண்டா? வேதாகமம் கூறுகிறது. வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு. அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு (நீதி.11:24). எசேக்கியா ராஜாவின் காலத்தில் தேவனுடைய மக்கள் தசம பாகங்களையும், காணிக்கைகளையும் உண்மையாகக் கொண்டு வந்தனர். அவற்றை தேவனுடைய ஊழியர் தங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொண்டதுபோக, கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் திரட்சியான அம்பாரம் மீந்திருந்ததாம்! தேவனுக்குக் கொடுத்து ஆசீர்வாதம் பெறுவோம்.