July

யூலை 2

யூலை 2

…. நீங்கள் பயப்படாதிருங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன் (மத்.28:5).

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, அநேக ஆபத்துக்களைச் சந்தித்து அனுபவப்பட்ட ரோமப்போர்ச் சேவகர்கள் பயந்து நடுங்கி மயங்கி விழுந்தனர். சுய நினைவிற்கு வந்தவுடனே அவர்கள் தாங்கள் காவல் காக்க வேண்டிய கடமையை விட்டு ஓடினர். அந்தக் காவற் சேவகர் கூட்டம் முழுவதும் பயப்படும்படியாக ஒரே ஒரு தேவதூதன்தான் இருந்தான். கவலையீனமாயும், கிறிஸ்துவை அறியாதவர்களாயும் உள்ள மக்கள் தங்கள் சொந்த கண்களால் தேவதூதனைக் காணும்போது திகிலடைவது இயல்பு. இவ்வுலகின் ஜனத்திரள் நிறைந்த நாற்சந்தியில் நியாயந்தீர்க்கும்படியாக ஒரு தேவதூதன் தோன்றுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது எண்ணற்ற மக்கள் பயந்து நடுங்குவர் என்பது உறுதி.

பலசாலிகளான சேவகர் திகைப்புற்ற வேளையில், பலவீனமான உள்ளம் கொண்ட ஸ்தீரிகள் பயமின்றி இருந்தனர். ஏனெனில், பயப்படாதிருங்கள் என்று கூறும் பரலோகத்தின் தைரியமூட்டும் வார்த்தைகளைக் கேட்டிருந்தனர். இயேசு கிறிஸ்து பிறந்த அதே இரவில் பெத்லகேமின் வயல்வெளியில் தங்கியிருந்த மேய்ப்பர்களுக்கும் ஒரு தேவதூதன் அன்று இதே வார்த்தைகளைத்தான் கூறினான். இன்று இவ்வார்த்தைகள் அவரது கல்லறையினிடத்திற்கு வந்த பெண்களுக்கும் தைரியமளிக்கும் பொருட்டு கூறப்பட்டது. விசுவாசிக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்குள் இன்றும் பயப்படவேண்டாம் என்று கூறப்படுகிறது.

இயற்கையின் மூலமாய் நமக்குப் பெரும்பாலான கவலைகளும் பயங்களும் தோன்றுகின்றன. இயற்கையினாலோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவோ பயங்கள் தோன்றினாலும் கிறிஸ்தவன் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் அவன் இம்மையிலும், மறுமையிலும் தேவனுடைய பிள்ளையாக இருப்பவன். அவன் வியாதியைக் குறித்தும், மரணத்தைக் குறித்தும் கவலைப்படவேண்டாம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் கல்லறையண்டை வந்த பெண்களைப்போன்று உயிர்த்தெழுந்த இரட்சகருக்கு ஊழியம் செய்கிறவன். ஆகவே கிறிஸ்தவனாகிய நீ கலங்காதே! பயப்படாதே!