January

ஐனவரி 14

ஆபிரகாமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்” (ஆதி.15:1)

தன்னிடம் கேடகமும், பலனுமில்லாத நிலையினை ஆபிராம் கண்டான். அவனுடைய எதிரிகள் அநேகர். அவர்கள் கொடியர். கானான் நாட்டின் வட பகுதியிலுள்ள இராஜாக்கள் தென் பகுதியின் மன்னர்களுக்கு விரோதமாகச் சதி செய்தனர். இறுதியில் வெற்றிவாகை சூடி, ஆபிரகாமின் சகோதரன் லோத்தையும் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். லோத்தை விடுவிக்க ஆபிராம் எதிர்த்துப் போரிடவேண்டியிருந்தது.

நாம் தேவனுக்கும், அயலானுக்கும் உண்மையாக நடந்து கொள்ளும்போது, நமக்கு ஆத்திரத்தைத் தூண்டும் காரியங்கள் ஏற்பட்டு, பழிவாங்கும் எண்ணம் ஏற்படுவதுண்டு. அந்த வேளையில் நாம், ‘நான் உனக்குக் கேடகமாயிருக்கிறேன்” என்று நமக்கும் மேலாக ஒருவர் கூறமாட்டாரா என்று ஏக்கத்துடன் எதிர்ப்பார்ப்பதுண்டு.

ஆபிராம் பிரதிபலனையும் ஆதாயத்தையும் எதிர்பார்த்து போரிடவில்லை. அதனால்தான் தேவனற்ற அவர்களுக்குமுன் ‘ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும், பாதரட்சையின் வாரையாகிலும்…… எடுத்துக்கொள்ளேன்” (ஆதி.14:22) எனக் கூறினான்.

அவர் நாமத்தினிமித்தம் நாம் துன்பப்படுகிறோம். சர்வத்தையும் அறிந்த தேவன் இதைக் காணதவர்போல் இருக்கிறாரா? அல்லது தம் பிள்ளைகளைப் பாரபட்சத்துடன் நடத்துகிறாரா? இல்லை! ‘தேவனாகிய கர்த்தர் சூரியனுக்கு கேடகமுமானவர். கர்த்தர் கிருபையும், மகிமையையும் அருளுவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” (சங்.84:11) எனக் கூறுவது உண்மையன்றோ!

ஆகவே நாம் மனிதனுக்குப் பயப்பட வேண்டியதில்லை. உண்மையுள்ள தேவனை நம்பி அவரைச் சார்ந்திருக்க வேண்டும். அவரில் சார்ந்திருக்கத் தவறாதே!