July

யூலை 1

யூலை 1

கர்த்தருடைய கிருபையோ….. அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது (சங்.103:17).

நாம் நல்ல பலமுடையவர்களாயிருந்தால் அதிக நாட்கள் வாழலாம். வியாதியுள்ளவராயிருப்பின் கொஞ்ச காலம் மட்டுமே வாழுவோம். வாழ்நாள் நீண்டதாயிருப்பினும், குறுகியதாயிருப்பினும் இது நிச்சயமற்ற ஒரு வாழ்க்கை. சீக்கிரமாக கடந்து செல்லக்கூடியது. மனுஷருடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதன் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

ஆனால் தேவனுடைய கிருபை, அவருடைய மன உருக்கம், தம் பிள்ளைகளைக் குறித்த அவருடைய கரிசனை, நம்மீதுள்ள அவரது அன்பு இவைகள் யாவும் மற்றவற்றைப் போன்று ஒழிந்து போகாது. கடந்த காலத்தில் இருந்த அவைகள் தொடர்ந்து நித்திய நித்தியமாக இருக்கும். அவரது மன்னிக்கும் சிந்தைக்கு எல்லையே இல்லை. அவரது நித்திய கிருபைக்கு அளவேயில்லை. இதே சங்கீதத்தில் நாம், அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரியதாயிருக்கிறது எனக் காண்கிறோம். அவரது மன்னிப்பும் மாண்பும் பெரியது. கிருபையோ எல்லயைற்றது. இப்படிப்பட்ட நம்பிக்கையில் நம் இருதயம் ஸ்திரப்படட்டும்.

இந்தக் குறுகிய வாழ்நாளில் நாம் அவருக்கென உண்மையுள்ளவர்களாயிருப்போம். இதைத்தான் அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ஆனால் அவரது கிருபையோ நம்மேலும், நமது பிள்ளைகள்மேலும் நித்திய நித்திய காலமாயிருக்கிறது என்பது உறுதி.